இலங்கை அரசியல் அமைப்பின் அத்தியாயம் 2 தலைப்பு 9 பின்வருமாறு கூறுகிறது
தலைப்பு 9
இலங்கை குடியரசானது பௌத்த மதத்திற்கு முதன்மையான இடம் வழங்கும் அதற்கமைவாக புத்த சாசனத்தை பாதுகாத்து போசிப்பது அல்லது வளர்ப்பது அரசின் தலையாய கடமையாகவும் இருக்கும் என்பதோடு தலைப்பு 10 மற்றும் 14 (1) (e) போன்றவற்றில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு ஏற்ப அனைத்து மதங்களுக்கும் மதிப்பளித்தல் வேண்டும்..
அத்தியாயம் 3 அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகின்றது.
தலைப்பு 10
ஒவ்வொரு தனிநபரும் சிந்தனை சுதந்திரம், அறநெறி மற்றும் மதச்சுதந்திரதிற்கும் உரித்துடையவராவார். ஒவ்வொரு தனி நபரும் அவரின் நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு மதத்தில் அங்கம் வகிப்பதற்கும், பின்பற்றுவதற்கும் சுதந்திரம் உடையவராவார்.
தலைப்பு 14
1. ஒவ்வெரு தனிநபரும் பின்வருவனவற்றிற்கு உரித்துடையவராகிறார்.
(a) வெளியீடு உள்ளடங்கலாக பேச்சுச்சுதந்திரம் மற்றும் கருத்துச்சுதந்திரம்
(b) அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம்
(c) சங்கங்கள் அமைப்பதற்கான சுதந்திரம்
(d) ஒரு தொளிட்சங்கத்தை அமைப்பதற்கும் இணைவதட்குமான சுதந்திரம்.
(e) தனியாகவோ அல்லது குழுக்களாகவோ, பொது இடங்களிலோ அல்லது பிரத்தியேகமாகவோ தன் மதத்தை பகிரங்கப்படுத்துவதற்கு அல்லது வணக்க வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பதற்கும் கடைப்பிடிப்பதற்கும் மற்றும் நடைமுறைப்படுத்தல், கற்பித்தல் போன்றவற்றிற்கும் சுதந்திரம் உண்டு.
(f) தனியாகவோ அல்லது குழுக்களாகவோ தனது சொந்த கலாச்சாரத்தை அனுபவிப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான சுதந்திரமும் தனது சொந்த மொழியை பாவிப்பதற்குமான சுதந்திரமும் உண்டு.
தலைப்பு-12
(1) சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதோடு சட்டத்தின் சமனான பாதுகாப்பிற்கும் அனைவரும் தகுதயுடையவராவர்.
(2) எந்த ஒரு பிரஜையும் இன, மத, மொழி, சாதி, அரசியல், பிறப்பிடம் போன்றனவற்றின் அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படமாட்டார்கள் எனவும் குறிப்பிடுகின்றது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் அமைப்புச்சட்டங்கள் இலங்கையின் சிறுபான்மை சமூகங்கள் தங்களின் மத அனுஸ்டானங்களை சுதந்திரமாக நிறைவேற்றிக்கொள்வதிற்கும் கலாச்சரத்தைப்பேணி பாதுகாப்பதற்கும் ஒரு சட்டரீதியான பாதுகாப்பை வழங்கி உள்ளது எனலாம்.
ஆனால் இவ்வாறு அரசியல் அமைப்பில் உரிமைகள் சுதந்திரங்கள் வழங்கப்பட்டபோதும் அவை வெறுமெனே எழுத்துருவில் மாத்திரமே காணப்படுகின்றது என்பதை கடந்த அரசாங்கத்தில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக பௌத்த அடிப்படைவாதிகளினால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக மேட்கொள்ளப்பட்ட மத நிந்தனைகள், இஸ்லாமிய சட்டங்கள், கலாச்சாரத்தின் மீதான தலையீடு மற்றும் கடும்போக்கு வன்முறைகள் என்பன இதனை தெளிவாக எடுத்தியம்புகின்றது. இதற்கு அப்போதிருந்த அரசாங்கம் கடும்போக்குவாதிகளுக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்காமை அனைத்து நிகழ்வுகளும் அரச அனுசரணையோடு நடந்தேறியது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. அதன் விளைவு "கொடுங்கோல் ஆட்சி நெடுங்கால் நில்லாது" என்பதற்கு ஒப்ப சிறுபான்மை சமூகங்களின் பலமான எதிர்ப்பின் காரணமாக கடந்த அரசாங்கம் தமது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போனது.
அதிஉயர் சட்டமாக கருதப்படும் அரசியல் அமைப்புச்சட்டத்தில் உரிமைகள், சுதந்திரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தும் சிறுபான்மை சமூகம் தங்களின் மதக்கடமைகளையும் கலாச்சாரத்தினையும் சுதந்திரமாக மேற்கொள்ள முடியாமல் இருப்பது கவலை அளிக்கிறது.
இந்த நாட்டில் இன நல்லுறவை நிலை பெற செய்வதினூடாக இஸ்திரமான அபிவிருத்தியை நோக்கி நகர வேண்டுமானால் இலங்கையில் புரையோடிப்போய் உள்ள இனவாதம் முற்றாக அளிக்கப்படுதல் வேண்டும்.
· ஒரு சமூகத்தின் மீது ஆதாரமற்ற விமர்சனங்களையும் பிரச்சாரங்களையும் முன்னெடுத்தல்,
· இனவாத மதவாத பேச்சுக்கள் அதனூடான செயற்பாடுகள்,
· மத நிந்தனை செய்தல்,
· ஒரு சமூகத்தின் மதக்கடமைகள் கலாச்சாரம் போன்றவற்றில் தேவை இல்லாமல் தலையீடு செய்தல், விமர்சித்தல்.
போன்றவற்றிற்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கக்கூடிய வலுவான சட்டம் உருவாக்கப்படுதல் வேண்டும்.
· அன்று பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக எவ்வாறு அவசரகாலச்சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டதோ அதே போன்று இன்று இனவாத தடைச்சட்டம் ,மத நிந்தனை தடைச்சட்டம் போன்றன நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.
சிறுமான்மை சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து அதற்கான பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்பித்தல் வேண்டும். பௌத்தர்களுக்கு அவர்களின் மத கலாச்சாரங்களை நிறைவேற்றிக்கொள்ள எந்தளவு உரிமையும் சுதந்திரமும் இருக்கின்றதோ அதற்க்கு நிகரான உரிமையும் சுதந்திரமும் இந்த நாட்டில் வாழும் தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் உண்டு. சட்டத்தின் சமனான பாதுகாப்பும் நீதியும் அன்று வழங்கப்படாமல் விட்டதனாலேயே அது இன்று அதிகாரப்பரவலாக்கல் கோரிக்கைவரை வந்து நிற்கின்றது.
தேசிய நல்லிணக்கத்தை கண்டுகொள்வதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் புதிய அரசில் கிடைத்திருக்கும் இவ்வேளையில் இனவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த நாட்டின் சிறுபான்மை சமூகங்களின் நின்மதியான வாழ்விற்க்கு தேவையான காத்திரமான நடவடிக்கைகளை மக்களிடம் இருந்து அதிகாரத்தை பெற்றுக்கொண்ட அரசியல் தலைமைகள் மேற்கொள்ள வேண்டும்.
பக்கீர் எம் இஸ்ஹாக் BA (Hons), NCE
மருதமுனை
