முஸ்னீ இப்னு முகம்மது நாபி-
மருதமுனை நூர் ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகிகளின் ஏற்பாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தயாரித்துள்ள அல்-குர்ஆன் மத்ரஸாக்களுக்கான மக்தப் பாடத்திட்டைத்தைப் போதிப்பதற்கான மக்தப் நிலையத்தை 'ஸஹ்றா மக்தப்' என்ற பெயரில் இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.
நூர் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் அப்துல்லாஹ் சேர் அவர்களின் தலைமையில் அண்மையில் மக்தப் விடயமாக கூடிய பள்ளிவாசல் நிர்வாக முக்கியஸ்தர்கள் மக்தப் நிலையத்தை வெற்றிகரமாக செயற்படுத்த அல்-ஹாஜ் ஏ.எல்.எம். கமர்தீன் அவர்களை தலைவராகவும், ஜனாப் எம்.எல்.எம். ஜமால்தீன் அவர்களை செயலாளராகவும், அல்-ஹாஜ் யா. இப்றாஹீம் அவர்களை பொருளாளராவும் தெரிவுசெய்துள்ளார்கள்.
மேலும் மக்தப் நிலையத்தின் காரியாலயம் நூர் ஜூம்ஆ பள்ளிவாசல் முன்னாலுள்ள அதனது கட்டடத்தில் தற்போது செயற்பட்டு வருகின்றது. காரியாலய நேரம் மாலை 6.30 தொடக்கம் இரவு 8.30 மணி வரையாகும்.
தற்போது 'ஸஹ்றா மக்தப்' (அல்-குர்ஆன் மத்ரஸா) நிலையத்தில்; இணைந்துகொள்வதற்காக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. சேர்வுக் கட்டணமாக ரூபா 1,500ஃஸ்ரீ அறவிடப்படுகிறது. பிள்ளைகளுக்கான சீருடை, மக்தப் புத்தகம், ஏனைய கற்பித்தல் சாதனங்களின் செலவுகளுக்காக இத்தொகை பயன்படுத்தப்படும்.
வயது 05 தொடக்கம் 06 வரையான ஆண் பெண் பிள்ளைகளுக்கு ஆண் முஅல்லிமும், வயது 07 க்கு மேற்பட்ட பெண் பிள்ளைகளுக்கு பெண் முஅல்லிமாவும், ஆண் பிள்ளைகளுக்கு ஆண் முஅல்லிமும் கற்பிக்கவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காலத்தின் தேவையை அனுசரித்து வகுத்த ஒரு முயற்சியே அல்-குர்ஆன் மத்ரஸாக்களுக்கான மக்தப் பாடத்திட்டமாகும்.
சிறு பராயத்திலிருந்தே எமது பிள்ளைகள் அல் குர்ஆன் மீதும் சுன்னாவின் மீதும் விருப்பம் கொண்டு நல்ல பண்பாடும், கொள்கையுமுள்ளவர்களாக வளரச் செய்ய வேண்டுமென்ற உயர் நோக்கமொன்றை முன்வைத்தே இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
எனவே தங்களது பிள்ளைகளையும் 'ஸஹ்றா மக்தப்' இல் சேர்த்துக்கொள்ள விரும்பினால் உடனடியாக நூர் பள்ளிவாசல் கட்டடத்தில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் மக்தப் அலுவலகத்திற்கு மேற்குறிப்பிடப்பட்ட
காரியாலய நேரத்திற்கு வருகைதந்து உடனடியாக தங்கள் பிள்ளைகளையும் இணைத்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது பள்ளிவாசல் மற்றும் மக்தப் நிர்வாகம்.

0 comments :
Post a Comment