சுலைமான் றாபி-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை உரிய நேரத்தில் சரியான பாதையில் வழிநடாத்துவதில் கட்சியின் செயலாளராக இருந்து பணியாற்றிவரும் செயலாளர் நாயகமும், இராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலியின் பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியதாகும் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகமும் சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி அவர்களை வரவேற்று பாராட்டும் வகையில் நிந்நவூரில் இடம்பெற்ற "முதுசத்துக்கு மகுடம்" நிகழ்வில் தலைமையுரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்;
இந்த விழாவானது வெறுமனே அமைச்சுப் பதவி பெற்றமைக்காக பாராட்டுகின்ற ஒரு சாதாரணமான நிகழ்வு மட்டுமல்ல. மாறாக தொடர்ச்சியாக பல்வேறு சவால்களையும், விலைபேசல்களையும் தாண்டி, கட்சியை காத்து இன்றுவரையும் வெற்றிப்பாதையில் பயணிக்கச் செய்து கொண்டிருக்கும் அவரின் உறுதியான பணியினை கௌரவிக்கும் முகமாக இடம்பெறும் இந்த பாராட்டு விழாவாகும்.
1977ம் ஆண்டுக்குப்பிறகு இழந்நிருந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை ஈடுசெய்ய இரட்டைக் குழந்தைகளாக பாராளுமன்ற உறுப்பினர்களை நாம் வென்றெடுத்தபோதும், எம்மால் எதிர்பார்த்தளவுக்கு ஊரை அபிவிருத்தி செய்ய முடியாமை கவலைக்குரியதே, ஆயினும் எமது கட்சிக்கும் தலைமைக்கும் செயலாளருக்கும் கிடைத்திருக்கின்ற இன்றைய அரசியல் பலத்தை வைத்துக்கொண்டு இனிவரும் காலங்களில் ஊருக்காக செய்வதற்கு எமக்கு முன்னிருக்கின்ற அபிவிருத்தி சவாலை வெற்றிகொள்ள முனைப்புடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவுப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், மாகாண சபை உறுப்பினர்களும், மாநகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதேவேளை கடந்த காலங்களில் கட்சியின் வெற்றியிலும், முஸ்லிம்களின் அரசியல் மாற்றத்திலும் முக்கிய பங்கு வகித்த இராஜாங்க அமைச்சரிற்கு நிந்தவூர் பிரதேச சபை பொன்னாடை போர்த்தியும், ஞாபகச் சின்னமும் வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
%2Bcopy.jpg)