கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை!

எம்.ஐ.எம்.றியாஸ்,எம்.வை.அமீர்-
கிழக்கு மாகாண சபை முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் வகிக்கும் பிரதி தவிசாளர் பதவியினை உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என்று கிழக்கின் ஆட்சியில் இருக்கும் உறுப்பினர்களால் இன்று(31.03.2015) கிழக்கு மாகாண சபையில் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

குறிப்பிட்ட பிரேரணையை சபையில் கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல்.தவம் சமர்ப்பித்து உரையாற்றினார்.

தேசிய மட்டத்தில் அரச அதிகாரம் மாற்றப்பட்டு பாராளுமன்றத்தில் புதிய ஆட்சி ஒன்று மக்களால் அதிகார பீடம் ஏற்றப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் மாத்திரமன்றி மாகாண சபையின் மக்கள் பிரதிநிதிகளும் இலங்கை மக்களின் ஜனநாயக ரீதியான தீர்வை ஏற்று கௌரவித்து சிரம் தாழ்த்தி மாகாண சபைகளிலும் அவைகளை பிரதிபலித்தார்கள்.

இப்பிரதிபலிப்பின் காரணமாக கிழக்கு மாகாண சபையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது தெட்டத் தெளிவானதென்றாகும். கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்ட இம் மாற்றம் காரணமாக முதலமைச்சர் உள்ளடங்கலாக அமைச்சர்கள் வாரியத்திலும் மாற்றம் ஏற்பட்டதோடு சபைக்கான தவிசாளரினது பதவி விலகலும் நிகழ்ந்துள்ளது.

அப்போதைய தவிசாளரினால் பதவி விலகலுக்கான கடிதத்தினை உப தவிசாளர் பெற்றுக் கொண்ட அல்லது ஏற்றுக் கொண்ட 2015.02.27 ஆம் திகதியிலிருந்து புதிதாக தவிசாளர் தெரிவு செய்யப்பட்ட 2015.03.16 ஆம் திகதி வரையான சுமார் இரு வாரங்களாக அவைச் செயலகம் ஒரு நிரந்தர தவிசாளர் இன்றி செயற்பட்டு வந்துள்ளது.

இக்கால கட்டத்தில் பதல் தவிசாளர், தவிசாளரின் கடமைகளை ஏற்று அதற்கேற்ப செயற்படுதல் வேண்டும் என்பது மாகாண சபைகள் சட்டத்தினாலும் கிழக்கு மாகாண சபையின் செயன்முறை விதிக்கோவையின் ஏற்பாடுகளினாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எக்காரணத்தைக் கொண்டும் அவைக்கான பதவி வழிகளில் நியாயமான அல்லது தவிர்க்க முடியாத காரணங்களின்றி அப்பதவி வழிகளை வெற்றிடமாகவோ அல்லது செயற்பாடற்றதாகவோ நிலவுவதற்கு இடமளிக்க முடியாது.

காரணம் என்னவென்றால் கிழக்கு மாகாணத்தின் அவை மக்களின் பெறுமதிமிக்க வாக்குகளைக் கொண்டும் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிகளைக் கொண்டும் அமைக்கப்பட்ட அவையாகும்.

எனவே அவையின் பின்னடைவான செயற்பாடுகளினால் பாதிக்கப்படுவது இவ் அவையை அமைத்த மக்களேயன்றி வேறு எவருமில்லை.

மேலும் இவ்வவையின் செயற்படுகளை ஒழுங்கு படுத்தி நெறிப்படுத்தி செயற்படுத்துவது இந்த அவைக்கான செயலகம் இவ் அவையின் செயலாளர் தனது கடமைகளை பூரணமாக செயற் படுத்தி வகை கூறுவதற்கு சட்டத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஓர் அவைத்தவிசாளரின் பதவியை வெற்றிடமாக வைத்துக் கொண்டு முழுமையான செயற்படோன்றை அவையிடமிருந்து மக்களே இம் மாகாண சபையோ எதிர் பார்க்க முடியாது.

எனவே கிழக்கு மாகாணத்தின் மாகாண சபையின் முதலமைச்சர் என்ற வகையில் முதலமைச்சர் அவர்கள் அவையின் செயலாளர் எம்.சீ.எம்.சரீப் அவர்களை இவ் அவையில் வெற்றிடமாக உள்ள தவிசாளர் பதவிக்கு பொருத்தமான ஒருவரை தெரிவு செய்து நியமிக்க சபையைக் கூட்டுவதற்கான ஏற்பாடு செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இவ் அழைப்பை ஏற்று அதற்கு செயல் வடிவம் கொடுக்க முனைப்பு காட்டிய செயலாளர் அவர்கள் முதலமைச்சருக்கு பதிலாக கூறிய விடயம் தவிசாளரின் கடமைகளை தவிசாளர் இல்லாத போது அல்லது அப் பதவி வெற்றிடமாகி இருக்கின்ற போது அக்கடமைகளை ஏற்று சட்ட ரீதியாக செயற்படுத்த வேண்டிய பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் அவர்கள் முதலமைச்சரால் நிர்ணயிக்கப்பட்ட தினத்தில் அக் கூட்டத்தைக் கூட்ட தன்னால் அனுமதி வழங்க முடியாது.

கடந்த சபைக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்ட திகதியான 2015.03.24 ஆம் திகதியில் மாத்திரமே தன்னால் அவையைக் கூட்ட அனுமதிக்க முடியும் எனவும் அதற்கு முந்திய திகதியில் எக் காரணத்தைக் கொண்டும் அவையைக் கூட்ட முடியாது என்றும் மறுதலித்ததான ஒரு தகவல் முதலமைச்சர் அவர்களுக்கு எட்டியிருந்தது.

முதலமைச்சர் அவர்கள் இவ் அவையில் அங்கம் வகிக்கும் 37 கௌரவ உறுப்பினர்களில் ஒருவர் என்பதோடு அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளில் அவரே அமைச்சர்கள் வாரியத்தின் பிரதானி என்பதாகவும் அவ் அமைச்சர்கள் வாரியம் கௌரவ ஆளுநர் அவர்களுக்கு அவரது நிறைவேற்று அதிகார கடமைகளை செவ்வேன நிறைவேற்ற அதிகார கடப்பாடுவுடையது என்பதாகவும் உள்ளது.

இந்நிலையில் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் அவர்கள் மேற் சொன்னதை மறுத்துரைப்பானது கீழ் விபரிக்கபடுமாறு இவ் அவையை பின்னடைவுக்கு இட்டுச் செல்ல காரணமாக அமைந்துள்ளது.

சபையில் பல காரணங்களை முன் வைத்து பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் அவர்கள் இக் கௌரவ அவையில் ஏகமனதாக மனமுவந்து வழங்கப்பட்ட இப் பிரதி தவிசாளர் பதவிக்கு எதிர் காலத்தில் பொருத்தமானர் என்ற நம்பிக்கையை இழந்துள்ளோம்.

எனவே எமது மேற்படி அவ நம்பிகைக்கு அங்கீகாரம் பெறும் நோக்கத்தோடு இப்பிரேரணையை அவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சமர்ப்பிக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக சபையில் ஆராயப்பட வேண்டும் எனவும் உரை நிகழ்த்த வேண்டும் என்றும் முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை முன் வைத்த கோரிக்கைக்கமைவாக 30 நிமிடங்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு உரை நிகழ்த்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபையிர் சபையின் பிரதித் தவிசாளர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று 19 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்ததோடு, பதவியில் இருக்க வேண்டும் என்று 11 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

அதன் பின்னர் புதிய பிரதித் தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் இந்திரகுமார் பிரசன்னா நியமிக்கப்பட்டார். இவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் முன்மொழிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபையிர் ஆமோதித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -