அடிக்கடி இல்லாவிட்டாலும், தேர்தல் நேரங்களில் மட்டுமாவது இந்த கோஷம் சற்று ஓங்கி ஒலிப்பதை கவனிக்க முடிகிறது.
“படித்தவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும்”.
எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான் கணக்காக இதென்ன அபத்தம் என்று குழம்பிப் போகிறோம். இப்போது என்னவோ அரசியலில் இருப்பவர்கள் அத்தனைபேரும் கைநாட்டுகள் என்பதுபோல ஒரு பொதுப்புத்தி மக்கள் மனதில் வலுக்கட்டாயமாக படித்தவர்களாலும்ஊடகங்களாலும் திணிக்கப்படுவது சர்வநிச்சயமாக ஜனநாயகத்தின் பண்புக்கு எதிரானது.
தேர்தல் வந்துவிட்டால் மட்டுமே இவர்களுக்கு அரசியலில் குதிக்க வேண்டும், மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று ஆர்வம் வந்துவிடுகிறது. மற்ற நேரங்களில் மக்களை கொசு கடித்தாலென்ன, சாக்கடை ஓடினால் என்ன? ஒரு வீதி மறியல், ஒரு கோரிக்கை மனு. ஏதாச்சும் உண்டா? பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டும்தான் மக்களுக்காக இந்த படித்தவர்கள் போராடுவார்களா?
இல்லை, நாங்களும் மக்களுக்காக போராடியிருக்கிறோம்’ என்று இந்த படித்தவர்கள் சொல்வார்களேயானால், அதிகபட்சம் ரத்ததானம் செய்திருப்பார்கள். மரம் நட்டிருப்பார்கள். இல்லாவிட்டால் ஏதோ ஒரு என்.ஜி.ஓ.வை நடத்திக் கொண்டு 30%சேவை, 70% லாபம் என்று செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள். ஒரு அரசியல் கட்சியில் தொண்டனாய் இருந்து அடிபட்டு, மிதிபட்டு, அடிமட்டத்தில் இருந்து மக்களுக்கு அறிமுகமாகி படிப்படியாக மேலே வரும் ஒருவனுக்கும், இவர்களுக்குமான வேறுபாடு மலைக்கும், மடுவுக்குமானது..
படித்தவர்களிடம் நாம் காணும் பிரச்சினை இதுதான். அமெரிக்கப் பங்குச்சந்தை நிலவரம் அவர்களுக்கு தெரியும். மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் நிறுவனங்களின் வரவு செலவு அவர்களுக்கு அத்துபடி. ஆனால் பொண்டாட்டிக்கு வாங்கித்தரவேண்டிய புடவை17500 ரூபாய்க்கு விற்கிறது என்பது தெரியாது
படித்தவர்கள் நல்லவர்கள், ஊழல் செய்யமாட்டார்கள் என்பது அப்பட்டமான அயோக்கியத்தனம். இது தனிமனித குணம்சார்ந்த விஷயம். இதற்கும் படிப்புக்கும் எந்த சம்பந்தமுமில்லை. திணைக்களங்களில் அரச சேவை துறைகளில் நடைபெறும் சுரண்டலுக்கும், எந்த படிக்காதவனுக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா?
படித்தவர்களும் அரசியலுக்கு வரலாம் என்கிற வாதத்தை நாம் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் படித்தவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்லுவது பாசிஸம்.
இப்போதே கூட மாகாண சபைகளிலும், பாராளுமன்றங்களிலும் இருப்பவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள்தான். ஏராளமான சட்டம் படித்தவர்களும், மருத்துவர்களும், பொறியியலாளர்களும், பொருளாதாரம் படித்தவர்களும் நிரம்பிய அவைகள் தான் இவை. எனவேதான் படித்தவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டால் மட்டும் எல்லாம் மாறிவிடும் என்பது வெறும்யூகம். படித்தவர்களால்தான் மாற்றம் சாத்தியம் என்பது மாயை.
கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், ராணுவம் உள்ளிட்ட எல்லா முக்கியத்துறைகளுமே படித்தவர்களால்தான் நம் நாட்டில் கையாளப்படுகிறது. இத்துறைகளில் நடைபெறும் சுரண்டல்களும், கொள்ளைகளும் படித்தவர்களால்தான் நடத்தப்படுகிறது. அரசியல் களத்தில் பாமரனுக்கும் இடம் அளிக்கப் பட வேண்டும்
.jpg)