ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கமா அல்லது மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கமா என்பதை விடவும் யார் முஸ்லிம்களை பாதுகாக்கப் போகின்றனர் என்பதே எமது கேள்வியாகும். இருவரினதும் தேர்தல் விஞ்ஞாபனங்களைப் பொறுத்தே எமது இறுதித் தீர்மானம் அமையும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக கட்சியின்
உயர்பீடக் கூட்டம் நேற்று இடம்பெற்றது.
பம்பலப்பிட்டி சிலோன் சிட்டி ஹோட்டலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்றுக்காலை இந்தக் கூட்டம் ஆரம்பமானது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் என கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் இக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். சுமார் ஐந்து மணி நேரம் நீடித்த இக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
உயர்பீடக் கூட்டத்தின் தீர்மானங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவிக்கையில்;
ஜனாதிபதித் தேர்தலில் பல திட்டமிடாத மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் சிந்தித்து சரியானதும் முஸ்லிம் மக்களை பலப்படுத்தக் கூடியதுமான முடிவுகளையே எடுக்கும். இன்று எமது கட்சி உயர் பீடக்கூட்டத்திலும் பல்வேறு விடங்கள் குறித்தும் சாதகமான காரணிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவா அல்லது பொது எதிரணியினரா என்பதை விடவும் முஸ்லிம் மக்கள் தொடர்பிலும் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு தொடர்பிலும் அக்கறையும் அதற்கான வேலைத் திட்டத்தினையும் மேற்கொள்ளும் ஒருவருக்கே எமது ஆதரவு வழங்க வேண்டும்.
மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்த போது பல கொள்கைத் திட்டத்தினை நாம் முன்வைத்திருந்தோம். அவற்றில் சில நிறைவேற்றப்பட்டும் பல விடயங்கள் இன்னமும் இழுபறி நிலையிலும் உள்ளன. எனவே, இப்போதும் நாங்கள் எமது நிலைப்பாட்டில் உறுதியாகவே உள்ளோம். எமது இலக்கு முஸ்லிம் சமூகத்தினை பிரதிபலிப்பது மட்டுமே ஆகும். ஆகவே, இரு சாராரும் முன்வைக்கும் தேர்தல் விஞ்ஞாபனங்களைப் பொறுத்தே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது இறுதித் தீர்மானத்தினை எடுக்கும்.
மீண்டும் கட்சியின் உயர் மட்டக்குழு கூடி சாதகமான தீர்மானமெடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment