கடந்த அரசாங்கத்தில் செயற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் 58 பேருக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலஞ்ச ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை தொடர்பிலேயே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
90 வீதமான முறைப்பாடுகள் அநாமேதய கடிதங்களுக்கு அடிப்படையிலானது என குறிப்பிடப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தனது மகனின் வங்கி கணக்கில் 7 கோடியே 37 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் வைப்பு செய்துள்ளார் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பாக அவரது மகனிடமும் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் கிளையொன்றை பாராளுமன்ற வளாகத்திலேயே உருவாக்கிக்கொண்டால் இலகுவாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் தமது பாராளுமன்ற உறுப்புரிமையை துறக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
தமது மகனின் பெயரில் சிங்கப்பூரில் வங்கிக் கணக்கு திறந்துள்ளதாகவும் பணம் வைப்புச் செய்துள்ளதாகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சரியான முறையில் விசாரணை நடத்தியே நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
