சாய்ந்தமருது மக்களின் தாகத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் விளையாடக் கூடாது!

சாய்ந்தமருதுக்கான தனி உள்ளூரட்சி மன்றக் கோரிக்கை தொடர்பில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சருக்கும் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் மரைக்காயர் சபை குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரஊப் ஹக்கீமின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள நிலையில் அது தொடர்பில் சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது.

சாய்ந்தமருது பிரதேசத்திற்கான தனி உள்ளூராட்சி மன்றம் எனும் விடயம் இன்று மக்கள் மத்தியில் மட்டுமல்லாது அரசியல் தலைமைகள் அனைத்தினதும் பேசு பொருளாக மாறியுள்ளது.

சாய்ந்தமருது ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபையின் தலைவர் வை.எம் ஹனீபா தலைமையில் இதற்கான அத்தனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளபட்டு வருகிறது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும். தனி உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை வரலாற்றில் பள்ளிவாசல் தலைமை இதனைப் பொறுப்பேற்று முன்னேடுப்பதானது முக்கிய மைல் கல்லாகும்.

இந்த கோரிக்கையானது சாய்ந்தமருதின் ஒட்டுமொத்த மக்களாலும் முன்வைக்கப்படும் ஒரு கோரிக்கையாகும் என்பதை தேசிய மற்றும் சமூக அரசியல் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதால்தான் அதனை சாய்ந்தமருது ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் தலைமை பொறுப்பேற்று முன்னெடுத்து செல்கிறது என்பது எவருக்கும் சொல்லி விளங்க வைக்கத் தேவையில்லை

அதேவேளை கடந்த பத்து வருடங்களாக இந்த கோரிக்கையை முன்வைத்து பல்வேறு வகையிலும் போராடி வருகின்ற சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் அழைப்பின் பேரில் சாய்ந்தமருதில் உள்ள அனைத்து பொது அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் கூட்டினைக்கப்பட்டு சம்மேளனம் ஒன்று உருவாக்கப்பட்டு இம்முயற்சிக்கு வலு சேர்க்கும் வகையில் பாரிய வேலைத் திட்டம் ஒன்றை முன்னகர்த்தி வருகின்றது.

இதன் முதல்கட்டமாக அண்மையில் சாய்ந்தமருது அனைத்து பொது அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் சம்மேளனம் விசேட மாநாடு ஒன்றை நடாத்தி சில முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை வெற்றி கொள்ளப்பட வேண்டும் என்ற இலக்குடன் இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதாவது பொதுத் தேர்தலுக்கு அறிவிப்புக்கு முன்னதாக தனி உள்ளூராட்சி மன்றம் உருவாக்கப்படா விட்டால் அத்தேர்தலை பகிஷ்கரிப்பது எனவும் அரசியல் தலைமைகளை நிராகரிப்பது எனவும் ஆர்ப்பாட்டம், பேரணி, சத்தியாக்கிரகம், வீதி மறியல், கடையடைப்பு, ஹர்த்தால் உள்ளிட்ட வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுப்பது எனவும் மேற்படி சம்மேளனம் தீர்மானித்துள்ளதுடன் அதற்கான தயார்படுத்தல்களிலும் ஈடுபட்டு வருகின்றது. 

இதற்கு முன்னோடியாக கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஒரு அடையாள- கவனயீர்ப்பு பேரணி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு, இறுதி நேரத்தில் சாய்ந்தமருது ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் எழுத்து மூலம் விடுத்த வேண்டுகோளின் பேரில் அது ஒத்திவைக்கப்பட்டது.

அன்றைய தினமே சாய்ந்தமருது உள்ளூரட்சி மன்றம் தொடர்பில் பள்ளிவாசல் குழுவினர் கொழும்பு சென்று அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினர் என்பதும் அதன்போது இக்கோரிக்கையை நிறைவேற்றித் தருவதற்கு அமைச்சர் ஹக்கீம் இணக்கம் தெரிவித்ததுடன் ஏப்ரல் 22 ஆம் திகதி உள்ளூராட்சி அமைச்சரை சந்திப்பதற்கான ஏற்பாட்டை மேற்கொள்வதாகவும் உறுதியளித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் மூலம் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை அடைந்து கொள்வதற்கான முதற்படியை எட்டி விட்டோம் என்கின்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சாய்ந்தமருது ஊர் சமூகத்தின் எந்த ஒரு தேவை தொடர்பிலும் இப்பிரதேச பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஓரணியில் நின்று போராடிய வரலாறு கிடையாது. இந்நிலையில் இந்த கோரிக்கை எந்த விதத்திலும் தோற்று விடக் கூடாது என இப்பிரதேச மக்கள் அனைவரும் பலத்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்து நிற்கின்றனர்.

சாய்ந்தமருது மக்களை பொருத்தவரை தம்மால் ஊட்டி வளர்க்கபாட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் பெரு விருட்சத்திடம் கோரும் முதல் தடவையான ஒரு ஒட்டுமொத்த கோரிக்கையாகவே இது பார்க்கபடுகிறது 

இந்த விடயம் தொடர்பில் கல்முனை தொகுதி எம்.பி. உட்பட முஸ்லிம் காங்கிரசின் அத்தனை அரிசயல் பிரதிநிதிகளும் ஒருமித்த கருத்துடன் இருப்பது வரவேற்க்கத்தக்க ஒன்றாகும். இந்த ஒருமித்த கருத்து இதய சுத்தியானதா என்கிற கேள்வி ஒருபுறமிருக்க இந்த கோரிக்கை எதிர்வரும் தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் எவ்விதத்திலாவது வெற்றி கொள்ளப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எல்லோர் மனதிலும் ஆழ வேரூன்றியுள்ளது.

சாய்ந்தமருது மக்களை பொருத்தவரை 1988 ஆம் ஆண்டு முதல் இதுகால வரைக்கும் தங்களது பெரும்பான்மை வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சிக்கு வழங்கி அதனை தமது தனிப்பெரும் அரசியல் இயக்கமாக வரிந்து கட்டிக் கொண்டிருக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக மர்ஹூம் அஷ்ரப்பின் மறைவுக்கு பின்னரான 2002 இற்கு பிற்பட்ட காலப்பகுதியில் முஸ்லிம் காங்கிரசின் செல்வாக்கு பல பிரதேசங்களிலும் குறைந்து சென்ற போதிலும் சாய்ந்தமருது மக்கள் மாத்திரம் தங்களது ஆதரவினை இன்றுவரை மு கா.வுக்கு வழங்கி வந்துள்ளனர்.

இதனால் தான் மு கா வுக்கு சாய்ந்தமருது மக்கள் மீதுள்ள தார்மீக கடமை என்ற அடிப்படையிலே இக்கோரிக்கையானது தற்போது தனித்துவமாக மு கா.விடம் முன்வைக்கப்படிருக்கிறது. அது மட்டுமல்லாமல் மு கா.வின் தற்போதைய தலைமையான தேசியத் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு தலைமை அங்கீகாரம் வழங்கிய மண் இந்த சாய்ந்தமருதே என்பதை அவரோ அல்லது கட்சியோ அல்லது கட்சியின் எந்த ஒரு உறுப்பினரோ இலகுவில் மறந்து விட முடியாது.

சாய்ந்தமருது ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக நடைபெற்ற பகிரங்க மேடை ஒன்றிலே இந்த தலைமைக்கான அங்கீகாரம் எவ்வாறான சூழ்நிலையில் வழங்கப்பட்டிருந்தது என்பது இன்றுவரை ஹக்கீமின் வாழ்க்கையில் மறக்க முடியாத மாபெரும் ஒரு வரலாற்று நிகழ்வாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட முடியும்.

அதுமட்டுமல்லாது 2010 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் இணைந்து மு கா வின் மூன்று உறுப்பினர்கள் அதாவது கல்முனை ஹரீஸ், நிந்தவூர் பைசல் காசிம், சம்மாந்துறை மன்சூர் ஆகியோர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில்தான் சாய்ந்தமருதை சேர்ந்த மயோன் முஸ்தபாவும் ஐ.தே.க. வேட்பாளராக போட்டியிடுகின்றார்.

இருந்த போதிலும் இந்த மக்கள் தனது ஊரை சேர்ந்தவர் என கருதி இருந்தால் சாய்ந்தமருது மக்கள் அனைவரும் ஹரீசுக்கு அளிக்கப்பட்டது போல் அல்லது அதை விட கூடுதலாக மயோன் முஸ்தபாவுக்கும் ஒரு விருப்பு வாக்கை அளித்திருக்க வேண்டும். ஆனால் வேறு விதமாகவே முடிவு அமைந்திருந்தது. அதாவது மயோனை சாய்ந்தமருது மக்கள் தமது ஊர் மகன் என்று பாராமல் முஸ்லிம் காங்கிரசின் எதிரியாகவே பார்த்தனர். 

சாய்ந்தமருது மக்கள் தமக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்த மயோன் முஸ்தபாவை விடுத்து வேறு எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிப்பதற்கு நியாயம் இல்லாத போதிலும் மு.கா. எனும் போதை காரணமாக பிரதேச சிந்தனையை உதறித்தள்ளி விட்டு தமது மூன்று விருப்பு வாக்குகளையும் தமக்கு எந்த சேவையையும் செய்யாத வெளி ஊர்களைச் சேர்ந்த ஹரீஸ், பைசல் காசிம், மன்சூர் ஆகியோருக்கே வழங்கியிருந்தனர் என்பது முக்கிய வரலாறாகும். 

தனிப்பட்ட ஊர் நலன்களை புறமொதுக்கி விட்டு மு.கா தலைமையின் எண்ணத்தை அம்மக்கள் பிரதிபலித்தனர். ஒரே சின்னமாக இருந்தும் மு கா. நிறுத்திய வேட்பாளர்களுக்கு மாத்திரம் அம்மக்கள் வாக்களித்தனர். இதன் மூலம் சாய்ந்தமருது மக்கள் ஒன்றை தெளிவாக சொல்லியிருந்தனர். அதாவது எமக்கு மு கா.வும் அதன் தலைமையும் அவசியம் என்பதாகும்.

கல்முனைத் தொகுதியில் மாற்றுக் கட்சிகளை ஆதரிக்காத ஒரே ஒரு ஊர் சாய்ந்தமருது மட்டுமே என்று துணித்து கூற முடியும். ஏனெனில் கடந்த காலங்களில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களின் போது மருதமுனை, கல்முனைக்குடி ஆகிய ஊர்களில் இருந்து அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் சார்பாக உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். 

அதேபோன்று கல்முனை மாநகர சபைத் தேர்தல்களின் போதும் மருதமுனை, கல்முனைக்குடி, நற்பிட்டிமுனை பிரதேசங்களில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றின் மூலம் உறுப்பினர்கள் தெரிவாகி பதவிகளில் இருந்து வருகின்றனர். 

அதேவேளை அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில் போன்ற பிரதேசங்களிலும் மாற்று கட்சிகளின் சார்பில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். 

ஆனால் சாய்ந்தமருதில் மாத்திரம் அந்தக் கலப்பு கிடையாது. மாகாண சபை உறுப்பினரும் மாநகர சபை உறுப்பினர்களும் தொடர்ச்சியாக முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மட்டுமே தெரிவாகி வருகின்றனர். மாற்று கட்சிகளின் ஊடுருவலுக்கு இப்பிரதேச மக்கள் எப்போதும் இடமளித்திருக்கவில்லை.

இவ்வாறு தங்களது வாக்குகளை சமூக கட்சிக்காக பிடிவாதமாக பிரயோகித்து வருகின்ற மக்கள்தான் இன்று மு.கா. தலைமையிடம் பெரும் நம்பிக்கையுடன் தமக்கென்று ஒரு உள்ளூராட்சி சபையை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மு கா தலைமையினால் சாய்ந்தமருது மக்களுக்கு நன்றிக்கடன் தீர்க்கும் விதத்திலே இந்த கோரிக்கை பார்க்கப்பட வேண்டும் என்பது தற்போது இம்மக்களின் ஆதங்கமாகும். இந்த விடயம் தொடர்பில் ஹக்கீம் நடந்து கொள்ளப்போகும் விதம் குறித்து பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

கடந்த 10.04.2015 ஆம் திகதி மு கா தலைமையினை சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் குழுவினர் சந்தித்த போது உள்ளூராட்சி அமைச்சரை இன்று (22.04.2015) சந்தித்து இக்கோரிக்கையை முன்வைப்பது என்கிற இணக்கம் காணப்பட்டுள்ளது. ஆனால் மறைந்த தலைவர் அஷ்ரப்பாக இருந்திருந்தால் மீண்டும் பள்ளிவாசல் மரைக்காயர்கள் சபை பிரதிநிதிகளை கொழும்புக்கு அழைத்திருக்க மாட்டார். மாற்றமாக அவர்களது கோரிக்கையில் நியாயம் கண்டு உரிய ஆவணத்தை கையிலெடுத்து விடயத்தை கன கச்சிதமாக முடித்து கொடுத்து இருப்பார். 

இம்மாதிரியான நிகழ்வுதான் சாய்ந்தமருதின் உப பிரதேச செயலக விடயத்தில் இடம்பெற்றது. அன்று உள்ளூர் அரசியல் தலைமைகளினால கோரிக்கை விடுக்கப்பட்ட போது அஷ்ரப் நேராக அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவிடம் சென்றார். அவ்வளவுதான் இரவோடு இரவாக உப பிரதேச செயலகத்தை பிரகடனப்படுத்தினார். பின்னர் அது முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த சந்தர்பத்தில்தான் பள்ளிவாசல் பிரதிநிதிகளை மீண்டும் கொழும்புக்கு அழைதிருப்பதில் பாரிய சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதனால் எங்கு நாம் ஏமாற்றப்பட்டு விடுவோமோ என்கிற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

19ஆவது திருத்தம், 20ஆவது திருத்தம் பாராளுமன்ற கலைப்பு போன்ற காரணங்களை காட்டி இது தள்ளிப்போடப்படலாம் என்கிற அச்சமும் இல்லாமல் இல்லை. எவாராயினும் இவற்றை எல்லாம் ஒரு சாக்காக சொல்லி விடவும் கூடாது என்பதில் பள்ளிவாசல் தலைமையும் மக்களும் மிகவும் தெளிவாக உள்ளனர்.

உண்மையில் சாய்ந்தமருது மக்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் கடமைப்பட்டுள்ளது. அந்த வகையில் இக்கோரிக்கையினை நிறைவேற்றி கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு அக்கட்சிக்கு உள்ளது. அவ்வாறு செய்யத் தவறுகின்ற போது அம்மக்கள் மிகவும் காரசாரமாக கிளர்ந்தெழும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே தற்போது உணர முடிகிறது. சந்தி பொந்துகளில் மக்கள் இது பற்றி பேசிக் கொள்வதை காணக் கிடைக்கிறது. 

இந்த கிளர்ச்சியானது சாய்ந்தமருதில் உருவாகின்றபோது, அது மு கா.வின் ஆணி வேரை அடியோடு அறுக்கும் செயலாகவே அமையும் எனலாம். இது அம்பாறை மாவட்டம் மட்டுமல்ல முழு கிழக்கிலும் பரவும் வாய்ப்பும் இருக்கிறது. 

குறிப்பாக சாய்ந்தமருது உள்ளிட்ட கலமுணைத் தொகுதியில் மாற்று முஸ்லிம் அரசியல் சக்திகள் தங்களது அரசியலை ஸ்திரப்படுத்துவதற்கு காய்களை தீவிரமாக நகர்த்தி வருகின்ற சூழ்நிலையில் சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால அபிலாஷையை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பந்தாடி இழுத்தடிப்பு செய்யுமாயின் அது அம்மக்களை சீண்டி விட்டு மாற்று அரசியல் தரப்புகளுக்கு தீனி போடுவதாகவே அமையும் என்பது நிச்சயம். 

இது எதிர்வரும் தேர்தல்களில் மு.கா.வுக்கு பாரிய தாக்கத்தை உண்டுபண்ணும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை

இந்த சந்தர்பத்தில் இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். அதாவது தங்களது சுயநல புத்தி, கழுத்தறுப்பு, குழிபறிப்பு எல்லாம் மறுபுறம் அவர்களையே குத்துகின்ற ஈட்டியாக மாறுகிற சந்தர்பங்களையும் நாம் அண்மைய காலங்களில் கண்கூடாக கண்டிருக்கிறோம்.

கடந்த மகிந்தவின் ஆட்சி அதிகாரம் அவரது புத்தியை மழுங்கடிக்க செய்த விடயம் என்பதும் தனக்கு மேலும் 2 வருட ஆட்சி அதிகாரம் இயல்பாகவே இருந்த போதிலும் அவரது பேராசையினால் தாம் ஏற்கனவே பெற்றிருந்த மக்களாணையை புறக்கணித்து அவசரமாக தேர்தலுக்கு சென்று அதிகாரத்தை இழந்தார். 

ஒரு புறம் நாட்டில் ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்து விட்டு மறுபுறம் பௌத்த பேரினவாத சக்திகளை பலப்படுத்திக் கொண்டு முஸ்லிம்களை அழித்தொழிக்க மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் தீவிரமாக செயற்பட்டதன் எதிரொலியே அவரது தோல்வியாகும். 

அவரது ஆட்சியால் நசுக்கப்பட்ட முஸ்லிம்களின் ஓலங்களை அவர் கருத்தில் கொள்ளாமல் மார்தட்டினார். அதனால் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் அவருக்கு உரிய தருணத்தில் பாடம் புகட்டினர். இறுதியில் அவர் நம்பிய பேரின சிந்தனை கூட அவருக்கு கை கொடுத்துதவவில்லை.

இந்த விடயத்தை ஏன் குறிப்பிடுகிறோம் என்றால் மஹிந்தவின் ஆட்சி ஒழியவேண்டும் என்கிற எழுதப்பட்ட விதியினால்தால் இவ்வாறெல்லாம் நடந்துகொள்ள மகிந்த துணிந்தார் என்பதை உறுதியாக சொல்லலாம். 

அதுபோன்றுதான் முஸ்லிம் காங்கிரசின் அழிவு ஆரம்பமாக இருக்கும் அதாவது மு காவின் அழிவே விதியாக இருக்குமென்றால் அம்மக்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கும்.

சாய்ந்தமருது மக்களின் இந்த கோரிக்கை தோல்வியடையும் பட்சத்தில் முழுமையாக மு கா கட்சி சாய்ந்தமருதில் இருந்து ஓரங்கட்டப்படலாம். எவ்வாறு மகிந்த தனது இரண்டு வருட பதவிக்காலம் இருக்கும் போது தனது தலையில் மண்ணை வாரிப்போட்டவராக தேர்தல் ஒன்றுக்கு சென்றாரோ அது போல மு. கா. வின் இந்த புறக்கணிப்பும் மு காவின் தலையில் மண் வாரிப்போட்ட செயலாகவே அமையும்.

இத்தகைய ஒரு துர்ப்பாக்கிய நிலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் அதன் தலைமைத்துவத்திற்கும் கல்முனைத் தொகுதி பிரதிநிதிகளுக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் அவர்கள் சற்றேனும் அச்சம் கொள்வார்களாயின் சாய்ந்தமருது மக்களின் தாகத்துடன் விளையாடக் கூடாது என்பதே எமது பணிவான அறிவுரையாகும்.

கட்டுரையாளர்;
கலீல் எஸ். முஹம்மத்
கணக்காய்வு உதவியாளர்
இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகம்
ஒலுவில்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -