முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செய்த சகல இடர்பாடுகளையும் மன்னித்து அவருடன் இணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றி பெறச் செய்ய முன்னுக்கு வருமாறு அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவர்கள் நேற்றும், நேற்று முன்தினமும் சந்திரிக்காவை சந்தித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இதன் போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த, நாட்டுக்கும், கட்சிக்கும், தனக்கும் எதிராக கடந்த 9 வருடங்களாக செய்த கொடுமைகளை தெளிவுப்படுத்தியுள்ள சந்திரிக்கா, சுதந்திரக் கட்சியினரின் கோரிக்கை தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாட இணக்கம் வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, கட்சியின் தவிசாளராகவும் செயற்படும் வகையில் கட்சியின் யாப்பில் திருத்தங்களை செய்யுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
