பாலமுனை. யு.எல். அலி அஷ்ரஃப்-
உன்
உயிருக்குள் - என்
உயிர் சுமந்து - நான்
உயிர் வாழ
உரமாய் போன
உத்தமியே !
உலகம் உள்ளவரை – நீ
உயிர் வாழவேண்டும்
உன்னாலே
உலகம் வாழ வேண்டும்.
நான் பிறந்த போது
உலகமே – உன்
காலடியில்
மண்டியிட்டு
மருண்டு கிடப்பதாய் - நீ
உணர்ந்தாய்
உம்மா.
உறக்கத்திற்கு
உலைவைத்து
பசியை
பரலோகம் அனுப்பி – நான்
புசிக்க
பூவாய் பூத்திருப்பாயே-இப்
பூவுலகின்
புகழ்பூத்த
புனிதம் மிகு
புண்ணியவதி -நீயே
உம்மா.
என் கண்களுக்குள்
காற்றடித்து
தூசு விழுந்தாலும்
உன்
கருவிழியில்
உதிரம் கொட்டும்
உன்னத உறவே
உம்மா.
வலிகள் பல தாங்கி
துன்பம் பல துயர்ந்து
நாளெல்லாம் நோன்பிருந்து
எனைப் பெற்று,
விழித்திருந்து – உன்
விழிகளுக்குள்
என்னைக் காத்து,
கசறடக் கற்;க வைத்து
காரிகை அவள்
கரம்பிடித்து,
புது வாழ்வை
பூக்க விட்ட
கற்கண்டு மனது
உனக்கு உம்மா.
நீ
உணவருந்துகிறாய்
என்றுதான் பலர் நினைப்பர்
ஆனால் - நீ
உண்பது உன் பசிக்கல்ல,
உதிரத்தை பாலாக்கி
பாலகன் எனக்கு
பருகிடத்தான் என்பதை
பார் அறியுமா?
உம்மா.
நான்
கண்ணயர – நீ
விழித்திருந்தாய் - நான்
கண்ணயர்ந்ததும்
உன் விழி
மூடிக் கொண்டதும்
உன் நித்திரைக்கல்ல,
கனவுலகில் என்னை
சான்றோனாய்
கண்டு ரசிப்பதற்காய்
உம்மா.
உனக்காக.
எதைத்தான் -நீ
செய்தாய்
ஒன்றுமே இல்லை,
அத்தனையும்
எங்களுக்கே செய்கிறாய்
உம்மா.
நுளம்பு வலைக்குள்ளே
தொட்டிலில் - என்னை
தூங்கவைத்து
கட்டாந்தரையில் - நீ
உறங்குவாய்,
நுளம்புகளின்
படைஎடுப்புக்குள்ளே
இரத்தங்கள்
சொட்டச் சொட்ட
துயிலின்றி
துன்பமாய் களிந்த
நாட்கள் எத்தனையோ
உம்மா.
ஒரு கவளச் சோற்றையேனும்
என் தொண்டைக்குளிக்குள்
திணித்தால்தான்
அன்றைய விடியல்
சுகமாக
உனக்குத் தெரியும்
உம்மா.
நான் நடை பயில – உன்
முழங்காலும், கரங்களும்
பாதங்களாகி
தேய்ந்து போன
அந்த நாட்களை
நினைக்கயிலே
என் கண்ணீர்
ஆறாய் பெருக்கெடுக்கிறது
உம்மா.
கல்வியோடு
கலாசாரத்தை
கலந்து கற்பித்த
முதல் ஆசான்
நீதான்
உம்மா.
நான் பெற்ற பட்டங்கள்
நீ கண்ட வர்ணக் கனவுகளின்
ஓவியங்கள்.
அத்தனையும்
உன்
தங்க பாதங்களுக்கு
காணிக்கைகள்
உம்மா.
நாற்பது வயது
தந்தை நான் இப்போது,
ஆனால்
உனக்கு நான் எப்போதும்
குழந்தைதான்
உம்மா.
தொடுவானமாய்
தொலை தூரத்தில்
நான் இருக்க
தொலைபேசியில்
உன்
பாசக் குரல்
ஒலித்தாலே –என்
நெஞ்சுக்குள் வாழும்
உன் பாசம்
கண்களிலே
கண்நீரை
ஓட்டிவிடுகிறது
உம்மா.
மத்திய கிழக்கில்
ஸ்டார் ஹோட்டல்களிலே
விலை மதிப்புமிகு
எத்தனை வகை உணவை
உண்டாலும், அத்தனையும்
உன்
கரத்தாலே
கத்தரிக்காய்
சுண்டலுடன்
பிசைந்து தரும்
ஒரு கவளம்
சோற்றுக்கு
ஈடாகாது
உம்மா.
பெண்கள்
அணிகலங்களால்
அலங்கரிக்கின்றார்
ஏன்
அந்தி வானமும்
மஞ்சள் பூசி
அழகு பார்க்கின்றாள்
நீயோ
உன்
பிள்ளைகள்
எதிர்காலம்
மங்களமாய்க் காண்பதிலேயே
அழகு பார்கிறாய்
உம்மா.
உன் பக்கத்திலிருந்து
உனக்கு சேவகம் செய்து
ராணி போல்
ராஜ்யமொண்ளை தந்து
ஆட்சி செய்ய
ஆசை கொள்கிறது – என்
ஆள் மனது
உம்மா
கடலுக்கும் ஆளம்
அறியலாம்
விண்மீன்களை
எண்ணிமுடித்திடலாம,;
சூரியனின் சூட்டைக் கூட
தணித்திடலாம்
உன்
அன்பின் ஆளத்தை
அறிய
எந்த விஞ்ஞானியும்
பிறந்ததும் இல்லை,
இனி பிறக்கப் போவதுமில்லை
விஞ்ஞானிகளுக்கெல்லாம்
விஞ்ஞானி - நீயே
உம்மா
என் உயிரின் உயிரே
ரத்தத்தின் ரத்தமே
கண்ணின் கரு விழியே
எம் வம்சத்தின்
ஒளி விளக்கே
பாசத்தின்
பஞ்சாமிர்தமே
பாச மலரே
பால் நிலவே
பார் வாழும் வரை
பார் போற்ற
பல்லாண்டுகள்-நீ
வாழ வல்ல
அல்லாஹ்வை
சிரம் பணிகிறேன்
உம்மா.
பாலமுனை யு.எல். அலி அஷ்ரஃப்
கட்டாரிலிருந்து.

0 comments :
Post a Comment