மஹிந்த ராஜபக்ஷ்வை தான் நன்கு அறிந்து வைத்துள்ளதால் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட வரமாட்டார் என நினைப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
´நியூயோர்க் டைம்ஸ்´ ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பேட்டியில் மேலும் கூறியுள்ளதாவது,
´ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளுடன் உறவை மீள வலுப்படுத்திக் கொள்ள நான் வழியேற்படுத்தியுள்ளேன். நான் 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் பிரதமராக இருந்தபோது மேற்குலக நாடுகளுடன் சிறந்த உறவை பலப்படுத்தியிருந்தேன்.
அமெரிக்கா, சீனா, இந்தியாவுடன் நல்ல உறவு காணப்பட்டது. ஆனால் ராஜபக்ஷ அரசாங்கம் அதனை நிர்மூலமாக்கியுள்ளது. அவர்கள் மேற்குலகை பகைத்துக் கொண்டுள்ளனர். இந்தியாவிடம் இருந்து விலகிச் சென்றனர். சீனா அவர்களை பாதுகாக்கும் என்று நினைத்தனர்.
ஆனால் சீனா இலங்கையில் செய்யும் வீதி, துறைமுகம் போன்ற அபிவிருத்தி திட்டங்கள் பாரிய வட்டிக் கடன் அடிப்படையிலானது. சீனாவின் ஆயுதக் கப்பல் இரண்டு தடவை இலங்கைக்கு வந்து சென்றது இந்திய பாதுகாப்பு தரப்பினரை ஆத்திரமடையச் செய்தது´ என பிரதமர் தெரிவித்துள்ளார்.
´நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளை விடுதலை செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் சுவீகரிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை மீண்டும் தமிழ் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கைதிகளின் விபரம் திரட்டப்பட்டு வருகிறது. பதவி காலம் முடிவதற்கு முன்னர் கைதிகளின் எண்ணிக்கை குறித்த சரியான விபரத்தை அறிவிக்க எதிர்பார்த்துள்ளேன்.
மார்ச் மாதம் அதனை வெளியிட முடியும். இரகசிய முகாம்கள் இருப்பின் அதில் உள்ளவர்களை வெளியில் எடுத்து முகாமை மூடிவிட முடியும். காணாமல் போனவர்கள் ஆயிரக்கணக்கில் இல்லை. நான் நினைக்கிறேன் நூற்றுக் கணக்கில் இருப்பர். காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு பெயர் கண்டுபிடிக்க முடியாதவர்கள் இறந்திருக்கக் கூடும் அல்லது வெளிநாடு சென்றிருக்கக் கூடும்´ என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் காணிகள் விடுவிப்பு தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், எதிர்வரும் பொதுத் தேர்தல் வரைக்கும் சிங்கள மக்களை பகைத்துக் கொள்ளாதிருக்கவே கைதிகள் விடுதலை விடயத்தில் பிரதமர் காலம் கடத்துவதாக தெரிவித்துள்ளமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் ´நான் வரலாற்றைப் பற்றி கதைக்கிறேன். எதிர்கால இருப்பு பற்றி பேசவில்லை´ என்றார்.
