நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டதன் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மிரிஹானையில் உள்ள வீட்டிலிருந்து புறப்பட்டார்.
சிரிலிய சவிய என்ற பெயரில் மக்கள் வங்கியின் மருதானை சுதுவெல்ல கிளையில் பேணப்பட்ட கணக்குக்கு பல கிளைகளிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ளது. இந்த கணக்கு சந்தேகத்துக்கு இடமான கணக்காகும் என்று செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே வாக்குமூலம் அளிப்பதற்காக அவர், புறப்பட்டார்.
குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவுக்கு சமூகமளிக்காத அவர், சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து அதிகாரிகளிடம் வாக்குமூலமளித்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களை கவனத்தில் கொண்டே அவர், நிதி குற்ற விசாரணை பிரிவுக்கு சமூகமளிக்கவில்லை என்று தெரியவருகின்றது.
காலை 9.30 மணியளவில் ஆரம்பமான வங்கி பணமாற்றம் தொடர்பிலான விசாரணை சுமார் 2 மணித்தியாலம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிய வருகிறது.(மடவளை)