ஹாசிப் யாஸீன்-
சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றத் தாமதத்திற்கு காரணம் ஹரீஸ் எம்.பி? ஜூம்ஆப் பள்ளி விளக்கம் என குதர்க்கமாக தலைப்பிட்டு பாராளுமன்ற உறுப்பினரின் செயற்பாட்டினை மழுங்கடிக்கச் செய்யும் திரிவுபடுத்தப்பட்ட செய்திக்கும் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு எவ்வித சம்பந்தமில்லை என சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
சாய்ந்தமருதுக்கான தனியாக உள்ளுராட்சி மன்றம் ஒன்றினை பெற்றுக் கொள்வதற்கான முயற்சியினை சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் மேற்கொண்டு வருகின்றது. இதனை பெற்றுக் கொள்வதற்காக பள்ளிவாசல் நிர்வாகம் கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸினை சந்தித்து அவரின் முழு ஆதரவினை பெற்றுக் கொண்டுள்ளதுடன் அவரின் வழிகாட்டலில் இவ் உள்ளுராட்சி சபை கோரிக்கையினை வென்றடுப்பதற்கான உறுதி மொழியினையும் அவர் வழங்கினார்.
இதேபோன்று ஊரின் மாகாண சபை உறுப்பினர், உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்களும் தங்களது ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்விடயம் சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை சந்தித்து அவர் ஊடாக இதனை ஜனாதிபதியினதும், பிரதம மந்திரியினதும் மற்றும் அமைச்சரவைக்கும் கொண்டு செல்வதற்கான ஏற்பாட்டினை ஹரீஸ் எம்.பி மேற்கொண்டு தருவதாக உறுதியளித்திருந்தார்.
இவ்வாறு பள்ளிவாசல் நிர்வாகம் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றத்தினை பெற்றுக் கொள்ளவதற்கு பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றத்தினை பெற்றுக் கொள்வதற்காக முன்னெடுப்புக்களை பள்ளிவாசல் நிர்வாகம் தாமதப்படுத்துகின்றது என பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி ஊரைக் குழப்ப சில சக்திகள் முயற்சிக்கின்றனர்.
தனியான உள்ளுராட்சி மன்றம் பெற்றுக் கொள்வதற்காக பள்ளிவாசல் நிர்வாகம் மேற்கொண்ட, மேற்கொண்டு வருகின்ற செயற்பாடுகளை ஊர் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உள்ளுராட்சி மன்றக் கோரிக்கைக்கான மகஜரினை அமைச்சர் ஹக்கீமை சந்தித்து கையளிப்பதற்கு தயார் நிலையிலுள்ள போது எதிர்பாராத விதமாக ஹரீஸ் எம்.பி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதன் காரணமாக மகஜர் கையளிக்கும் நிகழ்வு பிற்போடப்பட்டதே தவிர சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றத் தாமதத்திற்கு காரணம் ஹரீஸ் எம்.பி!? என பள்ளிவாசல் நிர்வாகம் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடவில்லை. இது ஊடகங்களால் திரிவுபடுத்தப்பட்டு தலைப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டிருப்பதற்கும் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும் சம்பந்தமில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். இச்செய்தியின் மூலம் பாராளுமன்ற உறுப்பினருக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களையிட்டு கவலையடைகின்றோம்.
சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி மன்றம் பெற்றுத் தருவதற்கான பாராளுமன்ற உறுப்பினரின் செயற்பாட்டினை பாதிக்கும் வண்ணம் இச்செய்தி வெளியிடப்பட்டிருப்பதையிட்டும் வேதனையடைகின்றோம் எனவும் தெரிவித்தார்.
