கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ், வைத்தியசாலையின் இருதயவியல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வுக்கு ஏற்பட்ட சிறிய நெஞ்சு வலி காரணமாகவே அவர் வைத்தியசாலையின் இதயவியல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பசில் ராஜபக்ஷ்வை மே மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் மே மாதம் 7 ஆம் திகதி உத்தரவிட்டது.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக, திவிநெகும திட்ட பிரிவு பணிப்பாளர் நாயகம் ஆர்.ஆர்.கே.ரணவக்க மற்றும் திவிநெகும திட்டத்தின் பிராந்திய பணிப்பாளர் பந்துல திலகசிறி ஆகியோரும் மே மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பசில் ராஜபக்ஷ் மற்றும் ஏனைய மூன்று உயர் அதிகாரிகளும் ஏப்ரல் 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(ந)