எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதிக்கு பின்னரும் நானே இந்நாட்டின் ஜனாதிபதியாக இருப்பேன். இது தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. எனது கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு எவருடனும் உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் என்னோடு உள்ளனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
எவர் எவரோடு உடன்படிக்கை செய்து கொண்டாலும் சகோதர அரசியல் கட்சிகளுடன் கைகோர்த்து நாட்டை அபிவிருத்தி செய்ய தயாராகவே உள்ளேன் என்றும் ஜனாதிபதி கூறினார்.
எம்பிலிப்பிட்டி நகரில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சந்தை கட்டிடத்தொகுதியை நேற்று புதன்கிழமை திறந்து வைத்து மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதிக்கு பின்னரும் இந்நாட்டின் ஜனாதிபதி நானே. எனவே இது தொடர்பில் மக்கள் எதுவிதமான அச்சமும் கொள்ளத் தேவையில்லை.
எவருடனும் உடன்படிக்கைகளை கைச்சாத்திட வேண்டிய அவசியம் எனக்கில்லை. ஒவ்வொருவருக்கு தேவையான விதத்தில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படுகின்றன. இவை மரக்கொடிகள் போல் வியாபிக்கும். ஆனால் எம்மோடு இணைந்துள்ள சகோதர அரசியல் கட்சிகள் தமது கருத்துக்களை அச்சமின்றி எம்மிடம் கூற முடியும்.
அதற்கமைய மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதோடு அரசியல் கட்சிகளுடனும் மக்களுடனும் கைகோர்த்து அபிவிருத்திகளை முன்னெடுப்பேன். இன்று சிலர் தமது இயலாமையை கூறாது தமக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்கின்றனர்.ஒரு சிலர் சட்ட மூலங்கள் திருட்டுப் போனது என்கிறார்கள். அதன் நகல்களை காணவில்லை என்கின்றனர்.
நாங்களும் அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளோம். சட்ட மூலங்களின் நகல்கள், செயலாளர்களிடமும் விடயத்திற்கு பொறுப்பான அதிகாரிகளிடமும் பிரத்தியேக செயலாளர்கள் மற்றும் சட்ட அதிகாரிகளிடமும் இருக்கும்.
அப்படியானால் இவை உள்ளுக்குள்ளேயே திருட்டுப் போயுள்ளது.
ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டால் அதனை நிறைவேற்றாது எம் மீது குற்றம் சுமத்துவது பிழையான செயலாகும். இந் நாட்டின் அனைத்து துறைகளின் அபிவிருத்திக்கும் உதவிகளை வழங்கியுள்ளோம். அனைத்து அமைச்சுக்களுக்கும் கோடிக்கணக்கான பணத்தை ஒதுக்கிக் கொடுத்துள்ளோம்.
வரவு செலவு திட்டத்தின் ஊடாக முதல் முதலாக 136 மில்லியன் ரூபாவை பாடசாலை அபிவிருத்திகளின் கீழ் பொலன்னறுவை றோயல் கல்லூரிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எம்பிலிப்பிட்டிய நவீன சந்தை ரூபா 150 மில்லியன் செலவில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் நகர அபிவிருத்தி அதிகார சபையால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பதாகும்.

0 comments :
Post a Comment