ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் பெற்றிபெற வேண்டும் என மேற்கொண்ட நேர்த்திக் கடனை இளைஞர் ஒருவர் நிறைவேற்றியுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற வேண்டும் என கடவுளிடம் வைத்த வேண்டுதலை ஆனமடு பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று புதன்கிழமை நிறைவேற்றியுள்ளார். ஆனமடு நாகவில பிரதேசத்தைச் சேர்ந்த சனத் குமார எனும் இளைஞரே இவ்வாறு தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.
தேர்தலுக்கு முன்னர் ஆனமடு சேருகல பிரதேசத்தில் அமைந்துள்ள ஐயனார் ஆலயத்திற்குச் சென்ற குறித்த இளைஞர் நடைபெறும் தேர்தலில் பொது எதிரணி வேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றால் தான் வீதியில் மூன்று கிலோ மீற்றர் தூரம் ஊர்ந்துசென்று தனது நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதாக வேண்டிக் கொண்டிருந்துள்ளார்.
இதனையடுத்து நேற்று மாலை 5.00 மணியளவில் இவர் ஆனமடு சிலாபம் பிரதான வீதியில் நாகவில பிரதேசத்திற்கு வந்து அங்கு முதலில் இறைவழிபாட்டில் ஈடுபட்டார். பின்னர் வீதியில் தேங்காய் உடைத்து தனது நேர்த்திக் கடனை நிறைவேற்ற ஆரம்பித்தார்.
மாலை 5.00 மணிக்கு தனது நேர்த்தியை நிறைவேற்ற ஆரம்பித்த அவர் இரவு 8.30 மணியளவில் வீதியில் ஊர்ந்துசென்று சேருகல ஐயனார் ஆலயத்தை அடைந்துள்ளார். இவரின் இந்த வேண்டுதலை நிறைவேற்றும் செயற்பாட்டின் போது அப்பிரதேசத்தைச் சேர்ந்த பலர் அங்கு கூடி அவருக்கு உற்சாகமளித்திருந்தனர்.

