துரோணாச்சாரியார் ஏகலைவனிடம் கேட்ட கட்டை விரலும்; சம்பந்தன் ஹக்கீமுக்குக் கொடுத்த இரட்டை விரல்களும்

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

'மஹாபாரதத்தில் ஏகலைவனின் குரு துரோணரைப் பற்றி அதனைப் படித்தவர்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். தனது பயிற்சியை வில் வித்தையில் தனது சிஷ்யனான ஏகலைவனுக்கு வழங்கிய துரோணாச்சாரியார் ஏகலைவனிடம் கேட்டது வேறு எதனையும் அல்ல, ´உனது கட்டை விரலை வெட்டித் தா?´ என்று கேட்கிறார். 

கட்டை விரலை வெட்டினால் வில் வித்தையில் ஏகலைவனால் நீடிக்க முடியாது. அவ்வாறு துரோணாச்சாரியார் கட்டை விரலை ஏகலைவனிடம் கேட்டதற்குச் சமமாகத்தான் முதலமைச்சர் பதவியை அண்ணன் சம்பந்தன் கேட்கின்றார் என்ற அளவுக்கு எங்களது உணர்வுகள் இருந்தன." என கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ஹக்கீம் தெரிவித்திருந்த கருத்துக்கான தனது பதிலை நல்லெண்ண இணக்க அரசியல் வழி ஒழுகி வழங்கியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற தலைவரான இரா .சம்பந்தன் ஐயா.

”தம்பி நான் உன்னிடம் கட்டை விரலைக் கேட்டதாக நீ கூறி அதனை எனக்கு தர மறுத்து விட்டாய். ஆனால், எனது இரட்டை விரல்களையே உனக்குத் தந்துள்ளேன். அவற்றை வைத்து நீ ஆட்சி செய்வாயாக” என்பது போன்று கிழக்கு மாகாண சபையின் ஸ்திர ஆட்சிக்கு முஸ்லிம் காங்கிரஸுக்கு உதவி புரிந்துள்ளார் சம்பந்தன் ஐயா.

கடந்த சில வாரங்களாக மிகவும் சூடான அரசியல் களமாகக் காணப்பட்ட கிழக்கு மாகாண சபையின் அரசியல் களம் இன்று சூடு தணிந்த நிலையில் காணப்படுகிறது. இதற்கு காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்தான்.

முதலமைச்சராக ஹாபிஸ் நஸீர் அஹமத் பதவியேற்ற பின்னர் எழுந்திருந்த நிலைமைகள், அமைச்சரவை பங்கீடுகள் தொடர்பில் கிழக்கு மாகாண சபை நிர்வாகம் ஸ்திரமற்றுப் போய் விடுமோ என்ற சந்தேகத்தின் மத்தியில் நிலைமைகள் வழமைக்குத் திரும்பின. 

தற்போதைய முதல்வருக்கு சத்தியக் கடதாசி மூலமாக ஆதரவு வழங்கியவர்களில் அறுவர் பின்னர் அந்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட அமைச்சுப் பதவிகள் தொடர்பில் எழுந்த பிரச்சினையே காரணமெனக் கூறப்படுகிறது. கிழக்கு மாகாண சபையின் அமைச்சர்களாக முதலில் மன்சூரும் ஆரியபதி கலப்பதியும் நியமிக்கப்பட்டதனையடுத்தே மாகாண சபை உறுப்பினர்களில் சிலர் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக நினைத்து தங்களது ஆதரவினை வாபஸ் பெற்றனர்.

இதற்கு மேலாக இவர்கள் அறுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தனைச் சந்தித்து இந்த விகாரம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். இவ்வாறானதொரு சந்திப்புக்கான தேவை என்ன என்பதனை விளக்கமாக கூற வேண்டியதில்லை. இந்த விடயத்தில் சம்பந்தன் ஒரு குறைகேள் அதிகாரியாக மட்டுமே செயற்பட்டாரே தவிர, அவர்களது மாய, மந்திர வலையில் சிக்குண்டவராக எதற்கும் இணக்கம் தெரிவிக்கவில்லை.

இரா. சம்பந்தன் என்ற அரசியல் அறிவு முதிர்ச்சி கொண்ட மாமலையான, தீர்க்கதரிசனமிக்க அந்த தலைமையிடமிருந்து இவர்கள் எந்த வாக்குறுதியையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமையில் ஏதோ ஒரு வகையில் ஏமாற்றமுடன் திரும்பியது மட்டுமே மிச்சமாக போனது

மறுதினமே கிழக்கு மாகாண அமைச்சரவையில் தனது கட்சியைச் சேர்ந்த இருவருக்கு அவர்களது சுய விருப்பில் அமைச்சு பொறுப்பினை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை வழங்கி நல்லெண்ணத்தைக் வெளிக்காட்டிய சம்பந்தன் ஐயா முதல் நாளில் தன்னைச் சந்தித்தவர்களுக்கு இதன் மூலம் பதிலையும் வழங்கியதுடன் பொறுப்புமிக்க அரசியல் செய்வது இப்படித்தான் என செயலிலும் காட்டி விட்டார்.

சம்பந்தன் ஐயா தன்னிடம் கட்டை விரலைக் கேட்டதாக கூறிய ஹக்கீமுக்கு தனது இரட்டை விரல்களையே கொடுத்து உதவியதுடன் இரு சிறுபான்மையின மக்களின் ஐக்கியமான செயற்பாட்டுக்கு வித்திட்டுள்ளார் என்பதே உண்மை. இதன் மூலம் கிழக்கு மாகாண நிர்வாகம் ஸ்திரமற்ற தன்மையிலிருந்து தற்காலிகமாகவாது தப்பித்துக் கொண்டுள்ளது என்றே கூறலாம்.

இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸும் இந்த மாகாணத்தின் தமிழ் – முஸ்லிம் மக்களின் இன ஐக்கியத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு செயற்பட்டுள்ளது. முக்கிய அமைச்சு பொறுப்புகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியதன் மூலம் தங்களது இணக்க அரசியலையும் நல்லலெண்ணத்தையும் வெளிக்காட்டியுள்ளது. தனது கட்டை விரலைக் கொடுக்காமல் சம்பந்தன் ஐயாவின் இரட்டை விரல்களை ஏற்றுக் கொண்ட தனது நல்லெண்ணத்தை வெளிக்காட்டியுள்ளமைக்காக அந்தக் கட்சியையும் பாராட்டவே வேண்டும்.

இது இவ்வாறிருக்க, இன்று கிழக்கில் புதிய முதலமைச்சரின் கீழ் அமைச்சரவையும் நியமிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு அமைச்சு பதவிகளை முதன் முறையாகப் பெற்றுக் கொண்ட விடயம் என்பது இந்த நாட்டின் அரசியலில் மிக முக்கியமானதொரு வரலாற்றுப் பதிவாகப் போகிறது. 

இதனை விடவும் மிக மிக முக்கியமானது பிரதான முஸ்லிம் கட்சி ஒன்றின் தலைமைத்துவத்தின் கீழ் அதேபோன்று பிரதான அந்தஸ்தை கொண்ட தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் இரு உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டமையாகும். இது ஓர் இன ஐக்கியத்தின் முன்னுதாரண விடயம்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் - முஸ்லிம் இன ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப இதனை ஒரு சந்தர்ப்பமாக அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறுபான்மை கட்சிகளின் அரசியல் தலைமைகள்தான் பிரிந்து நிற்கிறார்களே தவிர தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாகவே உள்ளனர் என்றே விமர்சிக்கப்படும் இன்றைய நிலையில் கட்சித் தலைமைகளும் ஒன்றுபடும்போது அதன் அறுவடை நிச்சயமாக நல்ல பயனையே இந்த மக்களைச் சென்றடையும்.

இந்த இரு சிறுபான்மையினக் கட்சிகளும் புரிந்துணர்வுடனும் விட்டுக் கொடுப்புடனும் செயற்படுமானால் அது ஆரோக்கியமானதொரு விடயமாக மட்டுமல்லாது எதிர்காலத்தில் பலவற்றுக்கும் ஓர் எடுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இவ்வாறான இன ஐக்கியம் தமிழ் பேசும் மக்களை பிரித்து பார்க்க முயற்சிக்கும் இனவாதிகளுக்கு ஒரு படிப்பினையாகவும் பதிலாகவும் அமையும். கிழக்கு மாகாண தமிழ் – முஸ்லிம் மக்களது உறவு என்பது கடந்த காலங்களில் தேங்காயும் பிட்டுமாக இருந்ததாக வரலாற்றுச் சம்பவங்களே சாட்சி கூறுகின்றன. ஆனால் அந்த நிலைமை இன்று இல்லை என்பது வேதனைக்குரியது. 

அதன் பொறுப்புதாரிகள் தமிழ் பேசும் மக்கள் அல்லர். பாம்பை ஆட வைத்து பெற்ற பணத்தை பத்திரமாக தனது பக்கெற்றுகளில் போட்டு விட்டு பாம்பை மட்டும் மீண்டும் கூடைக்குள் தள்ளிவிடும் குறவனைப் போன்ற சில அரசியல்வாதிகளினால்தான் இன ஐக்கியம் சீர்குலைக்கப்பட்டது. அதன் பாதிப்புகளுக்கு இரு சமூகங்களும் விலை கொடுக்கும் நிலைமையும் ஏற்பட்டது.

இவ்வாறான நிலைமைகளை எதிர்காலத்தில் இல்லாம் செய்யும் ஒரு சந்தர்ப்பம் இன்று கிழக்கு மாகாணத்துக்கு கிடைத்துள்ளது. அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியவர்கள் மக்களை விட அரசியல்வாதிகளே. இன்று கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள இரு இனங்களின் பிரதிநிதிகளின் இணக்கப்பாடானது இந்த மாகாணத்தில் வாழும் மொத்த தமிழ் பேசும் சமூகத்தினதும் நன்மைக்காகப் பயன்பட வேண்டும்.

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி, கட்டமைப்பு உட்டபலான அனைத்து விடயங்களை ஐக்கியத்துடன் முன்னெடுத்தும் மக்கள் நலனில் அக்கறை பணியாற்றுவதன் மூலம் மற்ற மாகாணங்களுக்கு கிழக்கு ஒரு முன்னுதாரணமாக நிச்சயமாக திகழும் என்றால் அதில் கேள்வித்தன்மைக்கே இடமில்லாமல் போய்விடும் என்பது மட்டும் நிச்சயம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -