கல்முனை அல்-பஹ்ரியா மகாவித்தியாலய உயர்தர வகுப்பு மாணவர்கள் சீகிரியாவுக்கு சுற்றுலா சென்றபோது அதில் சென்ற மாணவி ஒருவர் அங்கு தடைசெய்யப்பட்ட புராதண சின்னங்களில் மையினால் எழுதினார் என்ற காரணத்துக்காக தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டு சீகிரியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு அவர் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
புராதன சின்னங்களை மையினால் எழுதுவதோ அல்லது சேதப்படுத்துவதோ தொல்பொருள் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் பிணையில் வரமுடியாத குற்றமாகும்.
இதற்கு முன்பும் ஓட்டமாவடியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் இவ்வாறான சம்பவத்தில் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தங்களோடு சுற்றுலா வந்த மாணவியை விடுவித்தால் மாத்திரம்தான் பொலிஸ் நிலையத்தைவிட்டு நகருவோம் என்று மாணவிகள் பொலிஸ் நிலையம் முன்பாக நின்றிருந்தனர். அதேபோன்று இச்சம்பவத்தை கேள்விப்பட்ட கல்முனைப் பிரதேசத்திலும் பதட்ட நிலை ஏற்பட்டது.
குறிப்பிட்ட இந்தச் சம்பவம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதால் உடனடியாக விரைந்து செயல்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் சம்பந்தப்பட்ட சீகிரியா பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்டபோது,மாணவியை தங்களால் விடுவிக்க முடியாத காரியம் என்பதைக் கூறியுள்ளனர்.
இதனால் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் குறித்த பிரதேசத்தின் அரசியல் பிரமுகரும், காணி அமைச்சருமான ஜனக்க பண்டார தென்னக்கோன் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். இவர்கள் இருவரும் மாணவியை விடுவிப்பதற்கு பல முயற்சிகளை எடுத்திருந்தனர்.
மாணவியை விடுவிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டபோது மரபுரிமைகள் அமைச்சர் ஜகத் பாலசூரியவின் கவனத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினர் கொண்டு வந்தார். அவரும் சம்பந்தப்பட்ட திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அதேவேளை, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசீல் ராஜபக்ஸவின் கவனத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் விடயத்தை தெரியப்படுத்தினார். பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோன் தலைமையில் சீகிரியாவுக்கு அனுப்புவதற்கு அமைச்சர் பசீல் ராஜபக்ஸ ஏற்பாடுகளைச் செய்தார்.
சீகிரியா பொலிஸ் நிலையத்திற்கு வந்த உயர் பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பில் கலந்துரையாடி மாணவியை விடுவித்தனர்.
இந்த விடயம் சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் வினவியபோது, பாடசாலை மாணவியை விடுவிப்பதில் பல முயற்சிகளைச் செய்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசீல் ராஜபக்ஸ, நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம், காணி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன், மரபுரிமைகள் அமைச்சர் ஜகத் பாலசூரிய ஆகியோருக்கு நன்றியைத் தெரித்துக்கொள்வதுடன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று முயற்சி மேற்கொண்ட எனது பிரத்தியேகச் செயலாளர் எம்.ஜின்னா , பாடசாலையின் அதிபர் ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment