இந்த விஷேட பொதுச் சபை அமர்வானது அண்மைக்காலமாக சம்மாந்துறையில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த சுயேட்சைக் குழு மூலமாக சம்மாந்துறைக்கு பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றுக்கொள்வது எப்படி எனும் விடயத்தை ஆராயும் முகமாக கூட்டப் பட்டது என்று கூறலாம் .
உண்மையில் சம்மாந்துறையில் அண்மைக்காலமாக முக நூல்களிலும் சில இணையத் தளங்களிலும் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருந்த செய்தி இந்த சுயேட்சைக் குழு மூலமாக சம்மாந்துறைக்கு பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றுக்கொள்வது எனும் விடயமாகும்.இவ்விடயம் சம்பந்தமாக ஆராய இப்படியொரு கூட்டம் அவசரமாகக் கூட்டப்பட்டது உண்மையில் பாராட்டப் பட வேண்டியதாகும்.
சம்மாந்துறைக்கு இம்முறை எப்படியாவது பாராளுமன்ற உறுப்பினர் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்ட சம்மாந்துறை மக்களில் ஒரு குழு இப்படி ஒரு முயற்சியை ஆரம்பித்து மக்கள் மத்தியில் சம்மாந்துறைக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனும் கவலையை ஊட்டியதும் வரவேற்கத்தக்கது.
இலக்கு சரியாக இருந்தாலும் அதனை அடைவதற்கான முயற்சிகளும் வழிகளும் சாத்தியமானதாக இருக்க வேண்டும்.அப்போதுதான் நாம் எந்த ஒரு இலக்கிலும் வெற்றிபெறுவோம்.
இப்படியான சூழ் நிலையில் கூட்டப்பட்ட மேற்படி பொதுக்கூட்டம் சம்மாந்துறைக்கான பாராளுமன்றப் பிரதிநிதியை இப்போதிருக்கின்ற விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழும் வர இருக்கின்ற தொகுதிவாரிப் பிரதிநிதித்துவத்தின் கீழும் பெற்றுக்கொள்வதற்க்கான சாத்தியங்கள் சம்பந்தமாக கலந்துரையாடி, வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று இறுதியில் பின்வரும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
சாம்மாந்துறையை மையப்படுத்தியோ அல்லது மாவட்டம் தழுவிய ரீதியிலோ ஒரு சுயேட்சைக் குழுவினை நிறுத்தியோ பாராளுமன்ற உறுப்பினரை சம்மாந்துறை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் சாத்தியங்கள் அறவே இல்லை என்பதால் சுயேட்சைக் குழுவை நிறுத்திப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டி இடுவதை சம்மாந்துறை அனைத்துப்ள்ளிவாசல்களின் ஒன்றியமும் சம்மாந்துறையின் உயர் சபையுமான மஜ்லிஸ் அஷ்ஷூராஹ் முற்று முழுதாக நிராகரிக்கின்றது.
மேலும் சமாந்துறைக்கான பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு மிகச் சாத்தியமானதும் சாதகமானதுமான கட்சிகளுடன் பேசி முடிவெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இவ்விடயம் சம்பந்தமாக இன்னும் பல கலந்துரையாடல்கள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இங்கே குறிப்பிட்டுக் கூற முடிவது என்னவென்றால்...
சம்மாந்துறைப் பட்டினத்தின் மொத்த முஸ்லிம் வாக்குகளும், அதில் சராசரியாக கடந்த தேர்தல்களில் அளிக்கப்பட்டு வருகின்ற வாக்குகள் குறித்த விளக்கமும் ,
மேலும் விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் மாவட்டப் பட்டியல் முறையின் கீழ் ஆசனம் ஒதுக்கப்படுகின்ற விதங்களும் ,
மாவட்டத் தேர்தல் முடிவுகளில் கட்சிகளுக்கிருக்கின்ற செல்வாக்கு மற்றும் அவைகளின் வாக்கு வங்கிகள் கொண்டிருக்கின்ற வாக்கின் எண்ணிக்கைகள் குறித்த விளக்கங்களும்,
மேல் குறிப்பிட்ட விடயங்கள் குறித்து சம்மாந்துறை மக்களில் சிலர் கொண்ட விளக்கமின்மையும் தான்
இந்த சுயேட்சைக் குழு மூலமாகப் பாராளுமன்ற உறுப்புரிமையை பெற முடியும் எனும் அவர்களது முடிவாகும் என அவ்வுயர் சபை தீர்மானித்தது.
இந்த சுயேட்சைக் குழுவானது நமது ஊருக்கான பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ளும் முயற்சிக்குப் பாரிய தடையாக அமைந்து விடுமோ எனும் அச்சத்தில் உண்மையில் நான் கடந்த சில வாரங்களாக இருந்தேன்.....ஆனால் இப்போது இவ்வுயர் சபை இதை விளங்கி இருப்பது ஆறுதலைத் தருகின்றது.....
உண்மையில் சுயேட்சைக் குழு ஒன்றின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினரைப் பெற முடியாது என்பதே நூறு வீத உண்மை என்பது எனது அபிப்பிராயம்.
அவ்வாறு பெற முடியும் என்று சொல்பவர்கள் அதற்கான சாத்தியங்களையும், கணக்குகளையும், முறைகளையும் காட்டவேண்டியது சமூகப் பொறுப்பாகும் என கருதுகின்றேன்.
முகம்மத் ரனூஸ் பி.ச.உ
சம்மாந்துறை
