நீண்டகாலமாக அதிகாரிகளினால் நிர்வகிக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தினை மக்கள் பிரதிநிதிகளின் சபையாக மாற்றியமைத்துள்ளோம் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், கிழக்கு மாகாண சபை அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்
கிழக்கு மாகாண சபை அமர்வு நேற்றைய முன் தினம் தவிசாளர்; ஆரியவதி கலபதி தலைமையில் இடம்பெற்றது. 2015 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீதினால் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்; போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அமைச்சர் உரையாற்றுகையில், கிழக்கு மாகாண சபை நீண்டகாலமாக ஆளுநர் மற்றும் அதிகாரிகளினால் நிர்வாகிக்கப்பட்டு வந்தது. கிழக்கு மாகாணம் தனியாக பிரிக்கப்பட்டு கடந்த 2008, 2012 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தல்கள் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளினால் நிர்வாகிக்கப்பட்டு வருகின்றது.
சென்ற 2008 மக்கள் பிரதிநிதிகளும், அமைச்சர்களும் கிழக்கு மாகாண சபைக்கு வருகின்ற போது மக்கள் பிரதிநிதிகளுக்கு எந்தவொரு அதிகாரங்களும் இல்லையென்ற நிலையில் அமைச்சர் பதவிகளை பாரமெடுத்தோம். கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் அதிகாரிகளிடம் முழுமையாக இருந்த அதிகாரங்களை படிப்படியாக மக்கள் பிரதிநிதிகளின் சபையிடம் பெற்றுக் கொடுத்துள்ளோம்.
எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கவிருக்கின்ற இந்த நிலையில் கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளை நமது நாடும் முழு சர்வதேசமும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றது. இக்காலகட்டத்தில் கிழக்கு மாகாண சபையின் ஆட்சி இன்றுடன் மாறலாம் என சிலரால் தெரிவி;க்கப்பட்ட நிலையில் இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகின்றேன். கிழக்கு மாகாணம் யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்ட மாகாணமாகும் இந்த மாகாணத்தினுடைய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 2015ம் ஆண்டுக்குரிய வரவு செலவு திட்ட நிதி வழமையை விட 250 மில்லியன் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண அபிவிருத்தி பணிக்கு தொடர்ச்சியாக நிதியுதவி வழங்கிவருகின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கும், நிதியமைச்சின் செயலாளர் டாக்டர் ஜெயசுந்தர அவர்களுக்கும் கிழக்கு மாகாண மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கின்றேன். மத்திய அரசின் நிதியமைச்சர் என்ற வகையில் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட் 2015ம் ஆண்டுக்குரிய வரவு செலவு திட்டத்தில் எல்லாம் மக்களும் பயன் பெறக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இலங்கையில் நிதி அமைச்சராக இதுவரையில் பதவி வகித்து எவராலும் வழங்கப்படாத வரவு செலவு திட்டத்தினை வழங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு நமது நாட்டு மக்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.
கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2015 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்ட யோசனையை தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து வாக்கெடுப்பின் போது எதிர்த்து வாக்களிக்காமல் நடுநிலையாக தங்களின் புரிந்துணர்வினை காட்டி கிழக்கு மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களுக்காக தங்களின் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
கிழக்கு மாகாண ஆளுநரை பொறுத்த வரையில் அவரிடமிருந்த பெரும்பகுதி அதிகாரங்களை மாகாண சபை அமைச்சர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் வழங்கியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநருக்கும், கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளுக்குமிடையில் சினேகபூர்வமான உறவை வளர்த்து கிழக்கு மாகாண மக்களின் நலன்களில் கிழக்கு மாகாண சபை அமைச்சரவையும், மக்கள் பிரதிநிதிகளும் செயல்பட்டு வருகின்றோம். இன்னும் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் ஆளுநருடன் கலந்துரையாடி அவைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அரசியல் அமைப்பின்படி ஆளுநருக்கு சில அதிகாரங்கள் உள்ளது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர், அமைச்சர்கள் நீதி, நியாயமாக செயற்படவில்லையென்றால் ஆளுநரிடம் நீதி கேட்க வேண்டிய நிலைமை உருவாகி வருகின்றது. அண்மையில் 14 வருட காலமாக பிரதேச சபையொன்றில் தற்காலிகமாக கடமை புரிந்து வந்த ஒரு ஏழை தொழிலாளிக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கௌரவ முதலமைச்சரிடம் மனு ஒன்றை சமர்ப்பித்தேன். கௌரவ முதலமைச்சர் அவர்களும் அந்த நபருக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் உத்தரவிட்டார். தற்காலிகமாக கடமை புரிந்தோருக்கு நியமனம் வழங்கும் பட்டியலில் குறிப்பிட்ட 14 வருட காலமாக தற்காலிகமாக கடமையாற்றியவரின் பெயர் நீக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக முதலமைச்சரின் செயலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது ஆளுநர் நீக்கியதாக என்னி;டம் சொன்னார். உடனடியாக இந்த ஏழையின் நியமனம் தொடர்பாக நீதி வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநரிடம் முறையிட்டேன். அவரால் அந்த ஏழைக்கு நீதி வழங்கப்பட்டது. இதற்காக ஏழை மக்கள் சார்பில் கிழக்கு மாகாண ஆளுனருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
வடக்கு மாகாண சபையின் மக்கள் பிரதி நிதிகளுக்கும், வட மாகாண ஆளுநருக்குமிடையில் சினேகபூர்வமான உறவுகள் இல்லாமல் முரண்பட்டு கொண்டு இருப்பதனால் அந்த மாகாண மக்களுடைய அபிவிருத்திப் பணிகள் செயல்படுத்த முடியாமல் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதை நாம் காண்கின்றோம்.
கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் வாழ்வதனால் மூன்று இனங்களையும் சமப்படுத்தி அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்துவது முதலமைச்சரின் தார்மீகப் பொறுப்பாகும். இவ்வாறு முதலமைச்சர் செயல்படும் போது அவருக்கு பக்க பலமாக அமைச்சரவை ஒத்துழைப்பு வழங்கும். கடந்த 2008ம் ஆண்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி வகித்த எஸ்.சந்திரகாந்தன் தலைமையில் செயல்பட்ட கிழக்கு மாகாண சபை நிருவாகம் சிறப்பாகவும், இன ஓற்றுமையi வளர்த்து வந்ததுடன் ஆளுங் கட்சியின் முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் பதவிகளை வகித்த போதும் கிழக்கு மாகாண மக்களின் நலனுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதெல்லாம் அதற்கு எதிராக தைரியத்துடன் ஒன்றிணைந்து குரல் கொடுத்தோம் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இணைக்கப்பட்ட வட-கிழக்கு மாகாண சபையின் நிர்வாகம் கிழக்கு மாகாணத்தில் செயல்பட்ட போது கிழக்கு மாகாணத்திலே வாழ்கின்ற முஸ்லிம், சிங்கள சமூகங்களின் விகிதாசாரம் பேணப்படாது நியமனங்கள் வழங்கப்பட்ட வரலாற்றை இந்த சபைக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். இந்த யதார்த்தமான உண்மைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கௌரவ உறுப்பினர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு 2008ம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கான ஆசிரிய நியமனங்கள் மற்றும் ஏனைய நியமனங்களை வழங்கி பணிபுரிந்து வருகின்றதையிட்டு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளருக்கும், பணிப்பாளர்கள், அதிகாரிகளுக்கும் கிழக்கு மாகாண மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
கிழக்கு மாகாண சபைக்கான நவீன கட்டட வசதி இல்லாமையினால் பல அசௌகரியங்களை கடந்த 6 வருட காலமாக எதிர்நோக்கி வருகின்றோம். நாட்டிலுள்ள ஏனைய மாகாணங்களில் மாகாண சபை கட்டடங்கள் நவீன முறையில் அமைக்கப்பட்டு பாவிக்கப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாண சபையின் சகல வசதிகளையும் கொண்ட நவீன கட்டடமொன்றை புதிதாக அமைப்பதற்காக 75 மில்லியன் ரூபா நிதி முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டு திருகோணமலை வரோதய நகரில் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது. இக்கட்டடத்தில் பேரவைச் செயலகம் நவீன முறையிலான வாசிகசாலை, சிற்றுண்டிச்சாலை மற்றும் ஏனைய வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு வருடா வருடம் அபிவிருத்தி பணிகளுக்காக வழங்கப்பட்டு வரும் 3 மில்லியன் ரூபா பணம் போதாமல் உள்ளது. கிழக்கு மாகாண சபைக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி பணிக்காக 06 மில்லியன் ரூபாவை வட மாகாண சபை வழங்கி வருகின்றது. எனவே 2016 ம் ஆண்டில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு 06 மில்லியன் ரூபா நிதி அபிவிருத்திக்காக வழங்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அரசியல் வாதிகள் கட்சி மாறுகின்ற நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுடன் கூட இருந்து ஆப்ப சாப்பிட்டுவிட்டு அடுத்த கனமே முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மாறியுள்ளார். இவர் கலந்து கொண்ட இறுதிக் கூட்டத்தில் பத்திரிகையாளர்; ஒருவர் மைத்திரிபால சிறிசேனவை நோக்கி நீங்கள் தான் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரென கூறப்படுகின்றது இது உண்மையா எனக் கேட்டார். அதற்கு மைத்திரிபால சிறிசேன அவ்வாறு பொது வேட்பாளராக நான் போட்டியிடுவதென்றால் இக்கூட்டத்தில் கலந்து கொள்வேனா? என ஊடகவியலாளரிடம் கேட்டுவிட்டு நேரடியாகவே எதிர்க்கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டு நான்தான் பொது வேட்பாளர் என அறிவித்துள்ளார். இது தான் இன்றைய நாட்டின் அரசியல் நிலையாகும்.
கிழக்கு மாகாண சபையிலுள்ள மைத்திரிபால சிறிசேன குழுவினர் யார் என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும். கடந்த 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 28632 மேலதிக வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றார். 2010ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 1,842,749 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றார். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவு செய்யப்படுவார் என்ற நம்பிக்கை எம்மிடம் உள்ளது. இதற்காக இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
30 வருட காலமாக நாட்டில் இருந்த யுத்த நிலையை இல்லாமல் செய்து மூவின மக்களும் நிம்மதியுடன் வாழும் நிலைமையை ஏற்படுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நிச்சயம் வெற்றிப் பெறுவார் என அமைச்சர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

0 comments :
Post a Comment