புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ள இன்றைய சுதந்திர நாளில் நினைவிற் கொள்ளவேண்டிய அம்சங்கள்.

அட்டாளைச்சேனை மன்சூர்-

லங்கையின் 67வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. கடந்தமுறை கேகாலை நகரில் இடம்பெற்றது. இம்முறையும் அதேபோன்று அம்பாந்தோட்டைப் பிரசேத்தில் நடைபெற ஏற்பாடாகியிருந்த நிலையில் இம்முறை புதிய அரசின் புதிய தலைவர் அதனை மாற்றியமைத்து கொழும்பில் இடம்பெறவைத்துள்ளார். 

உண்மையில் சுதந்திர இலங்கையின் வரலாற்றுப்பின்னணியினைப் பார்க்கின்றபோது காலத்திற்குக்காலம் இலங்கை பல்வேறுபட்ட ஆளுகைகளுக்குள் உட்பட்டு சுதந்திரத்திற்கான விடுதலைநோக்கிய பயணத்தின் கஷ்டங்களை அனுபவித்துள்ளமை வரலாறாகும். சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் சிறுபான்மையினர் தொடர்பான சுதந்திர வேட்கைக்கு பெரும்பான்மையின அரசுகள் கொண்டிருந்த மேலாதிக்கம் இன்றுவரையிலும் தொடர்வதாகவே உள்ளது. காரணம் இன்னும் நாட்டுப்பற்றாளர்களை சுதந்திரத்தின் வெளிப்பாடு காண்பிக்கவில்லை.

 அதாவது சுதந்திரமானது வகுப்பாளர்களையும், இனவாதிகளையும் வளர்த்துள்ளதே தவிர இலங்கையன் என்கிற கருத்தாளத்தை கொண்டுள்ள மக்களை வளர்க்கத் தவறிவிட்டன. இதனால் இனரீதியான கண்ணோட்டத்துடன் தத்தமது இனத்தின் மீதான பற்றின் காரணமாக மற்ற இனம் சந்தேகக் கண்கொண்டு பார்க்க முற்பட்டதன் விளைவு நாட்டில் பாரிய விளைவுகள் ஏற்படலாயின.

உண்மையில் இந்தச் சுதந்திரத்தைப் பெறுவதற்காக அன்று பல்லாயிரக்கணக்கான மூவினத்தைச் சார்ந்தோர்களது உயிர்களும், அவர்கள உடமைகளும் தியாகம் செய்யப்பட்டுள்ளதை இந்நாளில் நினைகூறவேண்டியது முக்கியமாகும். 

அகிம்சா மூர்த்தி அண்ணல் காந்தியவர்கள் இந்தியாவின் விடுதலைநோக்கிய பயணத்தில் மக்களை ஒன்றுதிரட்டிய வரலாற்றுப் பின்னணியில் இந்தியாவுக்கான சுதந்திரம் கிடைத்ததைத் தொடர்ந்து இலங்கைக்கும் சுதந்திரத்தை வழங்கவேண்டிய சூழ்நிலைக்குள் பிரித்தானிய பேரரசு தள்ளப்பட்டிருந்தாலும், அதற்காக பாடுபட்ட மூவினத் தலைவர்களையும் இன்றைய நாளில் நாம் மறந்துவிடலாகாது.

இலங்கைக்குக் கிடைத்த சுதந்திரக் காற்று வெறுமனே கேட்டவுடன் கிடைத்ததொன்றல்ல. நாட்டின் பற்றுமிக்க பல்லாயிரக்கணக்கான வீரர்களினது தியாகத்தின் பின்னணியில் விளைந்தது என்பதை யாரும் மறக்க முடியாது. எமது நாட்டு சுதேசிகளின் ஆட்சிகளைத் தொடர்ந்து இலங்கையின் அமைவிடத்தின் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்ட ஏகாதிபத்தியவாதிகள் 1505ஆம் ஆண்டில் தம்மை அடிமைப்படுத்த தலைப்பட்டனர். 

அன்றிலிருந்து வெளிநாட்டினரின் ஆதிக்கத்தின்கீழ் இருந்துவந்த எமது நாட்டை ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் தத்தமது தேவைகருதி பயன்படுத்திக் கொண்டனர். நாட்டின் அபிவிருத்தியில் கவனம் கொள்ளாது அவர்களது நலனை முன்னிலைப்படுத்துவதிலேயே கருத்தாய் இருந்தனர். இதற்காகவேண்டியே ஒவ்வொரு திட்டத்தையும் ஆரம்பித்திருந்தனர். அப்பொழுதெல்லாம் உள்நாட்டு மக்கள் கிளர்ந்தெழுந்தனர். அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. 

முடிவுகளுக்கான பாதையோ மிகவும் கரடுமுரடாகவே இருந்தது.
தோற்றுப்போன அடிமை சாசனத்தின் கீழ் எம்மக்கள்; வெளிநாட்டினரின் கட்டுப்பாட்டினுள் இருந்தபோது சுதந்திரத்தை அடைவதில், தாய் நாட்டுக்காக போராடிய வகையில் இந்நாட்டு மக்கள் இன, மத பேதமற்ற ஒரேதாய் பிள்ளைகள்போன்று ஒற்றுமையுடன் தமது எதிர்ப்பினைக் காட்டியமையினால் 1948.02.04ஆந்திகதி விடுதலை கிடைத்தது. 

அதாவது எம்மை நாம் ஆளுகின்ற நிலைக்கு வந்தது. வளம் கொழித்த நாட்டை சீரழித்து, வெறுமையுடன் ஒப்புவித்திருந்தனர் அந்நிய ஆதிக்கவாதிகள். அதுமாத்திரமான என்ன எம்மிடையே பிரித்தாளும் தந்திரத்தை தந்திரோபாயமாக உள்ளீர்ப்புச் செய்து, அதனை சமயம்சார்ந்த விடயங்களுக்குள் ஒப்புவித்து குழப்பங்களுக்கும் தூபமிட்டுக் கொண்டனர். இனங்களுக்கிடையிலான இடைவெளியை அதிகரிப்பதில் வெற்றியும் கண்டனர். 

ஏகாதிபத்தியவாதிகளோ ஒற்றுமைப்பட்டிருந்த மக்களிடையே குழப்பங்களை விளைவித்தனர். உதாரணமாக 1915ஆம் ஆண்டில் சிங்கள – முஸ்லீம் கலவரத்தைக் குறிப்பிடலாம். அன்றைய தலைவர்கள் மிகவும் நிதானமாக நடந்து கொண்டதால் இக்கலவரம்; பின்னர் அடங்கிப்போனமை வரலாறாகும்.
இதேபோன்றொரு களோபரத்தை கடந்த ஆட்சியின்போது பொதுபலசேனா என்கிற இனவாதத்தினர் இலங்கைவாழ் முஸ்லிம்களுக்கும் பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கும் இடையே புரிந்துணர்வற்ற தன்மையை ஏற்படுத்தி நூற்றாண்டு வரலாற்றை இனக்குரோதத்தின் வெளிப்பாடாக அபாயா, தொப்பி, பாங்குசொல்லுதல், ஹலால், ஹறாம், பள்ளிவாசல் உடைப்பு... போன்ற பல்வேறு சொற்பிரயோகங்கள் ஊடாக வெளிப்படுத்தி சிறுபான்மைச் சமூகத்தின்மீது பாரிய பாய்;ச்சல் ஒன்றை மேற்கொண்டு இந்நாடு சிங்கள மக்களுக்கே உரியது சிறுபான்மையினர் வந்தேறு குடிகள் அவர்கள் வெளியேறவேண்டிய காலகட்டம் வந்துவிட்டது என்கிற கோதாவில் குறிப்பாக சிறுபான்மை முஸ்லிம்கள் மீது கிறீஸ்பூதவடிவில் பயங்காண்பித்தனர். 

இதனை முறியடிக்கும் வித்தில் புதியதோர் தந்திரோபாயத்தின் அடிப்படையில் புதிய ஆட்சியாளர்கள் முன்னால் முட்டியிடவேண்டிய கட்டத்திற்கு வித்திட்ட மைத்திரி அரசு கடந்த 67ஆண்டுகால வரலாற்றில் இனரீதியான பிளவுகளுக்கு முடிவுகட்டும் வகையில் சுதந்திர இலங்கையை சிறுபான்மைச் சமூகத்தினர் தம்முடைய வாக்குப்பலத்தினைக் ஒன்றுதிரட்டி ஒற்றுமையுடன் கையளித்துள்ளனர்.

அன்று அநகாரிக தர்மபால, ஆறுமுக நாவலர், அறிஞர் சித்தி லெவ்வை, வாபிச்சி மரைக்கார் போன்றோர் தங்களது சமரீதியான நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்தி, தத்தமது மார்க்கத்தை வளர்தெடுப்பதில் கங்கஙனம் கட்டிக்கொண்டு சமூகத்தின் கீர்த்திமிக்கத் தலைவர்கள், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியாது ஒற்றுமையுடன் சுதந்திரத்திற்காக தம்மை அர்ப்பணித்தனர். 

மத்தியதர வர்க்கத்தினரின் ஏகபோக உரிமையாக இருந்துவந்த அக்கால ஆங்கிலக்கல்வி முறையிலமைந்த நடவடிக்கைகள் இனரீதியான பிளவுகளுக்கும், பிரிவுகளுக்கும் வித்திட வழிவகுத்திருந்தமையினால், சமயப்பற்றுடன் தாம் கற்ற கல்வி மூலமாக ஒன்றுபட்ட ஒற்றுமைகொண்ட இலங்கையினைப் பெறுவதில் பெரும்பான்மையினருடன் இணைந்து சிறந்த வழிகாட்டலுடன் சிறுபாண்மைத் தலைமைகள் நல்லுறவு பூண்டிருந்ததை வரலாற்றின் படிகளில் காணலாம்.

அந்த அடிப்படையில் சமய ரீதியான கல்விக்கு முக்கியத்துவம் வழங்கிய நிலையில் அன்றைய தலைவர்கள் சமயரீதியான சித்தாந்தங்களை தம்மினத்தாரிடையே ஊட்ட முற்பட்டு அதில்; வெற்றியும் கண்டனர். 

அந்தவகையில் சமூதாய நலனில் அக்கரைகொண்ட தலைவர்களாக ஹென்ரி ஸ்டீல் ஒல்கொட், அநாகரிக தர்மபால, குணாநந்த தேரர், ஸ்ரீ ஆறுமுக நாவலர், சேர் பொன்னம்பலம் இராமநாதன், அறிஞர் சித்திலெவ்பை, கொடைவள்ளல் வாப்பிச்சி மரைக்கார், அப்துர் றகுமான், ஓராபிபாஷா, அப்துல் அஸீஸ், சேர் ராசிக் பரீத், டாக்டர்கலீல், எம்.எஸ் காரியப்பர், லத்தீப் சின்னலெவ்பை போன்றோர்கள் கல்வியின் மறுமலர்;ச்சிக்குரிய வழிவகைகளை ஏற்படுத்தி தான் சார்ந்த சமுதாயத்திற்கு உதவிசெய்திருந்தமை நினைவிற்கொள்ளத்தக்கதாகும்.

மட்டுமன்றி தேசிய விடுதலை நோக்கிய பயணத்தில் பல்வேறு இயக்கங்கள் ஊடாக தலைவர்கள் பலர் தங்களது பங்களிப்பினை நல்கியிருந்தனர். மத்தியதர வர்க்கத்தினரிடம் காணப்பட்ட செல்வச் செழிப்பு மற்றும் கல்வியறிவு போன்றவற்றை பயன்படுத்தி அரசியல் பலத்தைக் தம்பக்கம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்தத் தொடங்கினர். 

அந்தவகையில் தொழிலாளர்களின் நலனில் அக்கரைகொண்டு உழைத்தன் காரணமாக 1893ஆம் ஆண்டில் அச்சகத் தொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது போராட்ட வடிவத்திற்கு மத்தியதர வர்க்கத்தினரின் ஆதரவும் கிடைத்தது. இதன் பின்னணியில் இடதுசாரி தலைவர்கள் பாரியளவிலான பங்களிப்பினையும் நல்கியிருந்தனர்.

தேசிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதன் பிற்பாடு சமயரீதியான விழிப்புணர்வுகள் மேம்படலாயின. பௌத்தம் இந்து, இஸ்லாம் போன்ற சமயரீதியான மறுமலர்;ச்சிக்கு மத்தியதர வர்க்கத்தினரின் கல்வியும் செல்வமும் பக்கபலமாயின. மேலும், தேசிய மறுமலர்ச்சி இயக்கத்தினரால் கலாசார மறுமலர்;ச்சிக்கும் அப்பால் அரசியல் சீர்திருத்தங்களுக்கான போராட்டங்களும் தொடங்கப்பட்டன. 

தேசிய மது ஒழி;ப்பு இயக்கத்தின் ஊடாக தேசிய தலைவர்களான டி. எஸ் சேனநாயக்க, எப்ஆர். சேனநாயக்க, அநாகரிக தர்மபால, எட்மன் ஹேவாவிதாரண, சேர் டிபி. ஜயதிலக, டபிள்யு ஏ.சில்வா, பியதாஸ சிரசேன, ஆத்தர்.வி. தியெஸ் போன்றோர்கள் மதுபாவனைக்கு எதிரான பிரசங்கிகளாக தமது போராட்ட வடிவத்தை முன்கொண்டனர். பிரித்தானிய ஆட்சியாளர்கள் கதிகலங்கும் அளவுக்கு இவ்வியக்கத் தலைவர்கள் தேச விடுதலைக்கும் வெளிப்படையான ஆதரவைக் கொடுத்திருந்தனர்.

அக்காலகட்டத்தில் தெளிவில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி சிங்கள முஸ்லீம் கலவரத்தை சாதகமாக திசைதிருப்ப முயன்று இறுதியில் நாட்டுப்பற்றுக்காகவும், விடுதலை நோக்கிய போராட்டத்தின் விளைவாக முறியடிக்கப்பட்ட இனவாதத்தையும் இன்றைய நாளில் நினைவுகூறல் முக்கியமாகும். பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் அரசியல் பின்னணியில் பல முஸ்லீம் தலைவர்கள் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். 

'ஆங்கிலக் கல்வியானது சமயத்திற்கு முரணானது' என்கிற வாதம் அக்கால முஸ்லீம்கள் மத்தியில் வலுப்பெற்றபோது கல்வியின் மூலமாக சமுதாயம் உயர்வடைவதன் அவசியத்தை பல முஸ்லீம் தலைவர்களுடன் இணைந்து சட்டசபையிலும் வெளியிலும் கலாநிதி ரீபி. ஜாயா அவர்கள் 1914ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 'சிலோன் ரிவீவ்' என்கிற சஞ்சிகை வாயிலாக எழுதிய கடிதம் முஸ்லீம்களின் கல்விக்கு அவர்கொடுத்த ஒத்தடமாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. கொழும்பு சாஹிறாவின் அதிபராக இருந்து செய்த சேவைகளை முஸ்லிம் சமூகம் மட்டுமன்றி ஏனைய சமூகத்தினருக்கும் பயன்தரும் விடயமாகவே அன்று பார்க்கப்பட்டது.

1921ஆம் ஆண்டின் 'மனிங் யாப்பு சீர்திருத்தத்தம், 1931ஆம் ஆண்டில் டொனமூர் சீர்திருத்தத்தங்களின் விளைவாக சர்வஜன வாக்களிப்பு உரிமை வழங்கப்படலாயிற்று. இதன்பயன் இலங்கையின் சுதந்திரத்திற்;கான வழி மிக இலகுவாகத் திறக்கப்பட்டதுடன், தொடர்ந்து ஏற்பட்ட அரச நிருவாகச் சிக்கல்கள்கள், அதிகாரத் தன்மை, அமைச்சு நியமனம், வாக்குரிமை போன்ற விடயங்கள் காரணமாக தேசியத் தலைவர்கள் ஒன்றினைந்து போரட்டங்களை முன்னெடுக்க ஏதுவாகின. இதன் பின்னணியில் சோல்பரி பிரபுவின் தலைமையில் உருவாக்கப்பட்ட 'சோல்பரி யாப்பு – 1947' இல் உருவாக்கப்பட்ட கையுடன், நாட்டின் சுதந்திரத்திற்கான கதவும் திறக்கப்படலாயிற்று. 1947ஆகஸ்டில் நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து முதலாவது பிரதமராக கௌரவ டி.எஸ். சேனநாயக்க அவர்களும், ஆளுநராக சேர் ஒலிவர் குணதிலகவும் தெரிவாகினர்.

இவ்வாறாக பல்வேறு தலைவர்கள் ஒன்றிணைந்து பெற்ற சுதந்திரமானது முழுமையான வகையில் எம்மை வந்தடையவில்லை என்றுதான் கூறவேண்டும். காலத்திற்குக்காலம் அரசுகள் மாறினாலும் ஆளுகின்ற தலைமைகள், அரசியல்வாதிகள் தங்களது நலன்கருதி மக்களை பிரித்தாள முற்பட்டனர். மூவினமும் ஓரினமாய் பெற்ற சுதந்திரத்தை சரியான முறையில் கொண்டாட முடியாமல் போனமை துரதிஷ்டமே. 

தமிழ்பேசும் மக்களிடையே பிரச்சினை, வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள், கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சரா? தமிழ் முதலமைச்சரா? என்கிற ஒற்றுமையற்ற தன்மைகள் காரணமாக ஒவ்வொரு இனமும் மற்ற இனத்தின் மீது சந்தேகத்துடன் பார்க்க முற்பட்ட காலத்தை மறைக்க இன்றைய தலைவர்கள் இந்த சுதந்திர நாளில் திடசங்கற்பம் பூணவேண்டும். இது நடைமுறைச்சாத்தியமான விடயம் என்பதை முதலில் மனதில் இருத்திக் கொள்ளவேண்டும். அப்போதுதான் இது சாத்தியமாகும்.

இன்றைய மைத்திரிபால சிறிசேன அவர்களின் புதிய ஆட்சியில் ஒற்றுமை தலைத்தோங்கும் வகையில் நல்லாட்சிக்கான அத்திவாரம் இடப்படும் என்கிற நம்பிக்கைள் துளிர்விடத்தொடங்கியுள்ளன. இந்த துளிரை கொய்துவிடாது வளர்த்தெடுக்க வேண்டிய பாரியபொறுப்பு குறிப்பாக அரசியல்வாதிகளின் கைகளிலேயே ஒப்படைக்கப்படுகின்றது. இதன் காரணமாக கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான நடத்தைவாத போக்குகள் மதரீதியான பிரிவுகள் அற்ற நல்லாட்சி முறையிலான அனைவரும் இந்நாட்டு மக்களே என்கிற இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப நாமும் இணைந்து முயற்சிக்கவேண்டும். எம்மை விட்டுப்பிரிந்திருந்த மனிதத்துவத்தை இன்றைய நாட்களில் தேடுவோம். தெரிந்தெடுப்போம். இன்றைய சுதந்திரத்திற்காக அன்று நம்முன்னோர்கள் பெற்ற கடனுக்காக நாம்; அவர்களை இந்நாளில் நினைவுகூறுவோம். 

இனரீதியான பிளவுகளுக்குள் எம்மை தள்ளவும், பிரித்தாள நினைக்கின்ற அரசியல் வாதிகளையும் விரட்டியடிப்போம் எமக்குளே காணப்படும் மனிதாபிமானத்தை வெளிப்படுத்த உறுதிபூணுவோம். சுதந்திரத்தின் தாகத்தையும், வீரத்தையும் ஒன்றுபட்டு வென்ற சுதந்திர நாட்டில் நாம் அனைவரும் ஒன்றாக கொண்டாடுவோம். மீண்டும் ஒரு சுதந்திரத்திற்காக எம்மை நாம் வருத்தாமல் பெற்ற சுதந்திரத்தை பாதுகாப்போம். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -