பேரின்பராஜா சபேஷ் -
நவீன உற்பத்திகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு செயற்கைச் சூழலுக்குள் நாம் வாழ நிர்ப்பந்திக்கப்ட்டுள்ளதால் பாரம்பரிய உற்பத்திகள் மங்கி மறைந்து வருகின்றன இவ்வாறு ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தெரிவித்தார்.
கிராமியக் கைத்தொழில்களை ஊக்குவிக்கும் முகமாக ஏறாவூர் சமூக அபிவிருத்தி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிராமியக் கைத்தொழில் பொருட்களின் விற்பனை நிலையம் திறந்து வைப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
ஏறாவூர் சமூக அபிவிருத்தி மன்றத்தின் இணைப்பாளர் எஸ்.ஏ.சி. நஜிமுதீன் தலைமையில் வியாழனன்று காலை ஆறுமுகத்தாக்குடியிருப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர், உட்பட தன்னார்வத் தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகளும் இன்னும் கிராமியக் கைத்தொழில் உற்பத்தியாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்நது உரையாற்றுகையில்;
'நவீன அவசர உற்பத்திகளின் ஆக்கிரமிப்பின் விளைவாக உள்ளுர் கிராம உற்பத்திகளுக்கு தேசிய சந்தை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பது ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது.
தற்போதைய நவீன அவசர உலகில் மேற்கொள்ளப்படும் உற்பத்திகள் இயற்கைக்குச் சவால் விடும்படியாகவும் சூழலுக்கும் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிப்பதாகவும் அமைந்திருக்கின்ற போதும் நம்மில் அநேகம் பேர் அவசர உலகப் போக்கில் அதனைத்தான் விரும்புகின்றோம்.
அதேவேளை, நீண்டகாலப் போக்கில் இந்த நவீன உற்பத்திகளால் இயற்கைக்கும் தேக ஆரோக்கியத்திற்கும் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை உணர்ந்த ஒரு சாரார் பாராம்பரியக் கைத்தொழில்களை ஊக்குவிக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அதனடிப்படையில்தான் ஏறாவூர் சமூக அபிவிருத்தி மன்றமும் பாரம்பரிய உற்பத்தியாளர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு ஊக்கமும் உதவியுமளித்து வருவது பாராட்டத்தக்கது. அதேபோன்று இத்தகைய உற்பத்திகளுக்கு அரசும் இன்னும் சில அரச சார்பற்ற சமூக அமைப்புக்களும் உதவிக் கொண்டிருக்கின்றன.
எனவே, இதனை ஒரு சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்தி நவீன மாயையிலிருந்து சற்று விடுபட்டு எமது பரம்பரியத்திற்குள் மீண்டும் நாம் நுழைய வேண்டும்.
ஆரோக்கியமும் சுகவாழ்வும் இயற்கையோடு இணைந்த உறவும் கொண்ட எமது பாரம்பரிய உற்பத்திகளை எமது எதிர்கால சந்ததிக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்.
அதுவே தான் நீடித்து நிலைக்கக் கூடியதான இயற்கைக்கும் மனிதன் உட்பட ஏனைய ஜீவராசிகளுக்கும் கேடு விளைவிக்காத சிறந்த சூழலை எமக்கு ஏற்படுத்தித் தரும். பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சியாளர்களான பெண்களுடைய திறமைகளை வெளிப்படுத்துகின்ற ஒரு நிகழ்வாகக் கூட இதனைப் பார்க்கும்போது இதற்கென ஒரு தேசிய சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொள்ள முடியும் என்று நம்புகின்றேன்.
உள்ளுர் உற்பத்திகளின் தேசிய ரீதியிலான விரிவு படுத்தலுக்காக பிரதேச செயலக மட்டத்திலே இந்த நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
அதன் மூலமாக கை வினைத்திறனில் ஈடுபட்டுள்ள இந்தக் குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்திலே ஒரு சிறந்த நிலைக்குச் செல்ல முடியும். இதனூடாக தமது உற்பத்திகளை அவர்கள் தேசிய மட்டத்திற்கு எடுத்துச் சென்று பிரபல்யப்படுத்த வாய்ப்பும் ஏற்படும்.' என்றார்.(ந-த்)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)