நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முஸ்லிம் மக்கள் அனைவரும் தமது பூரண ஆதரவை வழங்குவர் என தெரிவித்த பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல். ஏ.எம். ஹிஸ்புல்லா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் தனது ஆதரவை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பிரசியமைச்சர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
வடக்கு மற்றும் கிழக்கில் காணப்பட்ட பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்து பாரிய அபிவிருத்திகளை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கும் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுகின்றது.
தமிழ் முஸ்லிம் மக்கள்
அதாவது கடந்த காலத்தில் புலிகளுடன் போரில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது தேர்தல் இடம்பெற்றது. இதன்போது பெரும்பாலான தமிழர்கள் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்தனர். ஆனால் தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கிழக்கில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமது பூரண ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்குவர்.
மேலும் அண்மையில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் கிழக்கில் உள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ்
இதேவேளை முஸ்லிம் கட்சிகள் பல ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க உள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரசும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0 comments :
Post a Comment