அஸ்கிரிய மகாநாயக்கர் உடுகம புத்தரக்கித்த தேரரின் மறைவுக்கு ஹக்கீமின் அனுதாபச் செய்தி!

ஏ.ஆர்.ஏ.ஹாபீஸ்-
நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கும் பங்களிப்புச் செய்த அஸ்கிரிய மகாநாயக்கர் உடுகம புத்தரக்கித்த தேரரின் மறைவு சமாதானத்தை விரும்பும் மக்களுக்கு பேரிழப்பாகும் என்று நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மறைந்த அஸ்கிரிய மகாநாயக்கர் உடுகம ஸ்ரீ தம்மதஸ்ஸீ ரதனசார புத்தரக்கித்த தேரர் இன, மத, குல, மொழி, கட்சி பேதங்களின்றி நாட்டு மக்கள் அனைவரையும் சமமாக மதித்த சமய குருவாகத் திகழ்ந்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் என்ற முறையிலும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும், அமைச்சர் என்ற முறையிலும் மறைந்த மகாநாயக்க தேரரை பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்பொழுதெல்லாம் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைப் பற்றியும், சமாதான, சகவாழ்வைப் பற்றியும் அவர் என்னிடம் வலியுறுத்திக் கூறுவது வழக்கமாக இருந்தது. நானும் அவரது ஆலோசனைகளுக்கும், அபிப்பிராயங்களுக்கும் பெரிதும் மதிப்பளித்து வந்தேன். 

புதிய அரசாங்கத்தில் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சராக பதவியேற்ற பின்னர் இறுதியாக அவரை அஸ்கிரிய பீடத்திற்குச் சென்று சந்தித்த போது மிகவும் கலகலப்பாகவும், மனந்திறந்தும் என்னோடு உரையாடினார். நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்துவதும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், ஊழல்களற்ற சமுதாயத்தை உருவாக்குவதும் புதிய அரசாங்கத்தின் உன்னத பணிகளாக இருக்க வேண்டும் என அவர் உபதேசித்தார்.

1945ஆம் ஆண்டு துறவு பூண்ட அன்னார் அறிஞர்கள் பலரிடம் கல்வி கற்று உயர்வடைந்தார். நாட்டின் ஆட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நல்லுபதேசங்களை செய்து, சிறப்பான வழிகாட்டலையும் வழங்கி வந்தார். பௌத்த மக்களுக்கு உபந்நியாசங்களைப் புரிந்தார். மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டார். 

அவரது மறைவையிட்டு நாடு சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் அன்னாரின் மறைவையிட்டு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். 

இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -