அரசாங்கத்தின் அராஜக செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மக்கள் நலன் சார்ந்த ஜனநாயக அரசியலை முன்னெடுக்கக்கூடிய ஆளுமை ஐ.தே.க.வுக்கே இருக்கின்றது. இனவாதிகளை வேரறுத்து நாட்டை ஐக்கிய பாதையில் இட்டுச் செல்ல ஐ.தே.க. வாலேயே முடியும் என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி. இராஜதுரை தெரிவித்தார்.இது தொடர்பில் இராஜதுரை மேலும் கருத்து தெரிவிக்கையில்;
இலங்கையில் ஆட்சி புரியும் தற்போதைய அரசாங்கம் நாட்டில் முரண்பாட்டுச் சூழ்நிலைகளை மேலெழும்பச் செய்திருக்கின்றது. சகல மக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக மலையக மக்கள் குறித்து அரசாங்கம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே செயற்படுகின்றது. வரவு செலவு திட்டத்தில் மலையக மக்கள் நலன் சார்ந்த விடயங்கள் எதுவும் இல்லை.
நான் இதனை அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கூறியும் எதுவித பயனும் இல்லை. மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைத்தல், விலையேற்றத்தினை குறைத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்த போதும் சாதக பதில்களை அரசாங்கம் வழங்கத் தவறி இருக்கின்றது.
1978 முதல் ஜனாதிபதி ஆட்சி முறை இருந்து வருகின்றது. 1978 - 1993 ஆம் ஆண்டுகளுக்கிடையில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படாத போதும் மலையக மக்களின் பாரிய பிரச்சினையாக இருந்த பிரஜாவுரிமை பிரச்சினை இக்காலப்பகுதியிலேயே தீர்த்து வைக்கப்பட்டது.
1994 இல் ஆட்சிக்கு வந்த சந்திரிகா மலையக மக்கள் நலன் கருதி பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்தார். தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினை ஏற்படுத்தி மலையகத்தின் அபிவிருத்திக்கு வலுச்சேர்த்தார். மலையக மக்களின் அபிவிருத்தி கருதி பத்தாண்டு தேசிய வேலைத் திட்டம் ஒன்றையும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தார். மின்சார வசதிகளை தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு சந்திரிகா பெற்றுக்கொடுத்து உதவினார்.
இந்நிலையில் பின்னர் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மஹிந்த சிந்தனையில் மலையக மக்களின் நலன்கருதி பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கப் போவதாக தெரிவித்திருந்தார். எனினும் காத்திரமான வேலைத் திட்டங்கள் எதுவும் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை. வாக்குறுதிகள் அனைத்தும் பொய்த்துப் போயுள்ள நிலையில் இன்றைய அரசாங்கம் மலையக மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நோக்குகின்றது.
இதற்கு அரசாங்கத்தில் உள்ள இனவாத கட்சிகளின் ஆதரவு பெரும் பலமாக இருந்து வருகின்றது.
அரசாங்கத்தின் பிழையான செயற்பாடுகளை பொறுத்துக் கொள்ள முடியாது அக்கட்சியின் முக்கிய அமைச்சர்கள் உட்பட மேலும் பலர் வெளியேறிய வண்ணமுள்ளனர். இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணிலும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றினை ஏற்படுத்தும் நிலைக்கு வித்திட்டுள்ளனர்.
ஐ.தே. கட்சி மலையக மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான காணி மற்றும் வீட்டுரிமை குறித்த விடயங்கள் தொடர்பாக சாதகமான பதிலினை எமக்கு வழங்கி இருக்கின்றது.
அரசியல் நடவடிக்கைகள் குறித்து நாம் தீர்க்கமாக சிந்திக்கவும் செயற்படவும் வேண்டியுள்ளது.
இந்நிலையில் கட்சி அரசியல் சுய இலாபங்களுக்காக மலையக மக்களை அரசிடம் அடகு வைக்கும் செயற்பாடுகளில் எமது தொழிற்சங்க தலைமைகள் ஈடுபட்டு வருகின்றமை வருந்தத்தக்க விடயமாகும். மலையக மக்களுக்கு சுபீட்சமான வாழ்க்கையினையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தக் கூடிய ஆளுமை ஐ.தே.க.விற்கே உண்டு என்றார்.
0 comments :
Post a Comment