அஸ்லம் எஸ்.மௌலானா-
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் அனைத்தும் மூன்றாவது தடவையாக கூடி ஆராய்ந்துள்ளன.
இக்கூட்டம் நேற்று புதன்கிழமை மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெற்றது.
இதில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற மற்றும் அங்கம் வகிக்காத சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் அனைத்தினதும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகமும் ராஜாங்க அமைச்சருமான ஹசன் அலி, பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை முதல்வருமான நிஸாம் காரியப்பர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன், ஈ.பி.டி.பி. தலைவர் டக்லஸ் தேவானந்த எம்.பி. ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்றக் குழுத் தலைவர் ரத்ன தேரர், ஜே.வி.பி. எம்.பி. விஜித ஹேரத், மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை தலைவரும் ராஜாங்க அமைச்சருமான ராதாகிருஷ்ணன், புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன, தேசிய தொழிலாளர் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான திகாம்பரம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் குமர குருபரன் உட்பட மற்றும் பல கட்சிகளின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது சிறுபான்மையினருக்கும் சிறிய கட்சிகளுக்கும் பாதிப்பில்லாத வகையில் தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான வரைவு குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் ஆலோசனைகள் பெறப்படாத எந்தவொரு தேர்தல் முறை மாற்றத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் சீர்திருத்த திட்டத்தை முற்றாக நிராகரிப்பது எனவும் இதனை அமைச்சரவைக்கு தெரியப்படுத்துவது எனவும் அங்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில். சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் பிரதிநிதிகள் அமைச்சர் ஹக்கீமின் வீட்டில் கடந்த வாரம் சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களின் இரண்டாவது சந்திப்பு சென்ற திங்கட்கிழமை வெள்ளவத்தை ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)