அரசாங்கத்தை வீழ்த்தும் பொது எதிரணியில் சிங்கள மக்களை போல் தமிழ், முஸ்லிம் மக்களையும் நம்பியே களமிறங்குகின்றோம். பொதுஎதிரணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எம்முடன் கைகோர்க்க வேண்டும் என தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி எமது அரசாங்கத்தில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படும் எனவும் குறிப்பிட்டது.
பொது எதிரணிக் கூட்டிற்காக தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா? இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் பொது எதிரணி என்ன செய்யப் போகின்றது என்பன தொடர்பில் வினவிய போதே ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
அரசாங்கத்தின் மீதான அதிருப்தி சிங்கள மக்களுக்கு இருக்கின்றது. ஆனால், அதைவிட அதிகமான வெறுப்பும் அதிருப்தியும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கே இருக்கின்றது. அவர்கள் ஒரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தை ஆதரிக்கப் போவதில்லை. இன்று வடக்கு கிழக்கில் இடம்பெறும் அடக்கு முறைகளும் இனவாதச் செயற்பாடுகளும் முற்றிலும் அரசாங்கத்தினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. இவற்றில் சிக்கித் தவிக்கும் சிறுபான்மை மக்கள் இனியும் இந்த அரசை ஆதரிக்கப் போவதில்லை.
தமிழ் - முஸ்லிம் மக்களையும் நம்பியே நாம் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் களமிறங்கியுள்ளோம்.
வெறுமனே சிங்கள மக்களின் வாக்குகளையும் ஆதரவையும் நம்பி அரசாங்கம் கூட செயற்படுவதில்லை. சிறுபான்மை மக்களின் வாக்குகளும் கட்டாயமானது. எனவே, தற்போது நாம் உருவாக்கியுள்ள பொது எதிரணியில் சகல மக்களையும் சகல கட்சிகளையும் உள்வாங்குவோம். சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவும் ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமன்றி ஜே.வி.பி., ஹெல உறுமய, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என அனைவரினதும் ஆதரவினை எதிர்பார்க்கின்றோம். அனைவரினதும் கொள்கைகளும் கோரிக்கைகளும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
அதே போல் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்த அரசு நாடகமாடுகின்றது.யுத்தம் முடிவடைந்து அதன் பின்னர் வட மாகாண சபைத் தேர்தல் நடந்தும் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்றும் இதுவரையில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு இந்த அரசாங்கத்தினால் முன் வைக்கப்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி 2004 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் செய்து நாட்டில் இனப்பிரச்சினையினை முடிவிற்கு கொண்டுவர முயற்சித்திருந்தது. ஆனால், இந்த அரசாங்கம் யுத்தத்தின் பின்னரே வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பினை பலப்படுத்தியுள்ளது. எனவே, தமிழ் மக்கள் யதார்த்தம் என்னவென்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் இந்த நாட்டில் ஜனநாயகத்தினை கட்டியெழுப்பவும் மனித உரிமைகளை பாதுகாக்கவுமே முயற்சிக்கின்றோம். இந்த பட்டியலில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு நிச்சயம் இடமுண்டு. இதனை பெற்றுக்கொள்ள தமிழ் மக்கள் எம்முடன் கைகோர்க்க வேண்டும். அதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இனியும் முஸ்லிம் மக்களை ஏமாற்றாது சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். இனியும் அரசுடன் கூட்டு சேர்ந்தால் ஒரு முஸ்லிம் வாக்கேனும் உங்களுக்கு கிடைக்காது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment