மியன்மார் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணை!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை மியன்மார் (பர்மா) முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றைக் கொண்டு வரக் கோரியுள்ளது என கட்சியின் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனச்சுத்திகரிப்பு படுகொலைகள் பொதுவாக உலக முஸ்லிம்களையும் குறிப்பாக இலங்கை வாழ் முஸ்லிம்களையும் மிகவும் மனவேதனைக்கு உட்படுத்தியிருக்கும் நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இப்பிரச்சினை தொடர்பில் மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்கையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார். 

இது சர்வதேச பிரச்சினைகளில் ஒன்றாக மாத்திரமன்றி, மியன்மார் (பர்மா) ரோஹிங்கியா மக்களின் மனிதாபிமான, வாழ்வாதார மற்றும் சமயம் சார்ந்த பிரச்சினையாகவும் அணுகப்பட வேண்டுமென்றும், அநீதி இழைக்கப்பட்ட அந்த மக்களை வெறும் பொருளாதார அகதிகளாக மட்டும் நோக்காமல், தமது இருப்பையும், உடைமைகளையும் இழந்த அரசியல் அகதிகளாகவும் பார்க்க வேண்டுமென்றும், அந்த அப்பாவி மக்களின் அனைத்து விதமான உரிமைகளும் மீளவும் வழங்கப் படவேண்டுமென்றும், அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறினார்.

கடந்த காலங்களில் இம்மக்களுக்கு புகலிடம் அளிப்பதற்கு தயக்கம் காட்டிய மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகள் தற்போது மியன்மார் மக்களுக்கு புகலிடம் அளிக்க முன்வந்தமையிட்டு அந்நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த விவகாரம் பற்றி 57 நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பின் மியன்மார் அகதிகளுக்கான பொறுப்பாளரான முன்னாள் மலேசியா அமைச்சருடன் தாம் கலந்துரையாடியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -