முஹம்மது றினாஸ்-(அவதானி)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்கப் போகிறது என்பது இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் படாத நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு ஆதரவளிக்க வேண்டும் என்ற வினா தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி இருக்கின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் எத்தைகைய முடிவை எடுக்கப் போகின்றது என்பதனை விட முஸ்லிம் காங்கிரசின் முடிவினை காலங்காலமாக தாரக மந்திரமாக நம்பி வந்த முஸ்லிம் காங்கிரசின் போராளிகள் தாங்கள் இந்த தேர்தலில் யாருக்கான ஆதரவை அழிப்பது என்பதை ஏற்கனவே தீர்மானித்து விட்டு கட்சியின் முடிவு எவ்வாறு அமையப் போகிறது என்பதை அவதானித்துக் கொண்டிருகின்றமை வெள்ளிடை மலை.
முஸ்லிம் காங்கிரசின் போராளிகள் என்ன முடிவை எடுத்திருக்கிறார்கள் என்பதை இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த ஆதரை பெற்ற கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம் உட்பட கட்சியின் உயர்மட்டமும் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களின் போது எடுத்த முடிவுகளுக்கு எல்லாம் கட்சியின் போராளிகள் எந்த வித எதிர்ப்பையும் வெளியிட்ட வரலாறு கிடையாது. கடந்த கிழக்கு மாகாண சபை ஆட்சியை தீர்மானித்த விடயத்திலும் தலைமை எடுத்த முடிவை ஏற்றுக்கொண்ட கட்சியின் போராளிகள் கட்சிக்கும் தலைமைக்கும் தங்களுடைய விசுவாசத்தை காட்டியது எளிதில் மறக்கக் கூடிய ஒன்றல்ல.
எனினும் இன்று அரசியல் களநிலைகள் முற்றிலும் மாறி நிற்கின்ற இந்த தருணத்தில் இந்த தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்க வேண்டுமென்ற முடிவினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை எடுக்காமல் இருப்பது நகைப்புக்குரியது.
வெறுமனே மத்திய குழுக்களுடனும், உயர்பீட உறுப்பினர்களினதும் கருத்துக்கள் முழு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களது கருத்துக்களாக அமைய மாட்டாது. கட்சிக்கு வாக்களித்த, வாக்களிக்கின்ற போராளிகளினது ஒட்டுமொத்த கருத்துக்களுக்கும் கட்சியும் தலைமையும் மதிப்பளிக்க வேண்டும்.
எனவே இந்த கட்சியை பல்வேறு தேர்தல்களிலும் வாக்களித்து காப்பாற்றிய கட்சியின் போராளிகள் தான் இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தூண்கள் என்பதனை மறந்து கட்சியும் தலைமையும் வேறு ஒரு முடிவினை எடுகின்ற போது, தூண்கள் இல்லாத கட்டிடத்தின் நிலையே எதிர்காலத்தில் இந்த கட்சியின் நிலை என்பதை மறுக்கமுடியாது...

0 comments :
Post a Comment