அஹமட் இர்ஸாட்-
அஹமட் இர்ஸாட்:- இரண்டரை தசாப்தங்களாக அரசியல் ஜாம்பவானாகவும், அகில இலங்கை ரீதியில் பேசப்படும் வகையில் காத்தான்குடி நகரத்தை மாற்றியமைதுள்ள உங்கள் அரசியல் செல்வாக்கானது அன்மைகாலமாக சரிந்து வருவதாக பலராலும் பலவாறு பேசப்படுகின்றது. இதன் உண்மை நிலை என்ன?
ஹிஸ்புல்லாஹ்:- பிஸ்மில்லாஹிர் ரஃமானிர் ரஹீம்., எனது 27 வருட அரசியல் வாழ்க்கையில் பல தேர்தல்களில் வெற்றியும் பல தேர்தல்களில் தோல்வியும் அடைந்திருக்கின்றேன். அரசியலில் ஒரு தேர்தலுக்கு முகம்கொடுத்து தோல்வி அடையும் பட்ச்சத்தில் உடனடியாக அந்த குறிப்பிட்ட நபருக்கு ஒரு சரிவு ஏற்படுவது வழக்கமான விடயமாகும். அந்த வகையில் கடந்த தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக செயற்பட்டதன் ஊடாக மக்கள் எங்களை அவருடைய அரசியல் எதிரிகளாகவே பார்ப்பார்கள். மாறாக மஹிந்த ராஜபக்ஸ்ஸ வெற்றி பெற்றிருந்தால் மிக உயர்ந்த இஸ்தானத்துக்கு எங்களுடைய அரசியல் நிலைமை மாறியிருக்கும். ஆகவே இது ஒரு தற்காலிக சரிவாகும். அல்லது இதனை இரு சரிவு எனக் காட்டுவதற்காக என்னுடைய அரசியல் எதிரிகள் பொறாமையின் நிமிர்த்தம் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருக்கின்றனர். என்னுடைய பாராளுமன்ற தேதல் வரும் போது மக்கள் என்னுடனே இருப்பார்கள் என்பதில் எனக்கு அதீத நம்பிக்கை இருக்கின்றது.
அஹமட் இர்ஸாட்:- உங்களால் அரசியல் அறிமுகம் கொடுக்கப்பட்டவர்கள் என பேசப்படுபவர்களும், உங்களுடைய முன்னாள் அரசியல் தோழர்களான மூபீன், சிப்லி பாரூக், உங்களுடைய சகோதரி சல்மா போன்றவர்கள் கடுமையான முறையில் உங்களை விமர்சிப்பதற்கான காரணம் என்ன?
ஹிஸ்புல்லாஹ்:- எல்லாம் அவர்களுடைய சொந்த அரசியல் காரணமகவே அமைக்கின்றன. சகோதரர் சிப்லி பாரூக்கு அவர்கள் மாகாண அமைச்சுப்பதவிகளுக்காக ஜானதிபதி தேர்தல் காலத்தில் அமைச்சர் ரிசாட்னுடனும், தற்போது ஹாபிஸ் நசீர் அஹமட்டுடனும் இணைந்து கொண்டு என்னை விமர்சித்து வருகின்றார். அதே போல் மூபீன் நான் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து கொள்கை ரீதியாக வெளியேறிய போது அவர் முஸ்லிம் காங்கிரசிலேயே இருந்து கொண்டார். ஆகவே அவ்வாறான காரணங்கள் மட்டுமே இவர்களுக்கு இருக்கின்றதே தவிர வேறு காரணங்கள் ஏதும் இல்லை.
அஹமட் இர்ஸாட்:- உங்களுடைய சகோதரி உங்களை கடுமையாக எதிர்த்தும் விமர்சித்தும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதனை எந்த அடிப்படையிலே நீங்கள் பார்க்கின்றீர்கள்?
ஹிஸ்புல்லாஹ்:- எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இருநூறு, முன்னூறு வாக்குகளை வைத்திருக்கும் அவரை எனது அரசியல் எதிரிகள் பயண்படுத்துக்கின்றனர். இதனால் எனது அரசியல் செல்வாக்கிற்கு எதுவும் நடந்து விடப் போவதில்லை. எனகு வாக்களிக்கின்ற மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். பொதுவாக முஸ்லிம் பெண்கள் அரசியலுக்கு வருவதனை இஸ்லாம் தடுக்கின்ற நிலையில் தானும் எனது சகோதரி பகிரங்கமாக அரசியலில் ஈடுபடுவதனை விரும்பாத சாதாரண இஸ்லாமிய மகனாகவே இருக்கின்றேன்.
அஹமட் இர்ஸாட்:- மாவட்டத்தில் மும்முனைப் போட்டி இடம்பெற இருக்கின்ற நிலையில் உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை எவ்வாறு இருக்கப் போகின்றது?
ஹிஸ்புல்லாஹ்:- அல்ஹம்துலில்லாஹ், மும்முனைப்போட்டியாக இருந்தாலும் சரி அல்லது இருமுணைப் போட்டியாக இருந்தாலும் சரி நான் எதனையும் அரசியலில் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற மூன்று ஊர்களான கல்குடா, ஏராவூர், காத்தன்குடி ஆகிய வற்றில் கனிசமான வாக்குகளை வைத்திருக்கும் ஒரே அரசியல்வாதி தானாகவே இருக்கின்றேன் என்பதில் அல்லாஹ்ஹுக்கு முதலில் நன்றி செலுத்தியவனாக தேர்தலில் முகம்கொடுக்க இருக்கின்ற போட்டியினை பற்றி தான் எப்போதும் அலட்டிக்கொண்டதில்லை. வெற்றியும் தோவியும் அல்லாஹ்வின் கையிலேயே இருக்கின்றது.
அஹமட் இர்ஸாட்:- தற்போது நீங்கள் எந்தக்கட்சியில் இருக்கின்றீர்கள்? இது அகில இலங்கை ரீதியாக உங்களைத் தொட்டு மக்கள் மத்தியில் இருக்கின்ற கேள்வியாகவும் இருக்கின்றது.
ஹிஸ்புல்லாஹ்:- முதன் முதலில் நீங்கள்தான் இந்த கேள்வியை என்னிடம் தொடுத்திருக்கின்றீர்கள். உங்களால்தான் இது நாட்டுமக்களுக்கு சென்றடையப் போகின்றது. அதாவது ஜனாதிபதி தேர்தலுக்கு பிற்பாடு நாங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஹிஸ்புல்லாஹ் அணி எனும் புதிய கட்சியாக செயற்பட்டு வருகின்றோம். இன்னும் பதிவு செய்யப்படாமல் இருந்தாலும் சிறீலங்கா சுதந்திர கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு என்னையும் ஓர் கட்சியின் தலைவராக அழைக்கப்பட்டு தானும் கட்சியின் தலைவராக கலந்து கொள்கின்றேன். அந்த வகையில் எமது புதிய கட்சியுடன் இணைந்து கொள்வதற்காக மாகாண சபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் என எமது கட்சியில் இணைந்து அரசியல் முன்னெடுப்புக்களை முனெடுப்பதற்காக அகில இலங்கை ரீதியாக பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்..
அஹமட் இர்ஸாட்:- கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒட்டு மொத்த முஸ்லிம் அரசியல் வாதிகளும் நாட்டில் மாற்ரம் ஏற்பட வேண்டும் என்பதற்காக ஜனாபதி மைத்திரிபால சிறீசேனவை ஆதரித்த பொழுது நீங்களும், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவும் மஹிந்த ராஜபக்ஸ்ஸவை ஆதரித்ததுதான் உங்களுடைய ஆதரவு காத்தான்குடியில் சரிவு நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது என பேசப்படுகின்றது. இதனை நீங்கள் எந்த கோணத்தில் பார்கின்றீர்கள்?
ஹிஸ்புல்லாஹ்:- கடந்த தேர்தலில் ஒர் எடுகோளின் படி 96வீதமான முஸ்லிம்கள் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு வாக்களித்தார்கள். நானும் அதாவுல்லாவும், பெளசியுமே மஹிந்தவுக்கு ஆதரவளித்தோம். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவது ஒட்டு மொத்த முஸ்லிம்களும் முஸ்லிம் அரசியல் வாதிகளும் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு ஆதரவளித்த வேலையில் மஹிந்த ராஜபக்ஸ்ஸ வெற்றிபெற்றிருந்தால் நாட்டில் சிறுபான்மை இனமாக வாழுகின்ற முஸ்லிம்களின் அரசியல் நிலைமை பரிதாபகரமான நிலைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும் என்பதனை கருத்தில் கொண்டே தான் இந்த முடிவினை எடுக்க நேரிட்டது. மற்றைய காரணங்களாக மஹிந்த ராஜபக்ஸ்ஸவின் அரசாங்கத்தில் நான் பிரதி அமைச்சராக இருந்த பொழுது முஸ்லிம் உலமாக்களுக்கான பிரத்தியேக பல்கலைக்கழகம் அமைப்பதற்காகன அனுமதியினை வழங்கினார், அதற்குப் பிற்பாடு முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றையும், பூர்வீகத்தையும் பாதுகாப்பதற்கான ஓர் இஸ்லாமிய பூர்வீக நூதனசாலையை அமைப்பதற்கான அனுமதியினை வழங்கி இன்று காத்தான்குடியில் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது., மக்கள் செரிவாக வாழுகின்ற காத்தான்குடியில் மனிதக் கழிவுகளை அகற்றி கடலில் கலக்கச் செய்வதற்கான பாரிய செலவில் சீனா அரசாங்கத்தின் உதவியுடனான வேலைத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான அனுமதியினை வழங்கியிருந்தார்.
இவ்வாறு நான் முன்வைக்கின்ற அனைத்து வேண்டுகோகளுக்கும் எனக்கு அனுமதியளித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ்ஸ தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்கின்ற வேலையில் பாரளுமன்ற பதவியையும், வாகன கோட்டாவையும் இரவோடிரவாக வாங்கிக்கொண்டு பிரதி அமைச்சர் அமீர் அலியை போன்று மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க என் மனம் இடம்கொடுக்கவில்லை. அது நியாயமாக எனக்கு தென்படவுமில்லை. ஆகையினாலே தான் கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ்ஸவுக்கு ஆதரவளிக்கும் முடிவினை எடுக்க நேரிட்டது. இதனால் எனது செல்வாக்கு குறைந்துள்ளது என்பதானது சகோதரர் சிப்லி பாரூக், அப்துர் ரஃமான் போன்றவர்கள் அவர்களுடைய சொந்த அரசியல் இலாபங்களுக்காக தெரிவித்துவருகின்ற கருத்துக்களாகும். இந்த விசயத்தில் காத்தான்குடி மக்களும் எனது ஆதரவாளர்களும் மிகத்தெளிவாக இருக்கின்றனர்.
அஹமட் இர்ஸாட்:- காத்தான்குடி அரசியலில் இரண்டரை தசாப்பதங்களாக ஜாம்பவானக இருக்கும் உங்களுக்கு கல்குடா அரசியலில் உங்களை ஓர் ஏமாற்றுக்காரர் என்றும். 1989ம் ஆண்டு இரண்டு வருடங்களுக்குப் பிற்பாடு தனது பாரளுமன்ற உறுப்பினர் பதவியை கல்குடாவுக்கும் ஏராவூருக்கும் இரண்டு வருடாக விட்டுக்கொடுப்புச் செய்வேன் என்று பெருதலைவருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியமையினாலேயே உங்களை ஓர் ஏமாற்றுக்காரர் என்று தேர்தல் காலங்களில் பூதாகரமான விடயமாக மேடைகளில் பேசப்பட்டு வருகின்றது. இதற்கு மேலும் வலுச்சேர்க்கும் விடயமாக அன்மையில் ஓட்டமாவடியில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் சிப்லி பாருக் பிரதேசவாதம் உறுவாக்கப்பட்டதென்றால் அது அன்று ஹிஸ்புல்லாஹ் கல்குடாவுக்கு கொடுத்த வாக்குறியை மீறியமையினாலேயாகும் எனத் தெரிவித்திருந்தார். ஆகவே கல்குடா மக்களுக்கு இந்த நீண்ட நாள் குற்றச்சாட்டு சம்பந்தமாக எதைச் சொல்ல விரும்புக்கின்றீர்கள்?
ஹிஸ்புல்லாஹ்:- பிரதேசவாதம் என்பது என்னுடைய அரசியல் காலத்தில் உறுவாகிய விடயமல்ல. அது 1989ம் ஆண்டுக்கு முன்பிருந்தே மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏராவூர் காத்தான்குடி, கல்குடா என அரசியல் வாதிகளால் உறுவாக்கப்பட்டுள்ள நோயாகும். பிரதேசவாதம் இருந்த காரணத்தினாலேயே இந்த இரண்டு வருட பிரச்சனையும் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டு வருடங்கள் விட்டுக்கொடுப்புச் செய்வேன் என நான் ஒருபொதும் எந்த ஒப்பந்தத்திலும் கைசாத்திட்டது கிடையாது. அதனை கல்குடா மக்கள் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். மற்றையது மர்ஹும் மொஹைதீன் அப்துல் காதரை திருப்தி படுத்துவதற்காகவே ஓட்டமாவடி மக்கள் இரண்டு வருட கதையினை முன்னெடுத்து வந்தனர். கட்சி தலைமையும் என்னிடம் இரண்டு வருடங்கள் விட்டுக்கொடுப்புச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.
அப்போது நான் இரண்டு வருடத்தை நெருங்கிய நிலையில் இருந்த இருந்தேன். 1990 ஆண்டு தமிம் ஈழ விதலைப்புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் முகம்கொடுத்துவந்தனர். காத்தன்குடி பள்ளிவாயல் படுகொலை, ஏராவூர் கிராமம் இராவோடிரவாக இரத்தக் கடலாக்கப்பட்டது, ஓட்டமாவடி, வாழைச்சேனை போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமை போன்ற விடயங்களை விடுதலை புலிகள் முன்னெடுத்து வடக்கில் இருந்து முஸ்லிம்களை விரட்டி அடித்ததைப் போன்று கிழக்கில் இருந்தும் முஸ்லிம்களை விரட்டி அடிப்பதற்கான திட்டத்தினை முன்னெடுத்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களை பாதுகாப்பதற்கான அரசியல் ரீதியா துடிப்பான இளைஞனாக தான் மட்டுமே மாவட்டத்தில் முஸ்லிம்கள் சார்பாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தவனாகவும், எனது உயிரை துச்சமாக மதித்து களத்தில் நின்று போராடியவனாக காணப்பட்டேன்.
ஆனால் நான் அன்று முஸ்லிம்களை பாதுகாப்பதற்காக மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளை எனக்குப் பின்னால் இருந்த அன்றைய அரசியல்வாதியினால் நிறைவேற்றிருக்க முடியாது. தான் ஜானதிபதியுடன் கதைத்து இரவோடிரவாக ஓட்டமாவடி மாஞ்சோலை போன்ற எல்லைக்கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு ஆயுதங்களை கொடுத்து தானும் களத்தில் நின்று மண்மூடைகளால் காவலரங்குகளை அமைத்து கல்குடாவில் இருக்கின்ற முஸ்லிம்களை பாதுகாத்தோம். இதனால்தான் இரண்டு வருடங்களுக்குப் பிற்பாடு எனது பாராளுமன்ற உறுப்புறுமையினை விட்டுக் கொடுக்க நான் பின்வாங்கினேன்.
அஹமட் இர்ஸாட்:- 1989ம் ஆண்டு முதன்முதலில் நீங்கள் பாராளுமன்றம் செல்வத்ற்கு ஒத்துளைத்த கல்குடா மக்களை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
ஹிஸ்புல்லாஹ்:- நான் எப்போதும் அந்த மக்கள் மீது அக்கரையுடனே இருந்து வருகின்றேன். குறிப்பாக 1994, 2000ம் ஆண்டுகளில் என்னால் முடிந்தளவு நிறைய பணிகளை அந்த மக்களுக்கு செய்துள்ளேன் அல்ஹம்துலில்லஹ். குறிப்பாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தை நான்தான் உருவாக்கினேன். அதே போல் ஓட்டமாவடி பிரதேச செயலம், அதற்கு பக்கத்தில் இருக்கும் தபால் நிலையம், பாடசாலைக் கட்டிடங்கள் போன்றவற்றை அமைத்துள்ளேன். ஓட்டமாவடி சந்தைகட்டிடத்தை அமைப்பதற்கான கோவிலுக்குச் சொந்தமன நிலத்தினை தமிழ் அரசியல் வாதிகளிடம் இருந்து வந்த எதிர்ப்புக்கு மத்தியிலும் நான் தனி ஒருவனாக நின்று பெற்றுக்கொடுத்துள்ளேன். அதே போன்று ரிதிதென்ன, ஜெயந்தியாய போன்ற பிரதேசங்களை முழுமையான கிராமாங்களாக அமைத்த பெருமை என்னையே சாரும். அப்பிரதேச மக்கள் எனது இறுதி மூச்சுவரை நன்றியுடையவர்களாக இருப்பார்கள் என்பதில் எனக்கு அதீத நம்பிக்கையிருக்கின்றது.
ஆனால் 2004ம் ஆண்டுக்கு பிற்பாடும் 2010ம் ஆண்டுக்கு பிற்பாடும் என்னால் கல்குடாவில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியாமல் போய்விட்டது. காரணம் தானும் கல்குடாவை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற அமீர் அலியும் ஒரே கட்சியில் இருந்ததினால் அமீர் அலி என்னை கல்குடாவில் அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்வதற்கு என்னை விடுவதில்லை. அவருடைய அரசியல் செல்வாக்கு கல்குடாவில் குறைந்து விடும் எனக்கருதி திருமண வீடுகள் அல்லது ஜனாசா வீடுகளுக்கு கூட நான் நட்பு ரீதியாக வருவதனை அவர் தடுத்து வருகின்றார். அவ்வாறு நான் கல்குடாவுக்கு வநததினை அவர் அறிந்தால் உடனே அமைச்சர் ரிசாட் பதுர்டீனுடன் தொடர்பு கொண்டு ஹிஸ்புல்லாஹ் கல்குடாவுக்குல் வந்து எனது அரசியலை குலப்புகின்றார் என குற்றம் சுமத்துகின்றார். இதனால்தான் நான் கடந்த சில வருடங்களாக கல்குடா பக்கம் வருவதில்லை. அபிவிருத்தி பணிகள் அனைத்தையும் அமீர் அலிக்கே கொடுத்திருந்தேன். கடந்த 2014ம் ஆண்டுக்காக எனது டிசீபி நிதி ஒதுக்கீடான 500000 ரூபாய்களையும் அவருக்கே கொடுத்திருந்தேன். ஆனாலும் எனக்கு கல்குடாவில் இருக்கின்ற வாக்கு வங்கியில் எவ்வித சரிவோ அல்லது அதிகரிப்போ கிடையாது. எனக்கு எப்போதும் இருந்து வருகின்ற வாக்குகள் கல்குடாவில் இருந்து கொண்டே இருக்கின்றது. எதிர்காலத்தில் எனக்கு நல்ல சந்தர்ப்பத்தை அல்லாஹ் வழங்குவானாயின் நான் கல்குடா மக்களை ஒரு போது கைவிடத்தயாரில்லை.
அஹமட் இர்ஸாட்:- முன்னாள் ஜானதிபதி சந்திரிக்கா அம்மையார் இப்போதைய அரசாங்கத்தில் முக்கிய புள்ளியாக இருந்து வருகின்றார். நீங்களும் சந்திரிகா அம்மையாரிடம் அதிக நம்பிக்கையை பெற்ற ஒருவர். உங்களை சந்திரிகாவின் செல்லப்பிள்ளை என பொதுவாக அழைப்பார்கள். அவ்வாறு இருக்கையிலே தற்போது சந்திரிகா அம்மையாருக்கும் உங்களுக்கும் இடையில் இருக்கின்ற உறவு எந்த நிலையில் உள்ளது?
ஹிஸ்புல்லாஹ்:- நாங்கள் இப்போதும் சந்திரிக்கா அம்மையாருடன் மிகவும் நெருக்கமாக இருக்கின்றோம். அவர் பதவியில் இல்லாத நேரத்தில் கூட அவரை நான் லண்டனுக்குச் சென்று சந்தித்து வந்துள்ளேன். கடந்த தேர்தலிலும் மைத்திரிபாலுக்கு ஆதரவளிக்குமாறு பலதடவைகள் என்னுடன் தொடர்பு கொண்டு வேண்டிக்கொண்டார். அந்த சந்தர்ப்பத்தில் எல்லாம் நான் அவரிடம் என்னால் விசுவாசாத்துக்கு துரோகம் இழைக்க முடியாது என்றும், நீங்கள் பதவியில் இருந்த பொழுது உங்களை விட்டு ரவூப் ஹக்கீம் எல்லோரும் விலகிச் சென்ற பொழுது கூட நான் விசுவாசத்துக்காக உங்கள் பக்கமே இருந்துள்ளேன் என்றும் விளக்கிய வேலையில் அவர் என்னை புரிந்து செயற்படும் ஒரு சிறந்த அரசியல் தலைவியாக காணப்பட்டார். தேர்தலுக்கு பிற்பாடு கூட அவருடைய இல்லத்தில் சுதந்திரக் கட்சியில் இருக்கும் இருபது முக்கியஸ்தர்களை அழைத்திருந்த கூட்டத்தில் என்னையும் அழைத்திருந்தமையானது எனக்கு அவருக்கு இடையில் உள்ள நெருங்கிய தொடர்பினை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது.
அஹமட் இர்ஸாட்:- உங்களுக்கு எதிராக தற்போது முன்வைகப்பட்டு வரும் செலிங்கோ செயார் புறோபிட் சம்பந்தமான குற்றச்சாட்டுக்கும், அதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கும் எதைச் சொல்ல விரும்புகின்றீர்கள்?
ஹிஸ்புல்லாஹ்:- செலிங்கோ புறோபிட் செயார் என்பது நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக பதிவு செய்யப்பட்ட வங்கியாகும். அதில் எனது மணைவியும் பணிப்பாளர்களில் ஒருவராக இருக்கின்றார். அதில் மக்கள் கடன் பெற்றிருக்கின்றார்கள். நானும் என்னுடன் தொடர்புபட்ட சிலரும் சேர்ந்து கடனடிப்படையில் தொழில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். துரதிஸ்டவசமாக செலிங்கோ புறோபிட் செயார் மேற்கொண்ட தொழில் முயற்சிகளில் பாதிப்புற்ற காரணத்தினால் அவர்களால் தொடர்ந்து அந்த முயற்சியில் ஈடுபட முடியாமல் போய்விட்டது. ஆகவே வாடிக்கையாளர்கள் வழக்கு வைத்திருக்கின்றார்கள். அந்த வழக்கின் முடிவுக்காக காத்திருக்கின்றோம். அதற்கு பிற்பாடு வாடிக்கையாளர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும். குறிப்பிட நிறுவனத்துக்கு அதிகமான சொத்துக்கள் இருக்கின்றன. ஆகவே வழக்கு வாடிக்கையாளர்களுக்கு சார்பாக தீர்பளிக்கப்பட்டால் சொத்துக்கள் விற்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்படும்.
நான் சிலருக்கு கடன் எடுபதற்காக சிபாரிசு கடிதத்தில் கையளுத்து மட்டும் வைத்துள்ளேன். என்னை அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்துடன் நல்லாட்சிகான தேசிய முன்னணியின் தலைவர் அப்துர் ரஃமான் என்மீது பல குற்றச்சாட்டுக்களை நாளாந்தம் சுமத்தி வருகின்றார். ஏன் அவர் என்னை மட்டும் பழிவாங்கும் அடிப்படையில் செயற்படுகின்றார் என தனக்கு விழங்கவில்லை. நீதிமன்றம் நான்தான் இதற்கு முழுக்காரணம் என தீர்பளித்தால் அடுத்த நிமிடமே சகல பிரச்சனைகளை தீர்த்துவைக்க நான் தயாராக உள்ளேன். என்மீது பழிசுமத்துபவர்களுகெதிராக என்னால் வழக்கு தாக்கள் செய்ய முடியும். ஆனால் அப்படி நான் ஒரு செய்யமாட்டேன் எனக்கு இது ஒரு பெரிய விடயமுமல்ல. அப்துர் ரஃமனுக்கு இது ஒரு புதிய விடயமல்ல. நான் எப்போது அரசியலுக்கு வந்தேனோ அப்போதிருந்தே என்னை ஓரம் கட்டுவதற்கு அவர் முயற்சித்து வருகின்றார். அல்லாஹ் போதுமானவன் இப்படியான வேலைகளால் எனக்கு ஆதரவு அதிகரிக்கின்றதே தவிர அவர்களால் எனக்கு ஒன்றும் செய்துவிட முடியாது. அடுத்தமுறை வட்டார பிரதேச சபைத் தேர்தல் வருமாயிம் அப்துர் ரஃமானால் காத்தான்குடி நகர சபையில் ஒரு உறுப்பினராக் கூட வரமுடியாத நிலைதான் உள்ளது.
அஹமட் இர்ஸாட்:- உங்களுடைய மேற்பார்வையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய பூர்வீக நூதனசாலை சம்பந்தமாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இது சம்பந்தமான உங்களுடைய கருத்தென்ன?
ஹிஸ்புல்லாஹ்:- இந்த நூதன சாலையானது இலங்கை முஸ்லிகளினுடைய சரித்திரம், வரலாறு, அவர்கள் நாட்டுக்குச் செய்த அளப்பெரிய பங்களிப்பு என்பவற்றை நாட்டுமக்களுக்கும் உலககிற்கும், எதிர்கால சந்ததியினருக்கும் தெளிவுபடுத்துகின்ற பூர்வீக நூதனசாலையாகும். இதில் இஸ்லாத்துக்கு முரணான முறையில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்லாமிய அகீதாவுக்கு முரண்பட்டுள்ளது என்றும் எனது அரசியல் எதிரிகளால் திட்டமிடப்பட்டு எனது செல்வாக்கை அழித்தொழிப்பதற்காக ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் அறிக்கைகளை விட்டு வருகின்றனர்.
இந்த நாட்டில் எனக்கு முன்னுள்ள அரசியல்வாதிகளால் செய்யப்பட வேண்டியவற்றை நான் செய்துள்ளேன். சவூதி அராபியா, கட்டார், ஈராக் போன்ற முக்கிய இஸ்லாமிய நாடுகளிலெலாம் முக்கிய நூதனசாலைகளில் மனித உருவச்சிலைகள் சரித்திர வரலாற்றினை எதிர்கால சந்ததியினர் விளங்கிக்கொள்வதற்காக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவைகள் வழிபாடுகளுக்காக வைக்கப்படவில்லை. அதே போன்றுதான் காத்தன்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நூதனசாலையிலும் இஸ்லமிய வரலற்றினை பிரதிபலிக்கும் முகமாகவும், இலகுவில் விளங்கிக் கொளவதற்காகவும் அவைகள் வைக்கப்பட்டுள்ளன. எவ்வாறான எதிர்புக்கள் வந்தாலும் நான் எதற்கும் முன்வைத்த காலை பின்வைக்கப்போவதில்லை.
அஹமட் இர்ஸாட்:- தேசிய அரசியலில் சந்திரிகா மைத்திரி கூட்டு அணி என்றும் மஹிந்த ராஜபக்ஸ்ஸ அணி என்றும் எதிர்காலத்தில் உருவானால் நீங்கள் எந்தப்பக்கம் இருப்பீர்கள்?
ஹிஸ்புல்லாஹ்:- நான் உண்மையிலேயே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைபிலேயே இருக்கின்றேன். அதை விட்டு ஒருபோதும் நான் வெளியேறவுமில்லை, வெளியேறப் போவதுமில்லை. எங்களுடைய தலைவர் இப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவாகும். அவருடைய தலைமைத்துவத்துக்கு கட்டுப்பட்டே நான் இந்த கட்சியில் இருப்பேன். எனக்கும் மஹிந்த ராஜபக்ஸ்ஸவினால் ரட்னபுற, நுகேகொட, கண்டி கூட்டத்துக்கெல்லாம் அழைப்பு விடுத்தும், அவர் நேரடியாக தொலை பேசியில் என்னை வேண்டிக்கொண்ட போதும் நான் செல்லவில்லை. ஆகவே ஜனாதிபதி மைத்திரிபாலவின் கரங்களை சக்திமிக்க கரங்களாக மாற்றுவதே எமது நோக்கமாக உள்ளது. அந்த அணிசார்பாகவே தேர்தலிலும் போட்டியிவோம்.
அஹமட் இர்ஸாட்:- உங்களுடைய அரசியல் வரலாற்றில் உங்களுடைய அரசியல் எதிரிகள் என சொல்லப்படுபவர்கள் காத்தான்குடிக்கு வெளியில் உங்களுக்கு எதிராக தேர்தல் பிரச்சராம் செய்வதென்பது மிகக் குறைவாகவே இருந்து வந்திருக்கின்றது. ஆனால் அன்மைக்காலமாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் அப்துர் ரஃமான், சிப்லி பாரூக், முபீன், போன்றவர்கள் மிகப்பயங்கரமாக உங்களுக்கெதிராக காத்தன்குடிக்கு வெளியில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை நீங்கள் பாரிய பின்னடைவாக உங்களுடைய பிரதேசத்தில் பார்க்கவில்லையா?
ஹிஸ்புல்லாஹ்:- இப்படியானவைகளால் எனக்கு எந்த பின்னடைவும் ஏற்படப்போவதில்லை. இவர்களையெல்லாம் நான் குப்பைகளாகவே பார்க்கின்றேன். இவர்களை நான் ஒரு போதும் கணக்கெடுப்பது கூட கிடையாது. இவர்களை மக்களும் கணக்கெடுப்பதும் கிடையாது. இன்ஸா அல்லாஹ் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் இவர்களுடைய நிலைமைகள் என்ன? இவர்களால் ஏற்படுத்தப்பட்ட தக்கங்கள் என்ன? இவர்களால் மொத்தமாக எவ்வளவு வாக்குகள் காத்தான்குடியில் பெற்றுக்கொள்ள முடிந்தது? என்பது பற்றி இந்த நாடும் முஸ்லிம் மக்களும் விளங்கிக் கொள்வார்கள். நான் இப்படியானவர்களுகெல்லாம் பதிலலிப்பது தேர்தலொன்றின் போதுதான். தேர்தல் வரும் போது சிறந்த பதிலினை என்னிடம் இருந்து பெற்றுக்கொள்வார்கள்.
அஹமட் இர்ஸாட்:- தேர்தல் தினத்தன்று எமது ஊரவரான ஹிஸ்புல்லாவைதான் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்ற முடிவினை கடந்த இரண்டரை தசாப்த்த உங்களுடைய அரசியலில் காத்தான்குடி மக்கள் எடுத்திருந்தனை வரலாறு கூறுகின்றது. அவ்வாறான முடிவினை இம்முறையும் காத்தான்குடி மக்கள் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கின்றதா?
ஹிஸ்புல்லாஹ்:- நூற்றுக்கு ஊறு வீதம் இருக்கின்ரது. மாஸா அல்லாஹ். நான் அல்லாஹ்வோடு இருக்கின்றேன். அல்லாஹ் என்னோடு இருக்கின்றான். என்னோடு மக்கள் இருக்கின்றார்கள். ஆகவே நான் அல்லாஹ்வோடு இருக்கின்ற வரைக்கும் மக்கள் என்னோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு நூறுவீதம் இருக்கின்றது. கடந்த காலங்களைவிடவும் எதிர்வருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் அதிகமாக எனக்காக ஒன்றுபடுவார்கள் என்ற நம்பிக்கை என்னிடத்தில் இருக்கின்றது. அதே போன்று காத்தான்குடி மக்களால் மட்டும் நான் வென்றுவிட முடியாது. வழமைபோல ஏராவூர், கல்குடா மக்களின் ஒத்துளைப்புடனே எனது வெற்றி பரிணமிக்கும்.
அஹமட் இர்ஸாட்:- ஏராளமான அபிவிருத்திகளை காத்தன்குடிக்கு செய்துள்ள நீங்கள், இதற்கு பிற்பாடு காத்தான்குடிக்கு எதைச் செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்?
ஹிஸ்புல்லாஹ்:- நிறையத் திட்டங்கள் என்னிடம் இருக்கின்றது. மனிதக் கழிவுகளை அகற்றும் திட்டத்தினை துரிதமாக அகற்றும் பணியினை துரிதகதியில் முடிப்பதே எனது முக்கிய திட்டமாக தற்போது இருக்கின்றது. அதனோடு பூரண வடிகான் அமைப்பு திட்டத்தினை காத்தான்குடிக்கு பூரணப்படுத்திக்கொடுப்பதும் எனது முக்கிய வேலைத்திட்டமாக உள்ளது.
அஹமட் இர்ஸாட்:- கடைசியாக உங்களுக்கு வாக்களிக்கின்ற காத்தான்குடி மக்களுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உங்களுடைய ஆதரவாளர்களும் எதைச் சொல்ல விரும்புகின்றிர்கள்?
ஹிஸ்புல்லாஹ்:- கடந்த காலங்களில் என்னோடு மிக நெருக்கமாக இருந்துள்ளீர்கள். என்மீது நம்பிக்கை வைத்திருந்தீர்கள். அந்த நம்பிக்கைக்கு விசுவாசமாக நூறுவீதம் என்னால் என்ன பணியினை உங்களுக்கு செய்ய முடியுமோ அத்தனை பணிகளையும் நான் செய்துள்ளேன்.
இன்ஸா அல்லா எதிர்காலத்திலும் உங்களுடைய அபிலாசகளை நிறைவேற்றத் தவரமாட்டேன் எனக் கூறிக்கொள்வதோடு, எனக்கு எதிராக செயற்படும் விசமிகளின் நடவடிக்கைகளான எங்களை குலப்புவதும், அபிவிருத்திகளை இல்லாமல் செய்தல், அரசியல் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்தல், ஏனைய கட்சிகளுக்கு ஏஜெண்டுகளாக செயற்படுவது போன்ற நடவடிக்கைகளை தெளிவாக உணர்ந்து கொண்டும், அவர்களின் பிரச்சாரங்களுக்கு சோரம்போய்விடாமல் தொடர்ந்து எமது பிரதிநிதித்துவத்தை பாதுகாத்து எங்களுடைய மாவட்டத்தை கட்டியெழுப்புவதற்கும், இனிவரும் காலங்களில் மேலும் என்னுடைய பணிகளை திறம்பட செய்வதற்கும் என்னுடைய கரங்களை பலப்படுத்துவதற்கு ஓத்துளைப்பு வளங்குமாறு வேண்டிக்கொள்கின்றேன்.
.jpg)
.jpg)