2009 மே 18ம் திகதி இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் 110 பேரின் நிலை என்னவென்று இலங்கை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்க மனித உரிமை நிபுணர் யஸ்மின் சூக்காவின் தலைமையில் இயங்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் இந்த கேள்வியை எழுப்பியுள்ளது.
´இலங்கை படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த வேடுவக்கல் பாலத்திற்கு அருகில் வைத்து புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் சரணடைந்துள்ளனர். அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் தலைமையில் இவர்களின் அனேகர் சரணடைந்துள்ளனர். இவ்வாறு சரணடைந்த புலிகள் இயக்கத் தலைவர்களின் பெயர்களை இராணுவத்தில் யார் பட்டியலிட்டது? இவர்கள் இராணுவத்தால் பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டதாக சாட்சிகள் உள்ளன. இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் மற்றும் அருட்தந்தை ஆகியோர் இதுவரை காண்பிக்கப்படவில்லை´ என உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
´கடத்தப்பட்டோர், காணாமல் போனோர் குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தவறியுள்ளனர். காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு இது தொடர்பில் ஆராய, கேள்வி எழுப்ப உரிமை இருக்கிறது. அதனை மறுக்க முடியாது. கோட்பாட்டு அடிப்படையில் தண்டனை வழங்குவதில் இருந்து தப்பிக்க முடியாது´ என்று கூறப்பட்டுள்ளது.
´காணாமல் போதல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையில் கையெழுத்திடுமாறு நாம் இலங்கையை அழைக்கிறோம். காணாமல் போதல் தொடர்பான செயற்குழுவை இலங்கைக்கு அனுமதிக்க எடுத்துள்ள நடவடிக்கையை நாம் வரவேற்கிறோம். இந்த குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம். காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கவும் விசாரணை நடத்தவும் அனுமதிப்பதோடு அவர்களுக்கு பதிலடி கொடுக்கக்கூடாது என கேட்டுக் கொள்கிறோம்´ என்று உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.(ந)