முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களித்த பொத்துவில் பிரதேச மக்கள் தோல்வி அடைந்துள்ளனர்!

சலீம் றமீஸ்-
பொத்துவில் பிரதேச மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியின் கீழ் ஒற்றுமைப்பட்டு பொத்துவில் பிரதேசத்திற்கான நிரந்தர அரசியல் அதிகாரத்தை பெற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என பொத்துவில் பசறிச்சேனை கிராமத்தில் நடை பெற்ற தேசிய காங்கிரஸின் கிளைக் குழுவின் புனரைமப்புக் கூட்டம் தேசிய காங்கிரஸின் பசறிச்சேனை அமைப்பாளர் ஏ.பி.ஸதக்கத்துல்லா தலைமையில் நடை பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

பொத்துவில் பிரதேசத்திற்கு என நிரந்தரமான அரசியல் அதிகாரம் எப்போதும் இருக்க வேண்டும். அப்போதுதான் இப்பிரதேசத்தில் வாழும் நமது மக்களின் நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். தேசிய காங்கிரஸை பலப்படுத்தி பொத்துவில் பிரதேச மக்கள் ஒற்றுமையாக செயற்பட்டால் அதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. 

தேசிய காங்கிரஸை ஆதரித்து பொத்துவில் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியின் உரித்தான மக்களாக மாறுவதன் ஊடாகவே இப்பிராந்தியத்தின் சுதந்திரமான, நிரந்தரமான அரசியல் பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்த விடயத்தில் எதிர்காலத்தில் பொத்துவில் சமூகம் எவ்வாறு செயற்பட போகின்றது என்பதைப் பொறுத்திருந்தே நாம் பார்க்க வேண்டியுள்ளது. தொடர்ந்தும் பொத்துவில் மக்கள் எங்களை ஏமாற்றும் கட்சிக்குத் தான் நாங்கள் வாக்களிக்கப் போகின்றோம் என்ற நிலைப்பாட்டை எடுப்பார்களானால் பொத்துவில் பிரதேச மக்களின் எதிர்காலத்தினை நமது மக்களே தீர்மானிக்க வேண்டிய நிலை உருவாகும்.

பொத்துவில் பிரதேச மக்கள் தேசிய காங்கிரஸூக்கு கனிசமான வாக்குகளை தேர்தல் காலங்களில் அளித்து ஆதரவு வழங்கி உள்ளனர். பொத்துவில் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் பொத்துவில் பிரதேசத்திற்கு புரியாத பல வரலாற்று பணிகளை தேசிய காங்கிரஸ் புரிந்துள்ளது. எதிர்காலத்தில் பொத்துவில் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதன் ஊடாக நமது மக்கள் வெற்றி அடையும் நிலமை உருவாகும். 

இதுவரை நடைபெற்றுள்ள ஒவ்வொரு தேர்தல்களிலும் பொத்துவில் பிரதேச மக்கள் முஸ்லிம் காங்கிரஸூக்கு வாக்களித்ததால் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் வாக்களித்த பொத்துவில் பிரதேச மக்கள் தோல்வி அடைந்துள்ளனர். இதுதான் யதார்த்தமாகும். தேசிய காங்கிரஸூக்கு ஆதரவு வழங்குவதனால் தேசிய காங்கிரஸ் வெற்றி பெறுவதுடன் நமது பொத்துவில் பிரதேச மக்களும் வெற்றி பெறுவார்கள்.

நீண்ட காலமாக பொத்துவில் பிரதேசத்தில் தேசிய காங்கிரஸ் கிளைகள் புனரமைக்கப்படாமல் இருந்தன. தேசிய காங்கிரஸின் தலைவர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லா(பா.உ) அவர்களின் வழிகாட்டலின் கீழ் பொத்துவில் பிரதேசத்தில் உள்ள கிராம சேவகர் பிரிவுகள் தோறும் தேசிய காங்கிரஸின் கிளைகள் புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தேசிய காங்கிரஸ் கட்சியின் சிந்தனைகளையும், கருத்துக்களையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரையும் செயற்பட்டது போன்றல்லாது கட்சியின் கிளைகள் புனரமைப்பு செய்யப்பட்டு, கட்சிக்கான கிளைகள், மத்திய குழுக்கள், கிளைக்குழு அமைப்பாளர்கள், மகளிர் அமைப்புக்கள், இளைஞர் அமைப்புக்கள் என்பன இயங்கும் எனக் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் தேசிய காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளர் யு.எல்.உவைஸ், பொத்துவில் பிரதேச தேசிய காங்கிரஸின் பசறிச்சேனை அமைப்பாளர் ஏ.பி.ஸதக்கத்துல்லா, பொத்துவில் பிரதேச தேசிய காங்கிரஸின் அமைப்பாளர் ஏ.பதுர்கான் (பிரதேச சபை உறுப்பினர்), கொள்கை பரப்புச் செயலாளர்கள், கிராம சேவகர் பிரிவுகளுக்கான அமைப்பாளர்கள், கொள்கை பரப்புச் செயலாளர்கள், இளைஞர் அமைப்பாளர்கள், மகளிர் அமைப்பாளர்கள், பொத்துவில் பிரதேச தேசிய காங்கிரஸின் ஆலோசனை சபையின் உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.(ந)


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -