பசீர் சேகுதாவூத்
380/57, சரண வீதி,
கொழும்பு - 07
04.02.2015
கௌரவ. இரா. சம்பந்தன் பா.உ
தலைவர் - தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
கௌரவ. ரவூப் ஹக்கீம் பா.உ
தலைவர் - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
அன்புடன் இரு தலைவர்களுக்கும்,
கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரம்
மத்திய அரசில் மாற்றம் வேண்டி புதிய அரசாங்கம் ஒன்று உருவானதன் பின்னர் கிழக்கு மாகாண சபையிலும் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று தமிழ், முஸ்லிம் கட்சிகள் விரும்புகின்ற நிலையைத் தற்போது காண முடிகிறது. இந்த விருப்பத்தின் பிரதான வாதமாக தமிழ் முதலமைச்சர் வேண்டும் என்று பிரதான தமிழ் கட்சியும், முஸ்லிம் முதலமைச்சர் வேண்டும் என்று பிரதான முஸ்லிம் கட்சியும் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளன.
தமிழ், முஸ்லிம் மக்களுடைய அரசியல் அபிலாசைகள் இன்னும் நிறைவேறவில்லை. இச்சூழ்நிலையில் தமிழ் தேசியப் போராட்டங்களும், முஸ்லிம் தேசிய அரசியலும் யதார்த்தமாகவே தமது இறுதிக் குறிக்கோளை அடைந்து கொள்வதற்கு இரண்டு சிறுபான்மை இனங்களுக்கும் இடையில் ஒற்றுமையும், உடன்பாடும் அவசியமாகும். கடந்த காலங்களில் இவ்விரு சமூகங்களுக்கிடையிலும் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட முரண்பாடுகளும், கலவரங்களும் இனப்பிரச்சனைத் தீர்விலும், உரிமைகளை வென்றெடுப்பதிலும் எத்துணைத் தடைக்கற்களாக இருந்தன என்பதை வரலாறு நிருபித்து நிற்கிறது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி சம்பந்தமாக தமிழ் - முஸ்லிம் ஆகிய இரு தரப்புகளும் பல நாட்களாக அதிகப் பரப்புரைகளைச் செய்து வருவது மிகத் துரதிஷ்டவசமானது. யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் ஆரோக்கியமாக வளர்க்கப்பட்டு வந்த தமிழ் - முஸ்லிம் உறவுகளுக்கு இந்தப் பரப்புரைகளினால் பாதகம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை அடையும் ஒரு தரப்பின் இனத்துக்கு இப்பதவி மூலம் கிடைக்கும் அனுகூலங்களை விட, இப்பதவிப் பிரச்சினை காரணமாக தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு ஏற்படக் கூடிய பிரதிகூலங்களே அதிகமாக இருக்கும் என்பதோடு இதுவே தொடர்ந்தும் மிக மோசமான பிரிவினையையும், முரண்பாடுகளையும் இரு இனங்களுக்கிடையிலும் ஏற்படுத்தக் கூடும் எனவும் நான் அஞ்சுகிறேன்.
உண்மையில் இரண்டு தரப்பும் கோரிக்கை விடுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி குறித்த பரப்புரைகள் தத்தமது மக்களின் உரிமையும் அவர்களின் அபிலாசையுமே என்பதாக கட்டமைக்கப்படுகிறது. ஆனால் இக்கோரிக்கையின் உள்ளுண்மை யாதெனில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கே தேவைப்படுகிறது என்பதாகும்.
2008 தொடக்கம் இன்றுவரை தமிழரும் முதலமைச்சராக இருந்திருக்கிறார்; முஸ்லிமும் முதலமைச்சராக இருந்திருக்கிறார். இரண்டு சமூகங்களையும் சேர்ந்த சந்திரகாந்தன், நஜீப். ஏ. மஜீத் ஆகிய இருவருமே தத்தம் இரு இனங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தி முதலமைச்சர் பதவியை வகித்துள்ளனர். சந்திரகாந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர் இல்லை என்பதால் அவர் தமிழர் அல்லர் என்றோ, அதேபோல் நஜீப். ஏ. மஜீத் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவரில்லை என்பதால் அவர் முஸ்லிம் அல்லர் என்றோ ஆகிவிடாது. எனவே பதவிக்கு உரிமை கோரும் இரண்டு இனங்களையும் சேர்ந்தவர்கள் முதலமைச்சர் பதவி வகித்துள்ளனர்.
ஆயினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் கிழக்கில் உள்ள ஆதரவுத் தளத்தின் அடிப்படையிலும், இனவிகிதாசாரச் செறிவின் அடிப்படையிலும் முதலமைச்சர் பதவியைப் பெற்றுக்கொள்வதற்கான தகுதியைக் கொண்டிருக்கின்றன.
எனவே இவ்விரு கட்சிகளும் பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில், கிழக்கு மாகாண சபையில் எஞ்சியிருக்கின்ற இரண்டரை வருட ஆட்சிக் காலப்பகுதியை ஒரு வருடம், ஒன்றரை வருடம் என இரண்டாக வகுத்து, முதல் ஒரு வருட பதவிக் காலத்தை வகிக்க விரும்பும் கட்சி முதலிலும், ஒன்றரை வருட பதவிக் காலத்தை வகிக்க விரும்பும் கட்சி இரண்டாவதாகவும் முதலமைச்சர் பதவியை ஏற்க முன்வந்து இரு சமூகங்களுக்கிடையில் சுமுகமான நிலையை ஏற்படுத்துவதற்கு முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறேன்.
முஸ்லிம் கட்சியை மாத்திரமன்றி அதற்கு முன்பு தமிழ் கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்திச் செயற்பட்டவன் என்ற பின்புலத்தில் இருந்து, இரண்டு சமூகங்களின் பரஸ்பர நல்லுறவின் அவசியத்தை உணர்ந்தவன் என்ற அடிப்படையிலேயே இக்கோரிக்கையை விடுகிறேன்.
இவ்வகையிலான புரிந்துணர்வு மிக்க ஒரு உடன்பாடு எட்டப்படும் பட்சத்தில் இதுவே அடுத்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து போட்டியிடுவதற்கான ஒரு முன்னோட்ட நடவடிக்கையாகவும் அமையும் என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.
நன்றி
இவ்வண்ணம்.
பசீர் சேகுதாவூத் பா.உ
