இந்த சூழ்நிலை காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகத்தை நம்பி வாக்களித்த மக்கள் நம்பிக்கை இழந்து கோபத்தின் உச்சத்தில் உள்ளனர்.
தலைமை நிர்வாகியான மேயர் மக்களின் விருப்புக்கு ஏற்ப நிர்வாகத்தை கல்முனையில் இருந்து நடாத்துவதற்கு பதிலாக கொழும்பில் இருப்பதால் மாநகர சபையில் தடி எடுத்தவர்கள் எல்லாம் சண்டியர்கள் போல் மாலுமி இல்லாத படகுபோல திக்குத் திசை இன்றி பயணித்துக்கொண்டிருக்கின்றது.
குறிப்பாக இரண்டு தினங்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரை தாக்கி ஜனநாயக மரபுகளை மீறி சபையின் நடவடிக்கைகளை அல்லோலகல்லோலப்படுத்தி நமது நகரை எல்லோரும் எல்லி நகையாடும் அளவிற்கு அந்த சம்பவம் மாறி இருந்தது.
மாநகர சபையின் செயற்பாடுகளை குழப்பி உறுப்பினரை தாக்கி காயப்படுத்திய உறுப்பினருக்கெதிராக நடவடிக்கை எடுத்து ஜனநாயக மரபுகளை பாதுகாப்பேன் என்று மேயர் அவர்கள் உறுப்பினர்களாகிய எங்களைச் சந்தித்து வாக்குறுதியளித்திருந்தார்.
மேயரின் அறிக்கையினை மாநகர சபை உறுப்பினர்கள் எல்லோரும் நம்பியிருந்தவேளை, அடுத்த நாள் மாநகர சபைக்குச் சென்றபோது அங்கு மேயர் இருக்கவில்லை. அவர் சம்பவம் நடந்த அன்று இரவே கொழும்புக்கு போனதாக கூறப்பட்டது.
தாக்குதலுக்கு உள்ளான எமது கட்சியின் உறுப்பினரை அடுத்த நாள் கல்முனை பொலிஸார் கைது செய்தனர். தாக்கியவர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக திரிவதாகவும் அறிந்து கொண்டு அதிர்ச்சியடைந்தோம்.
தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயரினால் அறிவிக்கப்பட்டிருந்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. தாக்கிய உறுப்பினர் சுதந்திரமாக நடமாடுகின்றார். எங்களுக்குப் பொறுப்புக் கூறவேண்டிய தலைமை நிர்வாகி மக்களையும், எங்களையும் நட்டாற்றில் விட்டுவிட்டு கொழும்பு சென்ற நிலையையே காண்கின்றோம்.
அதேவேளை, இன்று மேயரின் நிர்வாக செயற்பாட்டின் காரணமாக ஒரு சிறுவன் மரணமடைந்துள்ளான். கல்முனை இஸ்லாமாபாத் பிரதேசத்தில் மலசல கூடம் அமைப்பதற்கான வேலை ஒப்பந்தத்தை சரியான முறையில் செயற்படுத்தாத ஒரு நிலை காரணமாக இந்த அணர்த்தம் ஏற்பட்டுள்ளது.
குறித்த மலசலகூட குழி தோண்டப்பட்டு மூன்று மாதங்கள் எந்த பாதுகாப்பும் அற்ற நிலையில் இருந்துள்ளதை மேயர் சரியான முறையில் அறியாததினால் இந்த பெரும் அணர்த்தம் ஏற்பட்டுள்ளது;.
குறிப்பாக ஒப்பந்த வேலைகள் சரியான முறையில் நடைபெறுகின்றதா? என்பதையும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் மேற்பார்வை செய்கின்றார்களா? என்பதையும், பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதா? என்பதையும் மேலும் தரம் கணிக்கப்பட்டு வேலைகள் நடைபெறுகின்றதா? என்பதையும் கல்முனை மேயர் அறியாது அலற்சியமாக இருந்ததினால் இன்று சிறுவன் உயிரிழந்துள்ளான்.
சிறுவனின் மரணத்திற்கு முழுக்க முழுக்க காரணம் கல்முனை மேயரின் கவனயீனமும், திட்டத்தை கொந்தராத்து செய்யும் ஒப்பந்தக் காரருமாகும். இன்று கல்முனை நகரில் இஸ்லாமாபாத் மக்கள் கொதித்தெழுந்து மேயரைக் கண்டித்து ஆர்ப்பாட்ட்ம் செய்துள்ளனர்.தங்களுக்கு நீதி பெற்றுத்தருமாறு கோரியுள்ளனர்.
மேலும் கல்முனை நகரில் தமிழ்,முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற நிலையில் அவர்களுக்கு மரபாகவும், பாரம்பரியமாகவும் இருந்து வந்த நிதிக் குழு உறுப்பினரை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர்களிடமிருந்து பறித்து எடுத்ததனால்; இன்று தமிழ் மக்கள் கல்முனை பிராந்திய முஸ்லிம் மக்கள் மீது அதிருப்தியில் உள்ளனர். இதற்குக் காரணம் மேயரின் பொடுபோக்கற்ற தன்மையும் பழிவாங்குகின்ற வக்கிர தன்மையுமாகும்.
எனவே, மக்களின் மூன்றாவது அதிகப்படியான வாக்கைப் பெற்றவன் என்ற ரீதியிலும்,மனச்சாட்சியுள்ள மனிதன் என்ற அடிப்படையிலும் இந்த அநீதிகளை பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளேன்.
அடிமட்ட மக்களின் கஸ்டமும் அவர்களின் தேவையையும் புரிந்து கொள்ளாமல் மேயர் அவர்கள் மக்கள் பிரதிநிதிகள் சபையை கௌரவமற்ற நிலைக்கு உட்படுத்தியுள்ளார்.
இன்று இந்நாட்டின் பிரதம நீதியரசரே பகிரங்க நீதிமன்றத்தில் கல்முனையில் நடக்கின்ற இழிவான செயற்பாடுகளை விசாரித்துள்ளார். இவ்வாறான நிலைக்குக் காரணம் மேயரின் பொறுப்பற்ற தன்மையும், கரிசனை இல்லாத அக்கரையும்தான் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.
எனவே,கல்முனை மாநகர சபையின் மீது இன்று மக்கள் கொதிப்படைந்துள்ள நிலையில் மோசமான நிர்வாக சீர்கேட்டை சீராக்குவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.
ஏ.ஆர்.அமீர் (ஜே.பி)
கல்முனை மாநகர சபை உறுப்பினர்

0 comments :
Post a Comment