ஹாசிப் யாஸீன்-
கிழக்கு மாகாண ஆட்சியின் ஸ்திரத்தன்மைக்கும் கிழக்கின் அபிவிருத்திற்கும் இந்தியா என்றும் பக்க பலமாக இருக்குமென இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தாக திகா மடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர்வழங்கள், வடிகாலமைப்பு அமைச்சருமான் ரவூப் ஹக்கீம் தலைமையிலான கட்சியின் உயர் மட்டக் குழுவினர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சனி க்கிழமை (14) இரவு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு பற்றி கருத்து தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்; மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரீ.ஹசன் அலி, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கட்சியின் உயர்பீட உறுப்பினர் சட்டத்தரணி எம்.பாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது அதிகாரப் பகிர்வு, வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கம் என்பன உட்பட முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
மேலும் கிழக்கு மாகாணத்தில் விவசாய, கால்நடை அபிவிருத்தி, கைத்தறி நெசவுத் தொழிலை ஊக்குவித்தல், தென்கிழக்கு, கிழக்குப் பல்கலைக்கழகங்களில் பீடங்களை நிறுவதற்கும் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கும் இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்க வேண்டும் என தூதுக்குழுவினாரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸின் முயற்சியினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைத்து தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளமை குறித்து இந்தியப் பிரமதர் மோடி தூதுக் குழுவினரிடம் தனது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
மேலும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு இந்திய அரசு தனது உதவிகளை வழங்கும் அத்துடன் தூதுக் குழுவினரால் முன்வைக்கபட்ட அனைத்து விடயங்களும் கவனத்தில் எடுக்கப்படும் என பிரதமர் மோடி இதன் போது தெரிவித்தாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

.jpg)