ந.குகதர்சன்-
தற்போது தென்னிலங்கையிலும் நம்முடைய பிரதேசத்திலும் வந்து கொண்டிருக்கின்ற இந்த அரசியல் காற்றின் வேகம் சில வேளைகளில் வித்தியாசமாக அடித்து விடுகின்ற அச்சம் உள்ளூர் இந்த நாட்டின் மக்களின் வாழ்வைப் பற்றி சிந்திக்கின்ற எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கின்றது என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
வாகரைப் பிரதேசத்தில் இடம்பெற்ற கௌரவிப்பு மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்;
நாம் மிக முக்கியமான ஆறு ஆண்டு காலத்தை தற்போது கடந்து விட்டோம் ஒரு நாடு போரின் பிற்பட்ட காலத்தில் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் சம்மந்தமாக உலக நாடுகள் மிக நுட்பமாக ஆராய்ந்து அதற்கான திட்டங்களையும் கொடுத்து அவற்றுகான நிதிகளையும் கோடி கோடியாகக் கொடுத்திருந்தது. ஆனால் அவை முறையாக நடாத்தப்படவில்லை.
போரின் பின்பு நடக்க வேண்டியது புனர்நிர்மானம் அது கடந்த ஆறு ஆண்டு காலமாக எவ்வாறு இடம்பெற்றது என்று உள்ளங்கை நெல்லிக் கனியாக எமது மக்களுக்குத் தெரியும். அபிவிருத்தி என்பதில் மனமானது பயம், பீதி போன்றவற்றில் இருந்து விடுபட வேண்டும். தற்போதைய ஜனாதிபதி அதுபற்றி பல தடவைகள் சொல்லியிருக்கின்றார். அவர் கலந்து கொள்ளும் கூட்டங்களில் எல்லாம் அவர் அதனை மிகவும் தெளிவாகச் சுட்டிக் காட்டிருக்கின்றார். ஆனால் கடந்த காலங்களில் அவ்வாறான அபிவிருத்தி இடம்பெறவில்லை.
தற்போது இறந்தவர்களை நினைவு கூரும் நாள் என்று மாற்றியமைக்கப்பட்ட எமது முள்ளிவாய்க்கால் நினைவினை இன்னும் அதை இராணுவ வீரர்களுடைய வெற்றி தினமாக கொண்டாடுகின்ற ஒருவர் இருக்கின்ற நாட்டில் அவர் மெல்ல மெல்ல தலையெடுக்க நினைக்கின்ற நேரத்தில் இந்த இடத்திற்கு புதிதாக வந்த ஜனாதிபதி அவர்கள் இந்த விடயத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார் என்றால் அதன் ஜதார்த்தத்தினை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
பாடசாலைகளோ கட்டிடங்களோ பாளங்களோ மட்டும் இந்த நாட்டில் பெரிதாக ஒன்றையும் சாதிக்கப் போவதில்லை உடைந்து நொருங்கி இருக்கின்ற மக்களின் மனங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும். அந்த கைங்கரியம் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போது தென்னிலங்கையிலும் நம்முடைய பிரதேசத்திலும் வந்து கொண்டிருக்கின்ற இந்த அரசியல் காற்றின் வேகம் சிலவேளைகளில் வித்தியாசமாக அடித்து விடுகின்ற அச்சம் உள்ளூர் இந்த நாட்டின் மக்களின் வாழ்வைப் பற்றி சிந்திக்கின்ற எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கின்றது.
எனவே குறிப்பிட்ட இந்த அரசியல் மாற்றம் என்பது தற்போது இருக்கின்ற இந்த அமைதி நிலைமை இன்னும் அதிகரிக்க கூடிய மாற்றமாக இருக்கின்ற விதத்தில் அமைய வேண்டும் என்பதில் நாம் கட்டாயம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
எனவே சில சில விடயங்களை எடுத்துக் கொண்டு அவ்விடயங்களைப் பூதாகாரமாக்கி அவற்றை சந்தர்ப்ப சூழ்நிலை தெரியாமல் நாம் பாவிக்கின்ற போது நாங்கள் உண்மையில் இலக்கு தவறியவர்களக மாறி விடுவோம்.
அண்மையில் எமது பிள்ளை வித்தியாவிற்கு இடம்பெற்ற அவலம் எமது நெஞ்சை அறுத்தெடுக்கும் விடயம் இதற்கு முன்பு பல்வேறு விடயங்கள் எமது தீவுப் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றன. இராணுவத்தினர் எமது பிள்ளைளை கோரமாக கொன்றொழிதிருக்கின்றார்கள்.
அக்காலத்தில் யாரும் மூச்சுவிடவும் முடியாது மூச்சுவிடக் கூடிய சூழ்நிலையும் இல்லை. ஆனால் தற்போது மூச்சுவிடக் கூடிய நிலை ஒருவாறு இருந்தும் இந்த பிள்ளையின் மிகமிகக் கோரமான நிலைக்கு நிலைமையைத் தாங்கி கொள்ள முடியாத கோரத்திற்கு பதில் கிடைத்தே ஆக வேண்டும். இவ்வாறான கோரங்கள் தற்போது மிகைப்படுத்தப் பட்டுவிட்டனவோ உண்மையான பரிகாரம் அவர்களுக்குச் சென்றடைய முடியாத விதத்தில் சில நிகழ்வுகள் நடந்து விட்டனவோ என்று நினைக்கக் கூடிய விதத்தில் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
எனவே இவ்வாறான விடயங்களில் பெரியவர்களாகிய நாம் எமது இளைஞர் யுவதிகளையும் எமது சமுகத்தையும் மிக நிதானமான பாதையில் செலுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம். இவ்வாறு செலுத்திக் கொண்டு சென்று அடுத்துவர இருக்கின்ற தேர்தல் காலத்தில் பலம் மிக்கவர்களாக திகழ வேண்டும்.
இந்தத் தேர்தல்களின் பலாபலனை நாம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தான் கண்ணாரக் கண்டு உளமாற உணர்ந்திருக்கின்றோம். எங்களின் வாக்களிப்பு இந்த நாட்டில் ஏற்பட இருந்த மிகப் பெரிய ஜனநாயக அழிப்பு நிலையை சத்தமின்றி எவ்வாறு மாற்றியமைத்தது என்ற விடயத்தை சிந்தித்து அந்த ஜனநாயகப் பலம் மிகவும் அவதானமாக எந்தப் பக்கத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை சிந்தித்து பாவிக்க வேண்டிய கடமை எமக்கு இருக்கின்றது.
எனவே வருகின்ற தேர்தல்களில் எமது வாக்களிப்பு இப்போது ஏற்பட்டிருப்பது போன்று தேசிய ஐக்கியத்தை நிலைத்திருக்க கூடிய விதத்திலான ஒரு அரசினை அமைப்பதற்கான வாக்களிப்பாக இருக்க வேண்டும்.
இது தென்னகத்து மக்களுக்கு மிகப்பெரிய பிரச்சினை அல்ல. வடக்கு கிழக்கில் வாழ்கின்ற எங்களுக்கு தான் இது மிகவும் முக்கியமானது. என்னவாக இருந்தாலும் தென்னக மக்களுக்கு சிலஅராஜகங்கள் தான் இருக்கும் ஆனால் எம்மைப் பொருத்த மட்டில் அப்படி அல்ல எதிர்வரும் காலத்தில் நாம் சிறந்த அரசியலமைப்பினை ஆக்க வேண்டிய பொறுப்பை வைத்திருக்கின்றோம் அவ்வாறு அது ஆக்கப்பட வேண்டும் என்றால் வடக்கு கிழக்கில் எமக்கு வழங்கப்படுகின்ற ஆணை மூலம் தான் அது வலியுறுத்தப்படும்.
அவ்வாறான ஆணையை நாடு சுதந்திரம் அடைந்தது தொடக்கம் கேட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு அரசியல் இயக்கம் இருக்கும் என்றால் அது முன்பு தமிழரசுக் கட்சி பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணி தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டும் தான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
அவ்வாறான ஒரு அரசியல் தலைமைக்கு நாம் கொடுக்கின்ற பலம் தான் இனி இந்த நாட்டில் உருவாக்கப்படுகின்ற அரசியல் அமைப்பில் எமது நிலையை உறுதியானதாக ஆக்கக் கூடியதாக இருக்கும்.
ஓன்றுபட்ட நாட்டுக்குள்ளே உள்ளக சுய நிர்ணய உரிமையை வலியுறுத்தக் கூடிய ஒரு அரசியல் அமைப்பை நாம் கோரி நிற்கின்றோம். ஆதனை செய்விப்பதற்கு வடக்கு கிழக்கில் இருந்து செல்ல வேண்டிய பிரதிநிதிகள் ஒரு அணியில் இருந்து செல்ல வேண்டிய மிகவும் முக்கியமான கட்டாயம் இருக்கின்றதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எனவே எமது எதிர்காலம் அதிக தூரத்தில் இல்லை அடுத்த அடியை எடுத்து வைக்கின்ற மிகக் குறுகிய தூரத்தில் நாம் இருக்கின்றோம் எனவே அந்த இடத்தில் நின்று நாம் சிந்திக்க வேண்டும்.
எனவே தென்னகத்து மக்கள் இப்போது இருக்கின்ற சமாதானம் நீடிக்கும் நிலையை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் மைத்திரிபால சிறிசேன அவர்களின் கரத்தைப் பலப்படுத்துகின்ற அதேவேளை நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினைப் பலப்படுத்துகின்ற போது தான் எம்மை அனுசரித்துச் செல்கின்ற எமது அபிலாசைகளையும் ஏற்றுக் கொள்ளுகின்ற அரசு ஏற்படும் அவ்வாறு ஏற்படுகின்ற போது தான் நாங்கள் சொல்லியிருக்கின்ற விடயங்களை சாதிப்பது மிகவும் இலகுவாக இருக்கும்.(ந)








