ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் ஜே.வி.பி.யின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்கவின் உரையில் அரசாங்கம் கலவரமடைந்ததையடுத்து பாராளுமன்ற அமர்வுகள் சுமார் பத்து நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டன.
அனுரகுமார எம்.பியின் உரைக்கு தொடர்ச்சியாக இடையூறுகளை விளைவித்த அமைச்சர்களும் ஆளும் கட்சி எம்.பிக்களும் அவரை உரை நிகழ்த்தவிடாது ஏற்படுத்திய இடையூறுகளை கட்டுப்படுத்த முயற்சித்த சபைக்குத் தலைமை தாங்கிய குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் தனது முயற்சி தோல்வியடைந்ததால் சபை நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாக அறிவித்தார். இதனையடுத்து சபை நடவடிக்கைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டன.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை அமர்வின்போது 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முதலாம்நாள் குழுநிலை விவாதம் இடம்பெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மேற்படி விவாதத்தில் அனுரகுமார திசாநாயக்க எம்.பியின் நேரத்தின்போது அவர் உரையாற்றினார்.
அரசாங்கத்தையும், ஊழல் மோசடி செயற்பாடுகளையும் சுட்டிக்காட்டி உரையாற்றிய அனுரகுமார எம்.பியுடன் ஆளும் கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த உறுப்பினர் அனுரகுமார குரலை உயர்த்திய நிலையில் மோசடிகள் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தார்.
இடையூறுகள்
இதன்போது அனுரகுமார எம்.பி.யின் ஆசனத்துக்கு நேரெதிராக வந்தமர்ந்துகொண்ட அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, அனுரகுமார எம்.பியை உரையாற்றவிடாது குறுக்கீடுகளை செய்துகொண்டிருந்தார்.
இவருடன் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, மேர்வின் சில்வா, பிரதியமைச்சர் லலித் திசாநாயக்க, ஆளும் கட்சி எம்.பியான ஏ.எச்.எம்.அஸ்வர் சஜின் வாஸ் குணவர்தன உள்ளிட்ட பலரும் தொடர்ச்சியாக சத்தமிட்டு சபையை கலவரப்படுத்தினர்.
கிரியெல்ல
இதன்போது ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய ஐக்கிய தேசியக் கட்சி எம்.பியான லக்ஸ்மன் கிரியெல்ல, சபையில் உறுப்பினருக்கு உரையாற்ற இடமளிக்குமாறும் சபையை முறையாக நிர்வகிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
எனினும் சபாபீடத்தின் கட்டளைக்கு அமைச்சர்களும் எம்.பிக்களும் செவிசாய்க்காது தொடர்ந்தும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.
அனுரகுமார
தொடர்ந்தும் கூச்சலுக்கு மத்தியில் உரையாற்றிய அனுரகுமார திசாநாயக்க எம்.பி. ஆளும் கட்சியின் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு எம்.பியான சஜின்வாஸ் குணவர்தன முன்னர் தொழில்புரிந்த நிலை தொழில் புரிந்த ஆடைத் தொழிற்சாலை, பின்னர் வங்கியொன்றில் கடன்பெற்று பின்னர் மஹர சிறையில் அடைக்கப்பட்டமை என தொடர்ச்சியாக கூறிச்சென்றார். அத்துடன் இலஞ்ச ஊழல் மோசடி ஒழிப்பு ஆணைக்குழுவினர் ஆணையாளரே மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.
இங்கு கூச்சலிடுவோர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் ஆணையாளர் நிரபராதி என்று நிரூபிக்க முடியுமா எனக் கேட்டார்.
எனினும் ஆளும் கட்சியினரின் கூச்சல் அதிகரித்திருந்தது. இதன்போது சபையின் நடவடிக்கைகளை கொண்டு நடத்துவதற்கு உதவுமாறும் அமைதியை பேணுமாறும் பலமுறை கேட்டுக்கொண்ட போதிலும் செவிசாய்க்கப்படாததால் சபை நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாக அறிவித்து ஆசனத்திலிருந்து எழுந்து சென்றார்.
இதனையடுத்து சபை நடவடிக்கை ஐந்து நிமிடங்களுக்கு தடைப்பட்டது.
மீண்டும் 12.45 மணியளவில் சபை கூடியதும் சில நிமிடங்களில் அனுரகுமார திசாநாயக்க தனது உரையை நிறைவுசெய்தார்.

0 comments :
Post a Comment