தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு ஆலையடிவேம்பு பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலம் மற்றும் அம்பாறை மாவட்ட இணையம் ஆகியன இணைந்து 29.03.2015ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணியளவில் அக்கரைப்பற்று – 09ம் பிரிவு விகாரை வளாகத்தில் மக்கள் பங்கேற்புடனான வழிப்புணர்வு மற்றும் சிரமதான நிகழ்வொன்றை ஆலையடிவேம்பு பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி Dr.ஏ.எம்.முனவ்வர் அவர்களின் தலைமையில் நடாத்தியது.
இதன்போது இன்றைய நாளின் நோக்கம் என்ன? ஏன் நடாத்தப்படுகின்றது? எங்களுடைய பங்களிப்பு என்ன? டெங்கு நோயின் வளர்ச்சி எப்படி உள்ளது? அதனை எவ்வாறு அழிக்கலாம்? எம்மையும் பாதுகாப்பதோடு மற்றவர்களையும் பாதுகாப்பது எவ்வாறு? இதற்கான சட்ட நடவடிக்கைகள் என்ன? போன்ற பல்வேறு தகவல்கள் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் திரு: கேதீஸ்வரன் அவர்கள் தெளிவுரையாற்றியதுடன் சமயரீதியான இணைந்த செயற்பாடுகளின் ஊடாக மக்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் என்பவற்றின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு மும்மதத்தவர்களும் இவ்விடத்திற்கு வந்துள்ளது எனக்கு மிகவும் சந்தோசம் அளிப்பதாகவும், அதுமட்டுமன்றி அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இவ்விடம் சிரமதானம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் விகாராதிபதி ஹேகொட இந்திரசார தேரர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து அக்கரைப்பற்று-09 கிராம சேவைப் பிரிவில் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் ட்ரெக்கடர் வண்டிகள் 02 இரண்டும் வீதி வீதியாகச் சென்று கழிவுகளை அகற்றிச் சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இத்துடன் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையத்தினால் சுகாதார வைத்திய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவுடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட துண்டுப் பிரசுரமும் அங்கு கலந்து கொண்டோருக்கும், வீட்டுத்தரிசிப்பின் போதும், சந்தையில் விற்பனையில் ஈடுபட்டிருந்தவர்கள் பொதுமக்கள் ஆகியோருக்கு வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி Dr. ஏ.ஏம்.முனவ்வர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான திரு: கேதீஸ்வரன், திரு: மனோரஞ்சிதன், திரு: மகேஸ்வரன், அக்கரைப்பற்று – 09 கிராமசேவை உத்தியோகத்தர் : திரு: பத்மன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு: ஜோன்ராஜு, அக்கரைப்பற்று விகாராதிபதி, அம்பாறை மாவட்ட இணையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் : ஜனாப்.எம்.ஐ.நௌசாத், மகாசக்தி அமைப்பின் இணைப்பாளர் திரு: ஆறுமுகம் அசோகா, ஆலையடிவேம்பு பிரதேசசபை ஊழியர்கள், இப்பகுதியில் செயற்படுகின்ற அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.












