தேசிய காங்கிரஸூக்கும் அமைச்சர் அதாஉல்லாவுக்கும் அரசியல் அதிகாரம் கிடைத்த காலமெல்லாம் நமது கல்வித்துறை வளர்ச்சிக்கு எங்களால் முடிந்தளவு பணி புரிந்துள்ளோம்.
இன்று நமது பிரதேசம் கல்வி வளர்ச்சியில் முன்னேற்றமடைந்து நமது மாணவர்கள் சகல துறைகளிலும் சிறந்தவர்களாகவும், திறமையானவர்களாகவும் வருவதற்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
நமது மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளில் நமது பிரதேச கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை சமூகம், பெற்றோர்கள் இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளமைக்கு அவர்களை பாராட்டுகின்றேன்.
அட்டாளைச்சேனை அல் - முனிறா பெண்கள் உயர் கல்லூரி அதிபர் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.சலாம் தலைமையில் நடைபெற்ற தரம் 05 புலமைப் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
நமது பிரதேசத்தின் பெண்கள் கல்வி வளர்ச்சி தொடர்பாக பல வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்கள் தூர சிந்தனையுடன் செயற்பட்டார். அக்கரைப்பற்று ஆயிஷா பெண்கள் கல்லூரி, பாலமுனை அல் - ஹிதாயா வித்தியாலயம், ஒலுவில் அல் - ஜாயிஷா பெண்கள் கல்லூரி, அட்டாளைச்சேனை அல் - முனீறா பெண்கள் உயர் கல்லூரி, பொத்துவில் அல் - இர்பான் பெண்கள் கல்லூரிகளை வளர்த்தெடுப்பதற்காக முடிந்தளவு பணி புரிந்துள்ளார்.
அன்று நமது பாடசாலைகளில் மாணவர்கள் கல்வி கற்பதற்கான வகுப்பறைக் கட்டிடங்கள் இல்லாமல், நமது மூதாதையர்கள் கட்டிய நீண்ட காலம் பழமை வாய்ந்த கட்டிடங்களுக்குள் நமது மாணவர்கள் கல்வி கற்றனர்.
நமது பாடசாலைகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியாத நிலமை தொடர்ந்தன. தேசிய காங்கிரஸூக்கு அரசியல் அதிகாரம் கிடைத்த காலமெல்லாம் நமது கல்வித்துறையின் வளர்ச்சிக்கு முடிந்தளவு பணி புரிந்துள்ளோம். நாம் இன்று கல்வி வளர்ச்சியில் உயர்ந்த நிலையை அடைந்து வருகின்றோம். நமது பிரதேச கல்லூரிகளின் மீது நேசம் வைத்து செயற்படும் எமது பாடசாலை சமூகத்தின் செயற்பாடுகள் பாராட்டப்பட வேண்டியதாகும்.
அல் - முனீறா பெண்கள் உயர் கல்லூரி குறுகிய காலத்தில் வளர்ச்சி அடைந்து பல்வேறுபட்ட துறைகளில் சாதனைகள் புரிய பிரார்த்தித்து, அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களை நான் இன்றைய நாளில் நினைவு கூறுகின்றேன்.
கிழக்கு மாகாண சபையின் அமைச்சராக செயற்பட்ட காலத்தில் இக் கல்லூரியின் வளர்ச்சியில் கவனம் எடுத்து செயற்பட்டேன். இன்று கிழக்கு மாகாண சபையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எங்களின் 14 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று முதலமைச்சர் பதவியில் அமர்ந்த முதலமைச்சர் எங்களின் அமைச்சுப் பதவிகளை பறித்து எடுத்துள்ளார். அவைகளைப் பற்றி நாங்கள் அலட்டிக் கொள்ளவில்லை. கல்லூரி மாணவர்கள் தங்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு எதிர்பார்ப்புடன்தான் கல்வி கற்கின்றீர்கள். எதிர்காலத்தில் தான் ஒரு வைத்தியராக, பொறியியளாலராக, பெரும் படைப்பாளியாக வர வேண்டும் என்ற நம்பிக்கையோடு கல்வி கற்று வருகின்றனர்.
பாடசாலை வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்க்கின்ற நிலையை அடையும் போது பெருமை அடையாமலும், எதிர் பார்ப்பது கிடைக்கவில்லை என்பதினால் கற்கையில் சோர்வடைந்து விடாமல் தொடர்ந்தும் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்ட வேண்டும். நமது பாடசாலை வாழ்க்கையில் கண்ணும் கருத்துமாக இருந்து நமது கலாச்சார விழுமியங்களுடன் வாழ்ந்து நமது சமூகத்தில் பெயர் எடுக்க வேண்டும். பெண்கள் கல்வியில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி வரும் அல் முனீறா பெண்கள் உயர் கல்லூரி எதிர் காலத்தில் சாதனைகள் புரிய பிரார்த்திக்கின்றேன்.
கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் என்ற வகையில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மூன்று நிகழ்வுகளில் கலந்து உள்ளேன். அந்த மூன்று நிகழ்வுகளும் எமது பிரதேசத்தின் கல்வி தொடர்பான நிகழ்வுகளாகும்.
அரசின் 100 நாள் திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 420 மில்லியன் செலவில் பல அபிவிருத்தி திட்டங்கள் நடைபெறவுள்ளதாக பல கூட்டங்கள் கூட்டப்பட்டன. நாங்களும் இத்திட்டத்திற்காக, இப்பிரதேசத்தின் அபிவிருத்திக்காக கட்சி வேறுபாடின்றி ஆதரவு அளிக்க திட்டமிட்டுள்ளோம். இருந்த போதிலும் 100 நாள் திட்டம் முடிவடைய இன்னும் சில நாட்களே இருந்தும் இன்னும் ஒரு அபிவிருத்தி திட்டமும் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நடைபெறாமல் இருப்பதையிட்டு கவலை அடைகின்றேன் எனக் குறிப்பிட்டார்.
.jpg)