சிறுபான்மை கட்சிகளின் சம்மதத்துடன் புதிய தேர்தல் முறையை தயாரித்து சட்ட வரைவு திணைக்களத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக அரசாங்கம் சொல்லும் அதே வேளை தேர்தல் முறை மாற்றம் சம்பந்தமாக சிறுபான்மை கட்சிகள் மத்தியில் தொடர்ந்தும் சந்திப்பு நடைபெறுவதாக சிறு பான்மை கட்சிகள் சொல்வதன் மூலம் அரசாங்கமும், சிறுபான்மை கட்சிகளும் இணைந்து சிறுபான்மை மக்களை ஏமாற்றுகிறார்கள் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெர்வித்தார்.
இன்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற உயர் சபை கூட்டத்தின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது;
புதிய தேர்தல் சட்ட மூலம் தயாரிக்கப்பட்டு விட்டதுடன் அது எதிர் வரும் 13ஆம் திகதி அமைச்சரவையின் அங்கீகாரத்துக்கு வரும் எனவும் பிரதி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதே வேளை தேர்தல் திருத்தம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரசின் தலைமையகத்தில் சிறுபான்மை கட்சிகள் கூட்டம் நடத்துவதாக அக்கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பாடான தகவல்களாக இருக்கின்றன. உண்மையில் அரசாங்கம் சொல்வது போல் புதிய தேர்தல் முறைக்கு சிறுபான்மை கட்சிகளின் அங்கீகாரம் கிடைத்தள்ளதாயின் அச்சட்ட மூலத்தை ஆராயாமலேயே தமது பதவிகளுக்காக சிறுபான்மை கட்சிகள் அதற்கு ஆதரவளித்து விட்டு சிறுபான்மை மக்களை ஏமாற்றுவதற்காக இவ்வாறு கூட்டங்கள் நடாத்தி மக்களை மடையர்களாக்க நினைக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. இதற்கான தெளிவான பதிலை பகிரங்கமாக தரவேண்டியது சிறுபான்மை கட்சிகள் மீதான கடமையாகும்.
சிறுபான்மை மக்கள் பாராளுமன்றத்துக்கு தமது பிரதிநிதிகளை சிறு பான்மை கட்சிகள் மூலம் அனுப்பி வைத்திருப்பது சிறுபான்மை மக்களின் நலனுக்கெதிராக அரசாங்கம் ஏதும் நடவடிக்கை எடுத்தால் அதனை தடுத்து நிறுத்த போராட வேண்டும் என்பதற்காகவே தவிர அவற்றுக்கு பின் கதவால் ஆதரவளித்து விட்டு மக்கள் முன்பாக நடிப்பதற்காக அல்ல என்பதை இந்தக்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே மேற்படி தேர்தல் திருத்த சட்ட மூலம் சிறுபான்மை கட்சிகளின் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட்டு விட்டது என்ற அரசாங்கத்தின் கூற்று உண்மையா என்பதை சிறுபான்மை கட்சிகள் உடனடியாக தெளிவு படுத்த வேண்டும் என உலமா கட்சி வலியுறுத்துகிறது.(ந)
