முஸ்லிம் காங்கிரஸூக்குள் ஏற்பட்டுவரும் பிளவுகளின் சூத்திரதாரி யார்...!?

எம்.எஸ்.டீன் -

அண்மைக் காலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்குள் ஏற்பட்டு வரும் பிளவு காரணமாக கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் தொடக்கம் அரசியல் பிரமுகர்கள் வரை கவலையடைந்துள்ளனர்.

கட்சியின் முதுகெலும்பாகக் கருதப்படும் அம்பாரை மாவட்டத்திலுள்ள மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உரிய இடம் கொடுக்காது கட்சித் தலைமை செயற்படுவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
கட்சியின் செயலாளர் நாயகமும், சுகாதார, சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹஸனலி, சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பைஸல் காசீம், எச்.எம்.ஹரீஸ் ஆகியோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக மூவரினதும் ஆதரவாளர்கள் கடுப்பில் இருக்கின்றனர்.

அண்மையில் நிந்தவூர் பிரதேச சபைக்கான புதிய கட்டடிடத் தொகுதி திறப்பு விழாவுக்குப் பிரதம அதிதியாகத் தலைவர் ஹக்கீம் வருகை தந்திருந்தார். கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் உட்பட மற்றும் சில மாகாண சபை உறுப்பினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதேச சபையின் முன்னாள் தலைவர் தாஹிர் தலைமையில் விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றன.
ஆனால், தமது சொந்த ஊரில் திறந்து வைக்கப்பட்ட பிரதேச சபைக் கட்டிடத் திறப்பு விழாவில் கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸனலிக்கும் பைசல் காசீம் எம்.பிக்கும் உரிய இடம் வழங்கப்படாமை குறித்து பாரிய மனச்சுமை,கவலை.
பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் இரு எம்.பிமார்களுக்கிடையே அதிகாரப் போட்டி மையம் கொண்டிருப்பதைத் தலைவர் உட்பட மு.கா.வட்டாரமே நன்கு அறியும்.
பிரச்சினைகள் கருத்து முரண்பாடுகள் எங்குதான் இல்லை. இவ்வாறான நிலைமைகளை சீர்படுத்துவதும், உறவுப் பாலம் அமைப்பதும் தலைமையின் கடமை.ஆனால் தலைமை எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் புதுமை.நிந்தவூர் நிலைமை முக்கோணப் போடடியாக உள்ள நிலையில் -
அதே காலப்பகுதியில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.ஹரீஸ் அவர்களின் நிதி ஒதுக்கீட்;டில் நிர்மாணிக்கப்பட்டிருந்த (புயவந றுயல) நுழைவாயில் திறப்பு விழாவுக்கு ஹரீஸ் எம்.பி. கலந்து கொள்ளவில்லை. இதற்கும் தலைவர் ஹக்கீம் தான் பிரதம அதிதி.

ஆக மொத்தம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து சந்தோஷமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் திட்டமிட்ட முறையில் உரிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத வகையில் எப்படித் திறப்பு விழாக்களை ஏற்பாடு செய்வது.

பிரச்சினைகள், முரண்பாடுகள் இருந்தாலும் எல்லோரையும் சமாளித்து திறப்பு விழாக்களுக்கு அழைத்து வரவேண்டிய தலைவர் தான் மட்டுமே போதும் மற்றவர்கள் தேவையில்லை என்று தன்னளவில் நினைத்துக் கொண்டாலும் பாதிப்புக்குள்ளாகும் எம்.பிக்களின் ஆதரவாளர்களது உள்ளம் குமுறுவதைத் தலைவர் அறியமாட்டார் போலும்.

மஹிந்த ராஜபக்ஷக்களின் ஆட்சி அதிகாரமும், பொதுபலசேன போன்ற இனவதா கடும் போக்காளர்களும் நாட்டிலுள்ள முஸ்லிம் கிராமங்களைத் தேர்ந்தெடுத்து முஸ்லிம்களின் உயிர்களையும் உடமைகளையும் காவு கொண்ட சம்பவங்களால் உணர்வு பூர்வமாக ஒன்றுபட்ட முஸ்லிம்கள் மஹிந்தவுக்கும் அடிப்படைவாத அமைப்புக்களுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுந்ததன் விளைவாக வீழ்ச்சி கண்டிருந்த மு.காவின் செல்வாக்கு எழுச்சி கண்டது.

எழுச்சி கொண்டு வீறு கொண்ட முஸ்லிம் சமூகம் ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றுபட்டுச் செயற்பட்டதன் விளைவாக ராஜபக்ஷக்களின் ஆட்டம் முடிவுக்கு வந்து மைத்திரியின் ஆட்டம் தொடங்கியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களின் ஏகோபித்த கருத்துக்களும், வாக்களிப்பும் முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கை உயர்த்தியதன் காரணமாக தலைவருக்குச் செங்கம்பளம் விரிக்கப்பட்டது.

முஸ்லிம்கள் அழுத்கமையிலும் பேருவளையிலும் சிந்திய இரத்தத்தில் துவைத்து எடுக்கப்பட்டதுதான் அவர் நடந்து திரியும் அமைச்சுச் செங்கம்பளமாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் முடிவடைந்த மஹிந்த யுகத்தை வைத்து எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் அதனை மக்கள் முன் செலுத்தலாம் என்று ஹக்கீம் கனவு காணக் கூடாது.

இப்போது மக்கள் மிகத் தெளிவாக இருக்கின்றார்கள்.நாட்டில் நல்லாட்சி நடைபெறுகின்றது.வெளிப்படைத் தன்மை காணப்படுகின்றது.பிரதமரை தகாத வார்த்தைகளால் ஏசக்கூடிய பாராளுமன்றம் உருவாகியுள்ளது. ஊடக சுதந்திரம் மேலோங்கி நிற்கின்றது.

இந்த நிலைமைகளில் புலிப் பீதியையோ கிறிஸ் பூதத்தையோ, வெள்ளை வேன் கடத்தல்களையோ இனி எதையுமே ஹக்கீம் பிரசார யுக்தியாகக் கொள்ள முடியாது.

கடந்த 15 வருடங்களாக தலைமைப் பதவியிலிருக்கும் ஹக்கீம் அவர்களின் ஏனோதானோ என்ற போக்கினால் பலர் கட்சியை விட்டுப் பிரிந்து சென்ள்ளனர். சுpலர் பதவிக்காகவும் பணத்திற்காகவும் சென்றதாகத் தலைவரின் தரப்பிலிருந்து பிரிந்தவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டாலும் தலைவர் மடடும் ஒசத்தியா என்ன? சந்திரிக்கா, ரணில் மஹிந்த, மைத்திரி என மூன்று ஜனாதிபதிக்கும், ஐ.தே.கட்சியின் பிரதமருக்குக் கீழும் அமைச்சராகவும் ஆட்சியின் பங்காளராகவம் பணியாற்றி இருப்பதை யார்தான் மறந்து விடப்போகின்றார்கள்.

ஐ.தே.கவின் சாரதியாக ரணில் இருக்கும் வரை அதில் மு.காங்கிரஸ் ஏறாது என்று முன்னாள் தலைவர் கூறியதன் பின்பு கூட அந்த பஸ்ஸில் ஹக்கீம் பயணம் செய்துள்ளார்.

மேலும் எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் ஐ.தே.க. மு.காங்கிரஸ் கூட்டு ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே ஐ.தே.கவுடன் கூட்டு வைத்ததன் காரணமாக வழங்கப்பட்ட போனஸ் எம்.பி பதவிகளை எடுத்துக் கொண்டு கட்சியைக் காப்பாற்றுகின்றேன் என்று கூறிக் கொண்டு கடைசியில் 18வது திருத்தத்துக்கும் கை உயர்த்தி 19வது திருத்தத்தில் பாவமன்னிப்புத் தேடிக்கொண்டவர்.

கட்சிக்காகப் பாடுபட்டவர்கள் சொத்துக்களையும் சுகங்களையும் இழந்தவர்கள், வழக்குகளுக்காகக் கோடு ஏறியவர்களையெல்லாம் மறந்து தன் இஷ்டத்துக்குச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபின் மறைவையடுத்து கட்சி முக்கியஸ்தர்களிடையே அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியின் பொது பெரும்பாலானவர்கள் மூத்த போராளிகள் எனப்பலரும் ஹக்கீம் அவர்களையே பிரேரித்தனர்.

மர்ஹூம் மருதூர்க்கனி, பேஃரியல், ஹக்கீம் இவர்களுக்கிடையே நடைபெற்ற தலைமைத்துவப் போட்டியில் கட்சித் தலைமையகமான தாருஸ் ஸலாத்தின் சுவர்கள் மீது தப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்ட நிலையில் ஹக்கிம் இணைத் தலைவர்களில் ஒருவரானார். மற்றவர் பேஃரியல். ஹக்கீம் தலைவரான அன்றிலிருந்து கட்சிக்குள் மாற்று அணி உருவாக்கம் ஆரம்பமானது.

பேஃரியல் யூ.எல்.எம்.மொஹிடீன், மருதூர்க்கனி, விமலவீர திஸ்ஸநாயக்க (இவர் தேசிய ஐக்கிய முன்னணியின் சார்பாக கதிரை சின்னத்தில் போட்டியிட்டு 4வது எம்.பியாகத் தெரிவானவர்) போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களுடன் 15 வருட காலத்தில் ஒவ்வொருத்தராகக் கட்சியிலிருந்து கழற்றப்பட்டுக் கொண்டிருந்தனர். இவ்வாறு காலத்துக்குக் காலம் தலைவர் ஹக்கீமுடைய தலைமைத்துவத்தை வெறுத்து அல்லது வேறு காரணங்களுக்காக வெளியேறிய போராளிகளின் பட்டியல் மிக நீளமானது.அதில் குறிப்பாக அதாஉல்லாஹ், றிஷாட், ஹிஸ்புல்லாஹ்,அமீர் அலி அபூபக்கர், இல்யாஸ், அஸீஸ், அன்வர் இஸ்மாயில் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிப்பிடலாம். 

இது போக இன்னும் எத்தனையோ மாகாண சபை உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாகத் தோழர்களும் தலைவரின் பிரிவினைக் கொள்கைகளால் கட்சியை விட்டுப் பிரிந்து சென்றவர் பட்டியலில் இடம் பிடித்தவர்கள்.

தேசிய அரசியலில் ஒரு தனித்துவக் கட்சியின் தலைவர் விட்டுக் கொடுப்பு, வளைந்து கொடுத்தல் என்ற அரசியல் நாகரீக நிலைகளில் இருந்து ஏனைய அரசியல் தலைவர்களுடனும், ஆட்சியாளர்களுடனும் சுமுகமான கௌரவமான நெறிமுறைகளைக் கையாள வேண்டும்.
ஆனால் ஹக்கீமிடம் அவ்வாறான விடயங்கள் காணப்பட்டனவா என்பதற்கு பின்வரும் விடயங்களை நாம் மீட்டிப் பார்க்க முடியும்.

சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் வர்த்தக வாணிபத்துறை அமைச்சராக இருந்த இவரை பதவியிலிருந்து விலக்கியதாக அறிவிக்கும் கடிதம் பாராளுமன்ற கேற்வாயிலில் வைத்து வழங்கப்பட்டது.
ரணிலின் நட்பு தேர்தல் ஒப்பந்தம் காரணமாக கிடைகப் பெற்ற போனஸ் ஆசனங்களுடன் அவருக்கு துரோகம் செய்தது. குறித்த போனஸ் ஆசனங்களைப் பெற்ற ஆசாமிகளும் ஹக்கீமிற்கு துரோகம் இழைத்தது.

மஹிந்தவுடன் நல்லுறவைப் பேணாத காரணத்தினாலும, ஹக்கீமின் செயற்பாடுகள் அவரை நம்பிக்கை கொள்ளச் செய்ய முடியாமற் போனமையினாலும் பின்தள்ளப்பட்ட நிலை. இப்போது மைத்திரி யுகம்.எதிர்காலம் தான் தீர்ப்புச் சொல்லும்;.

ஹக்கீம் எப்படித் தனது சொந்தக் கட்சிக்காறர்களிடையே பிளவை உண்டு பண்ணி பிரிவினைகளைத் தோற்றுவித்தது போன்று ஆட்சித் தலைவர்களால் இவரும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கப்பட்ட நிலைமை அவரோடு சமகாலத்தில் அரசியல் களத்தில் உள்ளவர்களுக்க நன்கு புரியும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற விருட்சம் வேரூன்றியிரக்கின்ற முஸ்லிம் கிராமங்களிலும் ஊருக்கு ஊர் போட்டி அரசியல் தன்மையை ஏற்படுத்தி காலத்துக்குக் காலம் தலைமைத்துவ ஆசனத்தைச் சூடேற்றிக் கொண்டிருக்கும் ஹக்கீமின் சூழலுக்கேற்ற கோஷங்களையும், ஒப்பாரிகளையும் முஸ்லிம் மக்கள் இன்னும் நம்பத்தான் வேண்டுமா என்பதனை எதிர்வரும் பொதுத் தேர்தல் களம் பறை சாற்றும்.

இவரது 15 வருட தலைமைப் பதவிக்காலத்தில் முஸ்லிம் சமூகத்துக்காகச் செய்த ஏதாவது ஒரு சாதனை முடியுமானால் சொல்லிக் காட்டட்டும்.
மக்களால் தோற்கடிக்கப்பட்டு துரத்தப்பட்ட, கட்சி தொண்டர்களை அடையாளம் காணத் தெரியாதகளையும் மாற்றுக் கட்சியிலிருந்து வந்த காலாவதியான பண்டங்களையும் வைத்துக் கொண்டு இன்னும் எத்தனை நாட்களுக்கு ஹக்கீம் தனது அரசியல் பயணத்தைத் தொடரப் போகின்றார் என்பதே முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் எதிர்பார்ப்பாகும்.

குறிப்பு :- 08.06.2015ல்; கல்முனைத் தொகுதியில் ஹரீஸூடன் இணைந்து தலைவர் ஒரிரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் பனிப்போர் மையம் கொண்டிருப்பதை இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் எனது மற்றுமொரு கருத்துக் குறிப்பில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். (இன்ஷா அல்லாஹ்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -