20 வது திருத்தச் சட்ட மூலமும், முஸ்லிம்களின் எதிர்பார்பும்!

எம். எல். பைசால் -காஸிபி-
1978 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசியல் யாப்பு 19 வது தடவை குறிப்பிடப் பட்ட சட்ட திருத்தங்கள் சேர்க்கப்பட்டு தற்போது 20வது திருத்தச் சட்டத்தினை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது..

இவ்வரசியல் யாப்பினை அறிமுகப்படுத்திய ஐ.தே.க அதன் ஆட்சிக் காலத்தில் 16தடவை திருத்தங்களை முன்வைத்து அதில் 15 திருத்தங்களை அமுல்படுத்தி நடைமுறைப்படுத்தியது. இதில் 13.14.15.16 ஆகிய திருத்தங்களில் சிறுபான்மையினரின் நலங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன .

சு.க தலைமையிலான அரசு 17,18 திருத்தங்களை 2001,2010ம் ஆண்டுகளில் முன்வைத்து சட்டமாக்கியது.

17வது திருத்தத்தில் சொல்லப்பட்ட அம்சங்கள் 18வது திருத்தத்தின் மூலம் செயல் இழக்கப்பட்டதுடன் முக்கியமாக ஜனாதிபதி ஒருவர் இரு தடவைக்கு மேல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என்ற சட்ட திருத்தத்தினை அதே சு.க அரசே முன்வைத்திருந்தது.

19 வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் சில அதிகாரங்கள் குறைக்கப்பட்டு மீண்டும் 17 வது திருத்தத்தில் சொல்லப்பட்டவை அமுலுக்கு வரும் வகையில் அதனுடன் இணைந்த பல திருத்தங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதை அறிவோம்.

இந்நிலையில் புதிய அரசு 20வது திருத்தத்தினை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றது.

இன்று இலங்கையில் காணப்படும் பாராளுமன்ற அரசியல் சூழ்நிலை முன் ஒரு போதும் இல்லாத புதிய சம்பிரதாயத்தினையும், புரிந்துணர்வினையும் ஏற்படுத்தி இருக்கின்றது. இவ்வாறான நிலை மீண்டும் ஏற்படுமா? என்பது நடைபெறும் பொதுத் தேர்தலின் பெறுபேறே தீர்மானிக்கும். இதனைப் பயன்படுத்தி தேர்தல் திருத்தம் 1அடங்கிய 20 வது திருத்தத்தினை சட்டமாக்கி நடைமுறைப்படுத்த இரு பெரும் கட்சிகளும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றன.

இதில் சு.க கட்சியினர்தான் அதிகமான ஈடுபாட்டினை வெளிப் படுத்துகின்றனர்.

இருபதாவது திருத்தம் ’’முழுமையாக நடைமுறையில் உள்ள மாவட்டத் தெரிவுக்குப் பதிலாக தொகுதி அடிப்படையான தேர்தலையும், தொகுதிகளின் மீள் நிர்ணயதினையும், உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பையும், மற்றும் இரு தெரிவு முறைமைகளும் உள்ளடங்கிய சில ஏற்பாடுகள் பற்றியும்” சுட்டிக்காட்டப் படுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இத்திருத்தத்தில் சிறுபான்மை சமூகத்தின் நலன்கள், சிறிய கட்சிகளின் இருப்புக்கான ஏற்பாடுகளை உள்வாங்குவதற்கான கருத்துப் பரிமாறல்கள் உரியவர்களால் மு.க தலைவரின் தலைமையில் இடம்பெறுகின்றன.

நடைமுறையில் உள்ள தெரிவு முறைமை சிறுபான்மை சமூகத்தின் ஒற்றுமையினையும் அவர்களை அவர்களின் சமூகம் சார்ந்து ஒரு கொடியின் கீழ் ஒன்றிணைவதற்கான வாயிப்பினையும் பெற்றுத் தருவதோடு அதிக எண்ணிக்கையான பாராளுமன்ற பிரதிநிதிகளை பெறுவதற்கான சந்தர்பத்தினையும் இம்முறைமை கொண்டுள்ளது.

ஆட்சியமைக்கும் போது சிறுபான்மை சமூகத்தினையும் சிறிய கட்சிகளின் தேவையினையும் ஆட்சியாளர்களுக்கு உணர்த்தும் தன்மை மாவட்ட அடிப்படையிலான தெரிவில் காணப்படுவது அச்சமூகங்கள் பெற்றிருக்கும் கௌரவம் என்றே கூறலாம்.

தேர்தல் முறைமை மாற்றலுக்குள்ளாகி பழைய தொகுதி முறைமை ஏற்படுத்தப்படும் போது சிறுபான்மை சமூகத்தின் பாதிப்பு, விளைவு என்பன பற்றி பல தரப்பாலும் சுட்டிக் காட்டப்படுகின்றது.

வட கிழக்கினை மையமாகக் கொண்டு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தமிழ் சமூகம் தொகுதி முறைமையின் கீழ் தனது பிரதிநிதித்துவத்தினை இலகுவில் பெறுவதற்கான வாய்பு உண்டு. வட கிழக்கிற்கு அப்பால் மலையக தமிழ் சமூகம் சார்ந்து அரசியல் முன்னெடுக்கப்படுவதால் குறிப்பிடப்பட்ட சில பிரதிநிதித்துவத்தினைத் தவிர அதிகமான பிரதிநிதிகளை அவர்களால் பெற முடியாத நிலையே காணப்படுகின்றது, அந்த வகையில் மலையக சமூகமும் பாதிப்புக் குள்ளாகின்றது.

இங்கு இரண்டாவது சிறுபான்மை சமூகமாக வாழும் முஸ்லிம்களின் பாதிப்பு வீதம் இரு சமூகத்தினை விடவும் சற்று அதிகம்தான். கிழக்கில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் தொகுதி முறைமையில் உறுதிப் படுத்தப்படும் இருப்பினும் அதிகமான அபேட்சகர்கள் தேர்தலில் குதிக்கும் போது தங்களது பிரதிநிதித்துவம் இழக்கப் படக்கூடிய நிலைமை கிழக்கின் சில இடங்களில் காணப்படுகின்றது. தொகுதி முறைமை தேர்தல் நடைபெற்ற காலங்களை பார்க்கும் போது அதனை அறியலாம்.

கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இருந்து முஸ்லிம் பிரதிநிதித்துவம் தெரிவுக்குள்ளாவதில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிவரும். கொழும்பு மத்தி, பேருவல, ஹரிஸ்பத்துவ, புத்தளம் போன்ற தேர்தல் தொகுதிகளில் தொகுதி முறைமையில் உறுப்பினர்கள் தெரிவு செயப்பட்டாலும் இன்றுள்ள நிலையில் தொகுதி முறைமை அறிமுகப்படுத்தப்படின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இழக்கப்டக்கூடிய சூழலே காணப்படுகின்றது. இன்று பாராளுமன்றத்தில் கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் மக்களால் தெரிவு செயப்பட்ட 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவ்வெண்ணிக்கையில் பாரிய மாற்றம் ஏற்படக் கூடிய சாத்தியப்பாடுகள் உண்டு.

மேலும் முஸ்லிம்களின் அரசியல் தனித்துவ கட்சி மூலம் முன்கொண்டு செல்வதில் பெருந் தடங்கல்கள் வரலாம். தொகுதிகளில் தெரிவுக்குள்ளாகி சிலர் மிக இலகுவில் கட்சி மாறி கட்சிகளை பலவீனப்படுத்துவர். தனித்துவமாக சில உரிமைகளையோ, சலுகைகளையோ அரசியல் ரீதியில் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் பறிக்கப்பட்டுப்போகும். சகோதர இனங்களில் காணப்படும் நல்ல விடயத்துக்காக குரல் கொடுக்கும் சிறிய கட்சிகளிகின் பாராளுமன்றத்தின் குரல் நசுக்கப்பட்டு விடும்.

தற்போதுள்ள முறைமையினை மாற்றி நடைமுறைப் படுத்த இரு பெரும் கட்சிகளும் தனக்கான அரசியல் நகர்வுக்காகவேண்டியே இதனை முன்னெடுகின்றன என்பது மிகத் தெளிவானது.

விகிதாசார தேர்தல் நடைமுறையில் உள்ள இக்காலத்தில் முஸ்லிம் சமூகம் பெறுவதற்கென்றே இருக்கின்ற மாத்தளை, குர்னாகல், புத்தளம், கழுத்துறை போன்ற மாவட்டங்களின் மூலம் இலகுவில் பாராளுமன்ற பிரதிநிதித்துவதினை பெறுவதற்கான சந்தர்ப்பம் இருந்தும் கூட இது வரை அது பெறப்படவில்லை,.

எல்லா அரசியல்வாதிகளும் தான் சார்ந்துள்ள கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள் எண்று அழைப்பவர்களாகவும் சரி காண்பவர்களாகவுமே உள்ளனர். அதற்கான முயற்சிகளில் அரசியல்வாதிகள் இதயசுத்தியுடன் ஈடுபடவும் இல்லை வெற்றி கொள்வதற்கான திட்டங்களை வகுக்கவும் இல்லை இந்நிலையில் தொகுதி முறைமையின் போது எம் அரசியல்வாதிகள் எவ்வாறு செயற்படப் போகின்றார்கள் என்பது தெளிவானது..

இன்றைய நிலையில் தேர்தல் முறைமையினை மாற்றலுக்குள்ளாகியே தீர வேண்டும் என்ற நிலையில் ஆட்சியாளர்கள் இருப்பதனால் ஆட்சியில் முக்கிய பங்காற்றிய சிறுபான்மையினரும் ,சிறிய கட்சிகளும் தன் சமூகம் சார்ந்து பாதிப்பில்லாத நிலைமைக்கு திருத்தத்தினை சட்டமாக்க துணைபுரிவதே முக்கியமாகக் கொள்ளப்பட வேண்டியுள்ளது.

17.18 மற்றும். 19 வது திருத்த சட்டங்களில் மு.க கட்சியின் பங்களிப்பினை மையமாகக் கொண்டு அக்கட்சியின் தலைவரின் தலைமையில் சிறுபான்மை, சிறிய கட்சிகள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆறுதல் அளிக்கின்றது இறுதி முடிவு வெற்றியளிப்பதில் தான் சிறுபான்மை கட்சிகளினதும் குறிப்பாக முஸ்லிம்களின் அரசியல் இருப்பும் தங்கியுள்ளது.

முஸ்லிம் அரசியல் நிலைத்து நிற்பதற்கு விகிதாசார முறைமை மிக உதவியாகவே அமையும். முஸ்லிம்களுக்கான உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்படாத நிலையில் பெரிய கட்சிகளின் எதிர்பார்பு மாத்திரம் பூர்த்தியாக்கப்படின் முஸ்லிம் அரசியல் வரலாற்றில் ஈடு செய்ய முடியாத துரோகமாகவே பார்க்கப்படும்.

ஆட்சிக்குப் பாங்காற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் பங்களிப்பினை இச்சமூகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றதது. சிறந்த ஆட்சி நடைபெறும் இக்கால கட்டதில் சகல சமூகங்களினதும் அபிலாசைகளை அரசு நிறைவேற்றும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் மக்கள் உள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -