ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மாநாட்டில் பொதுச் செயலாளாரின் உரை!

புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்-
னநாயகக் கட்சி மாநாட்டில் பொதுச் செயலாளர் புவி கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் சமூகத்தின் இருப்பையும், முஸ்லிம்களின் உரிமைகளையும் கேள்விக்குறியாக்கி வருகின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் சுயரூபத்தை எதிர்வரும் காலங்களில் எமது ஜனநாயகக் கட்சி மக்கள் மத்தியில் வெளிப்படுத்தும் என அக்கட்சியின் காத்தான்குடி மண்டல பொதுச் செயலாளர் புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் தெரிவித்தார்.

'ஃபீல்ட் மார்ஷல்' சரத் பொன்சேகாவின் தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல மத்திய குழுவின் முதலாவது மாநாடு, கடந்த 08ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடி ப.நோ.கூ. சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி மண்டல மத்திய குழுவின் தலைவரான முன்னாள் விமானப்படை அதிகாரி எம்.ஏ.எம். மிப்ஷி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேற்கண்டவாறு கூறிய புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:

கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்ட எமது கட்சியின் 


தலைவருக்கு 41,73,185 வாக்குகள் கிடைத்ததாக தேர்தல் திணைக்களம் அறிவித்திருந்தது. எனினும் தனக்குக் கிடைத்த 18 இலட்சம் வாக்குகளை மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் முறைகேடாகக் கொள்ளையிட்டுக் கொண்டே தன்னைத் தோற்கடித்ததாக எமது தலைவர் சரத் பொன்சேகா ஊடகங்கள் மூலம் தெரிவித்திருந்தார். அவரது இக்குற்றச்சாட்டு தொடர்பில் அன்றைய தேர்தல் ஆணையாளர் மறுப்புரை எதுவும் அளிக்கவில்லை.

அத்தேர்தல் தோல்வியை அடுத்து இரண்டரை வருடங்கள் பல அபாண்டமான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். என்றாலும் சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கத் திராணியில்லாத மகிந்த ராஜபக்ஷ இறுதியில் பொதுமன்னிப்பு எனும் போர்வையில் அவரை விடுதலை செய்ய வேண்டிய அவசியம் நேரிட்டது.

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தேர்தல்களில் வாக்குகளைக் கொள்ளையடித்து ஆட்சியைக் கைப்பற்றும் வழக்கத்தைக் கொண்டிருந்ததற்கு 2012ல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலும் ஒரு வலுவான ஆதாரமாகும். அத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் த.தே.கூட்டமைப்புக்குக் கிடைத்த வாக்குகளில் 4000 வாக்குகளைக் களவெடுத்துக் கொண்டதன் மூலமே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிழக்கு மாகாண ஆட்சியைக் கைப்பற்றியது என்பதை பல தடவைகள் நான் ஊடகங்கள் வாயிலாக அறிக்கையிட்டுள்ளேன். எனினும் எனது கூற்றுக்கு எதிராக மாவட்டத் தேர்தல் அதிகாரியோ, மஹிந்த அரசாங்கமோ எந்தவிதமான எதிர் நடவடிக்கைகளையும் என்மீது எடுக்கவில்லை. 

மாற்றுக்கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குகளைக் கொள்ளையிட்ட மகிந்த கம்பனியினரால் இந்த 4000 வாக்குக் களவு குறித்து விசாரணைகளை மேற்கொள்ள ஒரு போதும் முடியாது.

எமது கட்சியின் பலம் எமது கட்சி ஆரம்பிக்கப்பட்டு நான்கு வருடங்களே ஆகின்றன. கட்சியின் தலைவர் இரண்டரை வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையிலும் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது மைத்திரிபால சிறிசேனாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் ஏழு இலட்சம் வாக்குகளை தமது கட்சி வழங்கியிருப்பதாக கட்சியின் தலைவர் பகிரங்கமாக விடுத்த அறிக்கைக்கு இதுவரை யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. 

அதேநேரம் அறுபதாண்டுக்கும் மேற்பட்ட வயதுடைய ஐ.தே.கட்சி 28 இலட்சம் வாக்குகளையே மைத்திரிக்கு பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் எமது கட்சியின் தலைவர் அறிக்கையிட்டுள்ளார்.

அதாவது, ஐ.தே.கட்சி வழங்கிய 28 இலட்சம் வாக்குகளில் ¼ பங்கு வாக்கினை எமது கட்சி மைத்திரிக்கு வழங்கி அவரை ஜனாதிபதியாக்கியுள்ளது என்கிற உண்மையை ஐ.தே.கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். இந்நாட்டில் மகிந்த கம்பனியின் காட்டாட்சியை ஒழித்து புதிய நல்லாட்சியைக் கொண்டு வந்ததில் எமது கட்சிக்கும் அதிக பங்கு இருக்கின்றது. 

இந்நிலையில் ஐ.தே.கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ தமது அமைச்சரவையில் கள்வர்களையும், மோசடிக்காரர்களையும் பாதிக்கு மேல் வைத்துக் கொண்டு நல்லாட்சி பற்றி பேசுவது கேவலமானது. ஐ.தே.கட்சியினால் ஒரு போதும் கள்வர்களும், திருடர்களும் இல்லாத நல்லாட்சியை இந்நாட்டில் கொண்டு வர முடியாது. முஸ்லிம் மக்கள் மத்தியில் றவூப் ஹக்கீம், ரிசாத் பதியுத்தீன் போன்றவர்கள் எப்படிப்பட்ட மொத்த அரசியல் வியாபாரிகள் என்பது பிரபல்யமான விடயமாகும்.

தென்கிழக்கு பல்கலை வளாகம், முஸ்லிம்களின் காணிகள் மீதான ஐ.தே.கட்சியின் ஆக்கிரமிப்புக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்கு ஆதரவாகக் களமிறங்கிய எதிரணிக் கூட்டணியில் ஐ.தே.கட்சியும் ஒரு கட்சியாகும். முஸ்லிம் மக்களினதும், தமிழ் மக்களினதும் அமோக வாக்குகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 'அன்னம்' சின்னத்திற்கே அளிக்கப்பட்டன. எனினும் இப்போது கிழக்கு மாகாண முஸ்லிம்களின் இருப்பையும், அவர்களின் உரிமைகளையும் கேள்விக்குட்படுத்தும் வகையில் கிழக்கு மாகாண சபையின் ஐ.தே.கட்சி உறுப்பினர் தயா கமகே, மட்டக்களப்புத் தொகுதி ஐ.தே.க. அமைப்பாளர் மோகன் போன்றவர்கள் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தென்கழக்குப் பல்கலைக்கழக செனட் சபையில் இனவாதி என வர்ணிக்கப்படுகின்ற மகிந்த ராஜபக்ஷவின் காலத்திலும் கூட மாறுபாடடையாமல் இருந்து வந்த முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மையை இன்று தயா கமகே இல்லாமலாக்கியுள்ளார். இதனால் முஸ்லிம் சமூகத்திற்கு கிடைக்க வேண்டியுள்ள உப வேந்தர் பதவியும்கூட இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. 

ஒரு சமூகத்தின் வரலாற்றையும், இருப்பையும் தக்க வைத்துப் பேசும் தளம் பல்கலைக்கழகமேயாகும். முதலமைச்சர் விடயத்தில் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் முதலமைச்சர் பற்றிப் பேசும் முஸ்லிம் அரசியல் கட்சியகளின் தலைவர்களும், எம்.பிக்களும் ஐ.தே.கட்சித் தலைவரின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பிடித்துக் கொண்டு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் நியமனம் மற்றும் செனட் சபைப் பெரும்பான்மை பற்றிப் 'பேரம் பேசாமல்' மௌனித்துக்கிடப்பது 

மாபெரும் சமூகத் துரோகமாகும். ஐ.தே.கட்சியின் தயாகமகேவுக்குப் பயந்து எல்லோரும் மௌனித்துக்கிடக்கின்றனரா? என்று நான் கேட்க விரும்புகின்றேன்.

அதேபோல் மட்டக்களப்பில் ஐ.தே.கட்சியின் அமைப்பாளர் மோகன் என்பவர் முஸ்லிம்களின் காணிகளைக் களேபரமாகக் கையகப்படுத்த தமது அடியாட்களை ஏவி வருகிறார். இவரது நடவடிக்கையால் ஏறாவூர், காத்தான்குடி முஸ்லிம் சமூகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரணில் விக்கிரமசிங்ஹவின் அமைச்சரவையை அலங்கரித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் எந்தவிதமான அக்கறையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. 

இவ்வாறான முஸ்லிம் மக்களின் காணிகள் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை ஊக்குவித்து தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று 'பொதுபல சேனாவுக்கு' ஒப்பான அவரது 'திராவிட சேனா' எனும் இனவாத அமைப்பின் மூலம் நாடாளுமன்றத்திற்குச் செல்வதற்கே ஐ.தே.கட்சியின் அமைப்பாளர் மோகன் மட்டக்களப்பில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

ஐ.தே.க.யில் இடம்பிடிக்கத் துடிக்கும் முஸ்லிம் சுயநலவாத அரசியல்வாதிகள்இந்த நிலையில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் முஸ்லிம்கள் சிலர் இன்னமும் ஐ.தே.கட்சிக்கும், அக்கட்சியைச் சேர்ந்த தயா கமகே, தியேட்டர் மோகன் போன்றவர்களுக்கும் மாலை அணிவித்து ஐ.தே.கட்சிப் பட்டியலில் இடம்பிடித்து தமது அரசியல் இருப்புக்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக முயற்சித்து வருகின்றனர். இந்த அற்பத்தனமான கைக்கூலி அரசியலைக் கைவிட்டு இவர்கள் முஸ்லிம் சமூகத்தின் கௌரவத்தை சர்வதேச ரீதியில் வெளிப்படுத்தியிருக்கும் எமது கட்சித் தலைவர் 'ஃபீல்ட் மார்ஷல்' சரத் பொன்சேகா அவர்களின் தலைமையில் ஒன்றிணைய முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன்.

அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய நாடுகளின் உயர் இராணுவப் பாதுகாப்புக் கூட்டத்தில் இலங்கை முஸ்லிம்கள் ஒரு போதும் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிப்பவர்களல்ல. ஆதரிக்கவும் மாட்டார்கள் என எமது கட்சித் தலைவர் பிரகடனப்படுத்தியதன் மூலம் இலங்கை முஸ்லிம்கள்மீது மஹிந்த ராஜபக்ஷ கம்பனியினர் வளர்த்த கடாக்களான பொதுபல சேனா அமைப்பினர் முன்வைத்து வந்த 'இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதம்' என்ற விடயம் முற்றுப் பெற்றிருக்கின்றது. 

இப்போது இந்திய உளவுப்பிரிவான 'றோ'வின் புலனாய்வு அதிகாரிகளும் இலங்கை முஸ்லிம்களைப்பற்றி இவ்வாறான வெறும் ஊக அறிக்கைகளை வெளியிடுவதில்லை. இந்தளவுக்கு இலங்கை முஸ்லிம்களின் கௌரவத்தையும், அவர்களின் தேசப்பற்றையும் வலுப்படுத்திய எமது கட்சித் தலைவரைப்பற்றி ஐ.தே.கட்சியில் தொங்கிக் கொண்டிருக்கும் அமைச்சர்களும், எதிர்காலத்தில் தொங்கிக்கொள்ள முயற்சிப்பவர்களும் தமது சமூக அரசியல் நிலைப்பாடுகள் பற்றி மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.

ஐ.தே.கட்சியின் அரசியல் கொள்கையில் வடக்கு கிழக்குத் தமிழ் மக்களுக்கு அறவே நம்பிக்கை இல்லை. அதேபோல் முஸ்லிம்களுக்கும் நம்பிக்கை கிடையாது. காலத்திற்குக் காலம் முஸ்லிம் கட்சிகளில் சவாரி விட்டே ஐ.தே.கட்சியானது வடக்கு கிழக்கில் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை அள்ளிக்கொள்கின்றது. இதற்குப் பிரதியுபகாரமாக இரண்டு அல்லது மூன்று போனஸ் எம்.பிக்களை அக்கட்சி முஸ்லிம் கட்சிகளுக்குத் தாரை வார்க்கின்றது. 

இதனால் முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றிக் குரல் எழுப்ப முடியாதவாறு இந்த முஸ்லிம் கட்சிகளின் குரல் வளைகள் அடைக்கப்படுகின்றன. இந்த நிலைமையிலிருந்து முஸ்லிம் சமூகம் விடுவிக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் நாம் ஐ.தே. கட்சியின் முகமூடிகளைக் கிழித்து எமது பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுப்போம் - என்றார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்புத் தொகுதிக்கான இணை அமைப்பாளர்களான முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் திருமதி சிவகீத்தா பிரபாகரன், முன்னாள் காத்தான்குடி ப.நோ.கூ.சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எம். ஷாபி, கல்குடா தொகுதி அமைப்பாளர் எம். புகாரி மற்றும் ஏறாவூர் மத்திய குழு பிரதிநிதிகள், காத்தான்குடி மத்திய குழு நிர்வாகிகள், அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -