முஹம்மட் இம்ராத்-
கவிதை .....
'தூர விலகிச்செல்ல முடியாதபடி என் கிராமம்'
தூர விலகிச்செல்ல முடியாதபடி
என் கிராமம்.
காலத்தின் அரங்கு இது -
ஒரு
இலக்கிய அவகாசத்திற்கான
இரசனைக் குறிப்பு.
என் மொழிக்குழந்தை - தன்
ஈரப்புன்னகையைச் சிந்துவதற்கான
பிரவாகம்,
ஆதலால்,
அனைவருக்கும் - என்
அன்பு ஸலாம்.
கிரீடம் தேவையில்லை,
ஒரு கீறலாகி வருகின்ற
பாடலாக இருக்கட்டும்
'தூர விலகிச்செல்ல முடியாதபடி
என் கிராமம்'.
மிக அண்மித்த செய்திகளோடு
என் கிராமத்தைச் சுற்றிப் பறக்கிறது
மன இறக்கை.
மரங்களில் தாவியும்
மண்ணை முத்தமிட்டும்.
ஏனெனில்,
தூர விலகிச்செல்ல முடியாதபடி
என் கிராமம்.
பயணித்தலுக்கான மீள்பிரவேசம்
பிரசவிக்கப்படுகின்ற போதும்
பரிபாஷைகளை ஊடறுத்து
பிரசங்கம் நிகழ்கின்ற போதும்
திசைகளினூடே
பறந்து செல்கின்ற பரீட்சயம்
என் இறக்கைகளில் முளைத்திருக்கவில்லை
என்பதால்,
நான்
அண்மித்து இடறுகிறேன்;
தூர விலகிச்செல்ல முடியாதபடி.
ஒன்றைப்புரிந்து கொள்வதற்கான
ஒற்றை நிமிடத்திற்குள்ளும்
ஒவ்வொன்றை இழக்கிறது
என் கிராமம்
நின்று கொண்டு
வானத்தை வெறித்தேன்
நின்ற இடம் தொலைகிறது
தூர விலகிச்செல்ல முடியாதபடி
என் கிராமம்.
இது காறும்
துளையிடப்படாமலிருந்த -
என் - இதய பூமியின் மீது
மண் திண்ணிப் புழுக்கள்
மர்மமாய் ஊர்கின்றன.
மரங்களை நிழல் விழுங்கி
மறுபடி கேட்கும் அசரீரியில் கூட
மரபுகள் உடைகின்றன
ஆயினும்,
தூர விலகிச்செல்ல முடியாதபடி
என் கிராமம்.
பெருமிதமாக பேசிக்கொள்கின்ற போதும்,
காலம் நீடிக்கப்பட்டிருக்கின்ற
தாமதங்களின் வலிகொண்டு
சுயமிழந்து
சூன்யமாயிற்று என் கிராமம்.
விடுவிக்கமுடியாத
பெருமூச்சை சுமந்து
நெடுமூச்செறிந்து
தூர விலகிச்செல்ல முடியாதபடி
என் கிராமம்.
பச்சை நிறந் தெறிக்கும்
பற்றைக் காடுகளில்
வெற்றிக் களிப்பில் மிதக்கின்றனர்
முடிவுகள் அறிவிக்கப்படாத
போட்டியாளர்கள்.
தீப்பந்தம் பூட்டிய முகமூடிகளோடு
முரசறிவிப்புச் செயகின்றனர்
அவர்கள்
விறகுகள் முறிக்கும் விரல்களுக்கு
விலங்கு பூட்டி
விதிவருப்புச் செய்கின்றனர்.
ஆதலால்,
தூர விலகிச்செல்ல முடியாதபடி
என் கிராமம்
இடைவிட்ட பக்கங்களை மட்டும்
வரிவிட்டு வாசிப்பதற்காக
திறந்து கிடக்கிறது
புத்தகமாக - என் கிராமம்.
திசை முகமற்ற
எழுத்துக்களை கோர்த்து
பொருள் கோடல் செய்யப்படுகின்றன
புதிதாய் தூர விலகிச்செல்ல முடியாதபடி
என் கிராமம்.
என் கிராமத்தை சுற்றி
திடுகிடுக்கும் சப்தங்கள்.
கிடுகு வேலிகள் கூட
நடுநடுங்கிப் போகின்றன.
அடுத்து வரும் காற்றின்
ஓசை குறித்தான செய்திகளால்
தீக்கொழுந்து பெருக்கெடுக்கும்
'திக்' என்ற பயணங்கள்.
தூர விலகிச்செல்ல முடியாதபடி
என் கிராமம்.
சமுத்திரத்தை விழுங்கிய சயனிப்பில்
என்
கிராமத்து மண் திடல்கள்.
நுரை தெறிக்கும் அலைகளெல்லாம்
நொறுங்கிவிழும் சப்தங்கள்
பற்றிப்பிடித்தலுக்கான
பற்றுறுதியோடு
கரைகளொங்கும்
குற்றுயிர்கொண்ட
குருதிப் பெருக்குகள்.
தூர விலகிச்செல்ல முடியாதபடி
என் கிராமம்.
தேசியத்தின் கொள்கைவாதம்
சுதேசியத்தை மீறுவதால்
விதிவிலக்கற்ற பீடிகையில்
என்கிராமம்
விலகிக்கிடக்கிறது.
ஒரு வரைபடம் வேண்டியேனும்
நான் வாழவேண்டும் இங்கு.
தூர விலகிச்செல்ல முடியாதபடி
என் கிராமம்.
நன்றி.
பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் ஆ.ளு.முபாரக்-
