மாதாந்தம் பௌர்ணமி தினத்தில் நடைபெறும் வலம்புரி கவிதா வட்டத்தின் (வகவம்) கவியரங்கு கடந்த பௌர்ணமி தினத்தன்று கொழும்பு அல் ஹிக்மா கல்லூரில் கவிஞர் பிரேம்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இது வலம்புரி கவிதா வட்டத்தின் பதினோராவது கவியரங்காகும்.
மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் அல்ஹாஜ் எம்.எம்.முஹம்மத் பிரதம அதிதியாக கலந்து வகவக் கவியரங்க நிகழ்வினைச் சிறப்பித்தார்.
வாசிக்கப்பட்ட கவிதைகளை விதந்துரைத்த மேலதிக ஆணையாளர் தானும் ஒரு சிறந்த மரபுக் கவிஞர் என்பதை நிரூபித்து சபையின் பாராட்டினைப் பெற்றுக் கொண்டார். தான் ஏகலைவனாக இருந்து கவிதையை பயின்றபோது அதற்கு துரோணாச்சாரியர்களாக இருந்த பலர் சபையிலே வீற்றிருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்வதாகவும் குறிப்பிட்டார்.
தனக்கு சந்தக் கவிதையிலேயே ஆர்வம் அதிகமிருப்பதாகக தெரிவித்ததோடு தனது குழந்தை நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் இருந்தவேளை முதலாவது பிறந்தநாளைக் கொண்டாடும்வரையாவது அது உயிர்வாழுமா என்று கண்ணீரும், கம்பலையுமாக அக் குழந்தைக்காக தான் எழுதிய கவிதையை சபைக்கு சொல்லிக் காட்டியபோது மேலதிக ஆணையாளரின் கண்கள் மட்டுமல்ல சபையோரின் கண்களும் பனித்தன. அக் குழந்தை இறையடி சேர்ந்ததாக குறிப்பிட்டபோது சபையின் கவலை அதிகரித்தது. பழம் பெருங் கவிதைகளையும் அனாயாசமாக அவர் குறிப்பிட்டது அவரது கவிதா ஆளுமையையும், ஈடுபாட்டையும் வெளிப்படுத்தின.
தேர்தல்கள் சட்டம் பற்றியும் சில தகவல்களை சபைக்குச் சொல்ல அவர் தவறவில்லை.
வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் நெறிப்படுத்திய நிகழ்வில், செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கவிஞர்கள் கலைவாதி கலீல், மேமன்கவி, ரவூப் ஹசீர், சமூக ஜோதி ரபீக், இளநெஞ்சன் முர்ஷிதீன், உடத்தலவின்ன மலைத்தேனீ அப்துர் ரஹ்மான், சங்கர் கைலாஷ், எஸ்.தனபாலன், தம்மா, எஸ்.ஜனூஸ், கிண்ணியா அமீர் அலி, நாச்சியாதீவு பாத்திமா ரினோஸா,;, எம்.ஏ.எம் ஆறுமுகம், கவிக்கமல் ரஸீம், ஈழகணேஷ், மட்டக்களப்பு லோகநாதன், வெளிமடை ஜஹாங்கீர், ஆகியோர் கவிதை பாடினர். அண்மையில் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்ட கலைஞர் நவாஸ்தீனும் தனது சக்கர நாற்காலியில் வந்து கவிதை பாடினார்.
அது போன்றே நோயினால் பீடிக்கப்பட்டிருக்கும் வகவ ஸ்தாபக உறுப்பினர் காத்திபுல் ஹக் எஸ்.ஐ.நாகூர் கனி வீட்டிலிருந்தவாறே வகவ ஏற்பாடுகளை கவனித்துவிட்டு தனது நோய் குறித்த ஒரு உருக்கமான கவிதையையும் அனுப்பி வைத்திருந்தார். அதுவும் சபையில் வாசிக்கப்பட்டது.
பிரபல மலையக எழுத்தாளரும், இந்தியாவில் விருது பெற்றவருமான அந்தனிஜீவா, பாரதி கலா மன்றம் த.மணி, மனிதநேயன் இர்ஷாத் ஏ.காதர், பிரபல பாடகர் எம்.எம்.பாஸில். முல்லை முஸ்ரிபா, பிரபல நாடகக் கலைஞர் ஜோபு நசீர், யூ.எம்.பக்குர்தீன், கம்மல்துறை இக்பால் போன்றோரும் சபையை அலங்கரித்தனர்.
டிசம்பர் மாத கவியரங்கத் தலைவராக செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் அறிவிக்கபட்டதோடு, ஜனவரி மாதம் நடக்கும் ஆண்டுவிழா கவியரங்;கை காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமை ஏற்று நடாத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment