எனது ரக வாகனங்கள் இரண்டை கைப்பற்றிய பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
எனக்கு சேறுபூசும் நோக்கில் பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு டிபென்டர் ரக வாகனங்கள் தொடர்பில் என்னிடம் ஆவணங்கள் இருக்கின்றன என்பதனால் பொலிஸாருக்கு எதிராக நான் சட்ட நடவடிக்கை எடுப்பேன் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, என்னுடைய செயலாளருக்கு சொந்தமான மாவில்மடையில் உள்ள வீட்டிலிருந்து டிப்பென்டர் ரக வாகனங்கள் இரண்டை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதுமட்டுமன்றி கண்டி, புஷ்பதான மாவத்தையிலுள்ள என்னுடைய வீட்டிலிருந்து ஒருதொகை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவையாவும் சட்டரீதியானதாகும். எனக்கு சேறுபூசும் நோக்கிலேயே பொலிஸாருக்கு இந்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிடமிருந்து மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த இரண்டு டிபென்டர் ரக வாகனங்களையும் 180 இலட்சம் ரூபாய்க்கு நான் கொள்வனவு செய்தேன். உரிமையை மாற்றுவதற்கான ஆவணங்களில் மட்டுமே கையெழுத்து இடப்படவில்லை. எனினும், என்னிடம் அதற்கான ஆவணங்கள் இருக்கின்றன. ஆகையால், இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸாருக்கு எதிராக நான் சட்டநடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
