முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட மத்திய குழு கூட்டத்தில் ஹரீஸ் எம்.பியின் முக்கிய பேச்சு!

எஸ்.எம்.அஜூஹான்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாரை மாவட்ட மத்திய குழுவின் கூட்டம் கடந்த ஞாயிற்றுக் கிழமை அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹோட்டல் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவரும் நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ்,பைசல் காசீம், மாகாண அமைச்சர் மன்சூர், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம், ஏ.எம்.ஜெமீல் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பலரது கருத்துக்களும் இங்கு முன்வைக்கப்பட்டது. அதிலும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் பேச்சு மிக ஆக்ரோசமாக இருந்தது. அவர் பேசுகின்றபோது ஆதரவாளர்கள் கரகோசம் செய்து தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

இந்த அரசாங்கத்தில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அட்டுழியங்கள், அநியாயங்கள்,புறக்கணிப்புக்கள் தொடர்பில் கருத்துக்களை கூறியதுடன் சமூகத்திற்காக கட்சி என்ன முடிவுகளை எடுக்கின்றதோ அந்த முடிவுகளுக்கு ஆதரவு தெரிவிக்கின்ற முதலாவது நபராக நான் இருப்பேன் என்று ஹரீஸ் எம்.பி ஆவேசமாகக் கூறினார்.

அழுத்கம விடயங்களில் கட்சியின் செயற்பாடுகள் குறித்தும் பொதுபல சேனாவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் பல விடயங்களை வெளிப்படுத்தினார். இலங்கை முஸ்லிம்களுக்கு எவ்வாறான பாதிப்புக்கள் எதிர்காலத்தில் நிகழலாம் என்ற யதார்த்த ரீதியான கருத்துக்களையும் முன்வைத்தார்.

மக்களின் உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பளிக்கின்ற ஒருவன் என்ற வகையில் அவர்களின் உணர்வுகளுக்கு எதிராக செயற்பட மாட்டேன் என்ற உத்தரவாதத்தையும் வழங்கினார். இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பேசிக்கொண்டிருக்கும்போது கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் தங்களது கரகோசத்தை வெளிப்படுத்தினர்.

அம்பாரை கரையோர மாவட்டத்தை பெற்றுக் கொள்வதற்கான அவசியத்தை ஹரீஸ் எம்.பி வலியுறுத்திப் பேசியதுடன் கரையோர மாவட்டத்திற்கான கோரிக்கையை ஆரம்பம் முதல் தூக்கிப் பிடித்திருக்க வேண்டும். கிழக்கு மாகாண சபையிலும், மத்திய அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களும் பகிஸ்கரிப்புக்களை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அது நடைபெறவில்லை.

நமது சமூகத்திற்கான போராட்டத்தில் எந்த அரசியல் சக்திகளுக்கும் நாம் அடிபணிந்தவர்கள் அல்ல. கட்சியின் தலைவர் எவருக்கும் பயந்து அரசியல் செய்யவில்லை. சர்வதேச ரீதியில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்களை ஆராய்ந்து இலங்கையிலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இன்று பொது பல சேனாவும், அதற்கு உரமூட்டுபவர்களும் முனைந்து வருகின்றனர்.

இது மிகப்பெரிய ஆபத்தாகும். சிறுபான்மையினரின் இருப்பிற்கும், அவர்களது உரிமைக்கும் முழுமையாக தடை ஏற்படுத்துவதே அவர்களின் சிந்தனையாகும். நாங்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

அழுத்கம சம்பவம் இடம்பெற்றபோது, நமது மக்களின் உணர்வுகளோடு என்னை இணைத்துக் கொண்டேன். அதனால்தான் இந்த அரசாங்கத்திலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தேன். எந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டாலும் எங்களை பயமுறுத்த முடியாது. அரசாங்கத்தின் அழைப்பினை நிராகரித்து இன்று அவர்களுக்கு பெரும் தலையிடியைக் கொடுத்திருக்கின்றோம். அவர்கள் நினைப்பது போன்று எங்களை விலைகொடுத்து வாங்க முடியாது. முஸ்லிம் மக்கள் தந்த அமானிதத்தை காப்பாற்றுகின்ற போராட்டத்தில் ஒரு துளியளவும் பின்வாங்க மாட்டோம் என்றார்.

இந்தக் கூட்டத்தில் அரசாங்கத்திற்கு சார்பாக பேசுவதற்கு தலைப்பட்ட சிலருக்கு கலந்து கொண்டவர்கள் கோசம் எழுப்பி அவர்களை பேசவிடாமல் தடுத்த சம்பவங்களும் இங்கு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :