எம்.வை அமீர் வங்களாவடி நிருபர்-
எதிர்வரும் 19ம் திகதிக்குப் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் நிம்மதி இழக்கப்பட உள்ளதாகவும் முஸ்லிம் தேசியத்துடைய அரசியல் பாக்குவெட்டியில் அகப்பட்ட பாக்கின் நிலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் இது யாருடைய தவறு எனக் கூற முடியாதுள்ளது என்றும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் மூன்று மாடிக் கட்டிடத்திற்கு அடிக்கல் நடுதல் நிகழ்வும், இப்பாடசாலையின் ஸ்தபாகர் எம்.எஸ். காரியப்பர் அவர்களை நினைவு கூறும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவா் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவா் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை முஸ்லிம் சமூகத்தை மேற்கூறிய ஒரு நிலைக்கு மாட்ட வைத்துள்ளது. இங்கு வாழும் மற்றொரு சிறுபான்மை சமூகமான தமிழ் சமூகத்துக்கு இவ்வாறான ஒரு நிலை இல்லை என்று கருதுகின்றேன். அதற்குக் காரணம் வடக்குக் கிழக்கை எடுத்து கொண்டாலும் சரி அல்லது மலையகத்தை எடுத்துக் கொண்டாலும் சரி அம்மக்களுடைய இருப்பு தொடர்பில் பார்த்துக்கொள்ள அவர்களைப் பிரதிநிதுத்துவப்படுத்தும் தலைவர்கள் இருப்பதால் அம்மக்களுக்கு இவ்வாறான ஒரு நிலை இல்லை என்றும் அவர்களுடைய இருப்பு விடயத்தில் அவர்களாகவே முடிவுகளை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் சிங்கள சமூகத்தையும் அதே சமனான முறையில் தமிழ் சமூகத்தையும் அனுசரித்தே போக வேண்டியுள்ளது. தற்போது முஸ்லிம் அரசியல் கத்தியில் நடப்பது போன்று மாற்றப்பட்டுள்ளது.
மறைந்த தலைவர் அஷ்ரப் இருந்தபோது தற்போது இருப்பது போன்றதொரு நிலைஇருக்கவில்லை என்றும் இப்போது இருப்பது போன்று முஸ்லிம்களின் சுயஉரிமையில் கைவைக்கத் தக்க சிங்கள கட்சிகளோ இயக்கங்களோ அன்று இருக்கவில்லை என்றும் அவ்வாறு இருந்தமைக்குக் காரணம் தற்போது உள்ளது போன்று முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டால் முஸ்லிம்கள், விடுதலைப் புலிகள் போன்ற அமைப்போடு இணைந்து விடுவார்கள் என்ற அச்சம் காரணமாகவே முஸ்லிம்களை நண்பர்கள் போல் பெரும்பான்மை சமூகம் பார்த்தது என்றும் தெரிவித்தார்.
தற்போது முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய சாதாரண உரிமைகளைக் கூட தருவதற்கு பின்நிற்கின்றனா். எங்களது சமூகம் சார்ந்த சில கோரிக்கைகளை நாங்கள் முன்வைக்கின்ற போது அதனை பெரிதுபடுத்தி இனவாத சாயம் பூசி சிங்கள ஊடகங்களும் பௌத்த தீவிரவாத அமைப்புக்களும் போர்க்கொடி தூக்குகின்றனா்.
முஸ்லிம்கள் மேற்கொள்ளும் வியாபாரம் முதல் அடிப்படை உரிமை வரை இனவாத சாயம் பூசப்பட்டு சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. வட கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் தாங்கள் பேச முற்படும் போது முஸ்லிம் காங்கிரசும் தமிழ் கூட்டமைப்பும் இணைந்து தனி இராச்சியம் அமைக்க இரகசிய பேச்சு நடத்துகின்றார்கள் என்று தெற்கில், சிங்கள மக்களை சிங்கள பேரினவாதிகள் தூண்டுகின்றனா்.
வட கிழக்குக்கு வெளியில் வாழும் முஸ்லிம் மக்களை தாக்குவதற்கு இவ்வாறான பொய்யான செய்திகளைக் கூறி அதற்கு ஆட்களை பேரினவாதிகள் திரட்டுகின்றனா்.
வட கிழக்கில் உள்ள முஸ்லிம்களின் உரிமைகளை ஒட்டு மொத்தமாக விட்டு விட்டு தெற்கின் அரசியல் தலைமைகளுடன் அவர்களுடைய செல்லப் பிள்ளைகளாக ஆமாம் சாமிகளாக தங்களால் வாழ முடியாது. அவ்வாறான சூழலுக்கு உட்படுவோமானால் வட கிழக்கில் எங்களது சுய உரிமையை இழக்க வேண்டிய அபாயத்தை சந்திக்க வேண்டி ஏற்படும்.
இந்திய புதிய பிரதமரின் வருகையின் பின்னர், மிகக் கடுமையான தொனியில் வட கிழக்கு அரசியல் பற்றி இலங்கை அரசுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் ஏன் முஸ்லிம் காங்கிரசுடனும் பேசி வருவதாகவும் இவ்வாறான நிலையில் அவ்வாறான பேச்சு வார்த்தைகளையும் தட்டி கழிக்க முடியாதுள்ளது என்றும் தெரிவித்தார்.
முஸ்லிம் சமூகம் இக்கட்டான நிலையில் இருப்பதாகவும் அது எவ்வாறு என்றால் நாட்டில் எத்தனையோ நிர்வாக மாவட்டங்கள் இருக்கின்றன. அதில் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்கள் நூறு வீதம் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட மாவட்டமாகும். இங்கு அப்பிராந்திய மக்களது நிருவாக விடயங்கள் இலகுவாக நடைபெறுகின்றன. இவ்வாறான சுழலில் யாழ்ப்பாணம் மாவட்டம் பற்றியோ ஏனைய தமிழர் பெரும்பான்மை கொண்ட மாவட்டங்கள் பற்றியோ பேசாத பெரும்பான்மை தீவிர போக்குக் கொண்டோர் கல்முனை கரையோர பிரதேசங்களில் வாழும் மக்கள் அவர்களது நிருவாக விடயத்தை இலகுபடுத்த ஒரு கரையோர மாவட்டத்தைக் கோரும் போது அது சிங்கள மக்கள் மத்தியில் தனிநாடு போன்றதொரு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறன போலிப் பிரச்சாரங்களை முறியடிக்க பாராளுமன்றத்துக்கு உள்ளும் வெளியேயும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றேன்.
கல்முனை கரையோர மாவட்டம் தொடர்பாக நாங்கள் பாராளுமன்றத்தில் பேசுன்கிற போது எங்களில் சிலர் கல்முனையில் சிங்கள பிரதேச செயலாளர் நியமனம் குறித்துக் கேட்கின்றனா்.
கல்முனையில் சிங்கள பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்ட வேளை அளுத்கம அசம்பாவிதம் இடம்பெற்ற நேரமாகும். அவரை பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில்கடமையை பொறுப்பெடுக்க விடாமல் தடுத்திருக்க முடியும். அப்போது நாடு இருந்த நிலையில் பெரிய ஒரு இனக்கலவரம் ஒன்று வராமல் தடுப்பதற்காவே சற்று மென்மைப்போக்கை கடைப்பிடித்தேன். கல்முனை சிங்கள பிரதேச செயலாளர் நியமன விடயத்தை தான் அரசியலாக்க நினைத்திருந்தால் சில ஆயிரம் மக்களை திரட்டி போராட்டங்களை செய்து தடுத்திருக்க முடிந்திருக்கும். தேசிய நிலைமையை கருத்தில் கொண்டே அமைதியாக இருக்கின்றேன்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதித் தோ்தல் விடயமாக பல்வேறுபட்ட தரப்பினருடன் கலந்துரையாடி வருவதாகவும் இவற்றில் முஸ்லிம்களுக்கு அதிகபட்ச நன்மைகள் வழங்கக்கூடிய அணிக்கு ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment