கொழும்பு நகரினதும், அண்டிய பிரதேசங்களினதும் நிலப்பகுதிகளையும், கால்வாய்களையும், ஏனைய நீர் நிலைகளையும் சுத்தமாக வைத்திருப்பதோடு, நகரை அழகுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு திங்கள்கிழமை (25) பிற்பகல் இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தில் உயரதிகாரிகளுடன் நடைபெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் ஹக்கீம் இதனை தெரிவித்துள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையை முதன்மைப்படுத்தி இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனமும், கொழும்பு, தெகிவளை கல்கிசை, கோட்டே, மாநகர சபைகளும் இந்த பிரதேசங்களில் குப்பை கூழங்களால் அசுத்தப்படுவதை தடுப்பதற்கு கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் தேக்கநிலை காணப்படுவதாக குறை கூறப்படுவதை முற்றாக நிராகரித்து முடியாது எனக் குறிப்பிட்ட அமைச்சர் ஹக்கீம், இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தலையிட்டு அறிவுறுத்தல் வழங்கியதாகவும், அதிகாரிகளின் தரப்பில் ஏற்பட்ட கவனயீனம், மற்றும் அவர்களின் அசிரத்தை காரணமாக அவர்கள் தமது கடமையில் தவறிழைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
கொழும்பிலும், அண்டிய பிரதேசங்களிலும் கால்வாய்கள் உட்பட நீர் நிலைகள் அசுத்தமடைவதற்கு பொலிதீன் உறைகளும், ஏனைய அசேதன பொருட்களும் அவற்றில் வீசியெறியப்படுவது முக்கிய காரணங்களில் ஒன்றெனக் கூறிய அமைச்சர் ஹக்கீம், இவ்வாறான செயல்களை தீவிரமாக கண்காணிப்பதற்கு சுற்றாடலைப் பேணும் பொலீஸாரின் ஈடுபாடும், சுத்தப்படுத்தலை மேற்கொள்ளும் சிவில் பாதுகாப்பு பிரிவினரின் ஒத்துழைப்பும் இன்றியமையாததென்றும் சொன்னார்.
சேவை செய்வதற்காகவே மக்களது ஆணை புதிய அரசாங்கத்திற்கு கிடைத்திருக்கின்றது. ஆகையால் சம்பந்தப்பட்ட அரச ஊழியர்கள் நகரையும், சுற்றாடலையும் சுத்தமாக வைத்திருப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
சில நாட்களுக்குள் சட்டம் மற்றும் ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சர் ஜோன் அமரதுங்க, சம்பந்தப்பட்ட பிரதி பொலீஸ்மா அதிபர் போன்றோருடன் இந்த விடயமாக கலந்துரையாடி சில முடிவுகளை மேற்கொள்ள இருப்பதாகவும் அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறினார்.
இந்த கலந்துரையாடலில் இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.எச்.எம்.சல்மான், பணிப்பாளர் நவீன் அதிகாரி, பொது முகாமையாளர் ஸ்ரீமதி சேனாதீர, பிரதி பொது முகாமையாளர் எஸ்.பீ.முத்துமால, நகர அபிவிருத்தி அதிகார சபையின் செயலாற்றுப் பணிப்பாளர் கிர்ஷான் கருணாரத்ன ஆகியோர் உட்பட உயரதிகாரிகளும், சம்பந்தப்பட்ட ஒவ்வொரு கால்வாய் மற்றும் சதுப்பு நிலப் பிரிவுற்கும் பொறுப்பான அதிகாரிகளும் பங்குபற்றினர்.
டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்
ஊடகச் செயலாளர்
