ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபாலவிற்கு ஆதரவு வழங்கிய கட்சிகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதுவரை நன்றி கூறவில்லை என மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டாவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எமக்கு ஒரு முன்மாதிரியான தலைவர் கிடைத்துள்ளார். எமது நாட்டில் ஒரு நெல்சன் மண்டேலா இருப்பாராகவிருந்தால் அது மைத்திரிபால சிறிசேனவாகவே இருக்கும்.
இந்த தலைவரை பார்த்து அமைச்சர்கள் கற்றுக்கொள்ளவேண்டும், பிரதமர் முதல் அனைவரும் மைத்திரிபால சிறிசேனவை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அவரின் வெற்றிக்காக நாம் அனைவரும் பணியாற்றியது ஒரேமாதிரியாக, ஒரே நோக்கத்திற்காக. இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதுவரை மைத்திரி ஆட்சிக்கு ஆதரவு வழங்கிய கட்சிகளுக்கு நன்றி கூரவில்லை.
ஆதரவு வழங்கிய கட்சிகளுடன் பிரதமர் கலந்துரையாட வேண்டும். அவர்களது எதிர்பார்ப்புக்கள் என்ன? அவர்களது பிரச்சினைகள்? அவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை இதுவரை பிரதமர் கேட்கவில்லை.
அவருக்கு கடமைப்பாடு ஒன்று உள்ளது. நாம் இதனை கோபத்துடன் தெரிவிக்கவில்லை, எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து நாம் பொது எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்கினோம். இந்த உத்வேகத்தை தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும்.
இன்னும் மூன்று மாதங்களில் ஒரு பொதுத் தேர்தல் வரவிருப்பதை அனைவரும் நினைவில் கொள்வது நல்லது. என அவர் மேலும் தெரிவித்தார்.
